மரணத்திற்கு பின்

------- என் மரணத்திற்கு பின் --------

நான் இறந்த பிறகு
எனக்கு சவப்பெட்டி செய்யும்
பணத்தில்
கூரையில் பொத்தல் விழுந்த
குளியலறைக்கு
கதவுகள் செய்து கொடுங்கள்.

பெண்ணின் மானத்தைவிட
ஒரு பிணத்தின் மரியாதை
அவசியமற்றது.

பூழுவரிக்கும் என் பிணத்திற்கு
பொன்மாலைகள் வேண்டாம்...
தீத்தெரிக்கும் கவிதைகள்
தினம் எழுதுவீர் தோழா

தோழர்களே !
என் முடிவுக்குப்பின்
முடங்கிவிடாதீர்கள்
முன்னேறாமல்
அடங்கிவிடாதீர்கள்.

சமூக மாற்றம் ஒன்றே
நம் குறிக்கோள்
அதை நிகழ்த்துவோர்
நம் குருப் போல்....

கொள்ளிக்கட்டையை என்
பிள்ளையிடமிருந்து
பிடுங்குங்கள்...
தந்தை தாய் இல்லை என்போர்
எல்லாம் நம் பிள்ளைகள்.

மரண செய்தி கேட்டு
விரைந்து வரும்
வீரிய தோழர்களே!
எடுக்கப்பட்ட என்
கருவிழிகள் இரண்டும்
கண் பார்வையற்ற
நம் சகோதரர்க்காக
கொடுக்கப்பட்டதா? என்பதை
கொஞ்சம் கவனியுங்கள்.

உபயோகப்படும்
உறுப்புகள் அனைத்தும்
எடுக்கப்பட்டதா?
உறுதி செய்யுங்கள்....

அடித்தட்டு மக்கள் நலனுக்காக
அறவழியில் போராட
என் பிணம் தேவைப்பட்டால்
போக்குவரத்துக்கு இடையுரின்றி
போராடுங்கள் தோழர்களே !

என் சவத்தை வைத்து
சாலை மறியல்
செய்து விடாதீர்கள்.

மருத்துவமனையை நோக்கி
கர்ப்பிணி தாய் ஒருத்தி
போய் கொண்டிருக்கலாம்
போராளியை பிரசவிக்க....

---- தமிழ்தாசன் ----

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (23-May-12, 12:03 am)
பார்வை : 317

மேலே