எழுதுங்கள் ஒரு காதல் கடிதம்.

----எழுதுங்கள் ஒரு காதல் கடிதம்-----

எளிய தமிழில்
ஒரு குட்டி கவிதை எழுதி,
வார்த்தைகளை வைத்தே
உன்னை அள்ளி நெஞ்சோடு
புதைத்து கொள்ளும் வசதி,
சில வரிகள் ரத்தம் கலந்து,
ஒரு முத்தம் வரைந்து,
சீரான இடைவெளியில்
எழுத்துக்கள் அமைத்து,
ஆடைகட்டியிருக்கும் சில
அந்தரங்கம் அவிழ்த்து,
நேரில் தர இயலாத
நெருக்கடி பதில்கள் நிறைத்து,
தேவைக்கு மீறிய
தேர்வெழுதும் கவனம் கொடுத்து,
இடபற்றாக்குரையால்
முகவரி நிரப்பும் கோட்டிற்கு கீழே
முளைத்திருக்கும் நலம் விசாரிப்பு,
தாய் தந்தை பார்வையில்
தபால்
பட்டுவிடக்கூடதென்ற
பரிதவிப்பு,
ஒரு ஓவியனுக்குள்ளிருக்கும்
அவஸ்தை,
பாதி கவிஞனாகிவிட்ட
பரவசம்,
அங்குலம் அங்குலமாக
அகநானூறு பாடல்கள்
அத்தனையும்
ஒரு உரையில் அடக்கி
காதல் பரப்பிய பிறகும்
இன்னும் சொல்லாத பிரியமாய்
ஒரு பிரபந்தம் மிச்சமிருக்கும் உணர்வு,
இன்று
அபத்தமாகிப் போன
அன்பே, ஆருயிரே ,
கண்ணே, கண்மணியே
உலகே, உயிரே
நாயே, பேயே என
கொஞ்சல் மொழி
அஞ்சல் அனுப்பும்
அந்த ஆனந்த சுகம்
அழைப்புக்கு
ஐந்து பைசாவாகிப் போன
அலைபேசியில்
அணுவளவும் கிடைப்பதில்லை.

தாஜ்மகாலை விட
தபால்காரன் தரும்
இந்த சின்ன
காதல் கடிதங்கள்தான்
உலக காதல் சின்னம்.
இதழ் முத்தத்திற்கு
இணையானது
இந்த காதல் கடிதம்
கொடுப்பதிலும் சரி
வாங்குவதிலும் சரி.
இளைய இதயங்களே !
இனியேனும்
எழுதுங்கள் ஒரு காதல் கடிதம்.

---தமிழ்தாசன்---

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (30-May-12, 8:54 pm)
பார்வை : 368

மேலே