அன்பே சௌக்கியமா

தேன் மலரே தென்றலை
கொஞ்சம் என்னிடம்
அனுப்பிவிடு
இவளிடம் தூது
செல்ல வேண்டும்

மாடத்தில் ஜோடியுடன்
கொஞ்சும் காதல் புறாவே
கீழே பறந்து வந்துவிடு
உன் கால்களில் கட்டி
கடிதம் ஓன்று அனுப்ப வேண்டும்

நலம் , நலம் அறிய அவா
வேறு என்ன எழுதுவது ?

தென்றலே தோள்வழியே வந்து
என்ன உற்றுப் பார்க்கிறாய்
நீ மலரிதழில் எழுதாதையா
நான் எழுதிவிடப் போகிறேன்

வெண்புறாவே
டொர் டொர் என்று
என்ன ஓசை செய்கிறாய் ?
என் காதல் கவிதையை
கலைக்கிறாய்
சற்று பொறுமையாய் இரு

பெட்ரோல் விலை உயர்வு
அரசியல் வீழ்ச்சி
அவளுக்கு அறவே பிடிக்காது
தேன் மலரே மான் விழியே
பூந் தென்றலே...
பழைய பாடல் இலக்கியம்
வேண்டாம் என்பாள்
ஜீன்ஸ் சிங்காரியே என்றல்
கேலி என்று அடிக்க வருவாள்

என்னடா கண்ணா எழுதற
யாருக்கடா கடிதம்
கவிதை அதுவும்
உப்பு சப்பில்லாத
உரை நடை கவிதை ---அவள் !

யாப்பில் தரவோ தேவி

யாப்பும் வேண்டாம்
காப்பும் வேண்டாம்
காணாததிற்கு தென்றலும்
புறாவும் தூது --அய்யோடா
மின் அஞ்சல் எஸ் எம் எஸ்
காலத்தில் காகிதக் கவிதையா

அன்பே சௌக்கியமா
அடுத்த நாள் வரட்டுமா
என்று செய்தி அனுப்பக்
கூடாது ?
கவிதையை மற
அல்லது என்னை மற

இறைவா இது என்ன சோதனை
கவிதை என் முதல் காதல் அல்லவா

கற்பனை காதலியை கட்டியணைத்து
முத்தமிட்டுக் கொண்டிரு
நான் வருகிறேன் GOOD BYE

தென்றலே காதல் புறாவே
நன்றி
சென்று வாருங்கள்
ஒரு சிறு காதல் ஊடல் இடைவேளை

உயிரோடும் உணர்வோடும் உள்ளத்தோடும்
உறவாடும் உன்னை மறந்து
வெற்றுக் காகிதம் ஏதுக்கடி
விட்டெறிந்து விட்டேன்

நில் காதலியே சிநேகிதியே தோழியே நில்
அன்பே சௌக்கியமா ?
இப்பொழுதே வரட்டுமா ?

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (31-May-12, 10:23 am)
பார்வை : 749

மேலே