[252 ] துலங்கிடும் பாரதம் துவங்கிடப் புரட்சி செய்!

போரடிக்கும் மாட்டுக்குப்
போடுகிறோம் வாயுறை
புரட்டரின் ஊழலுக்குப்
போடோமோ கையுறை!

பாரத மாமணி
பாதரசம் ஆனதேன்?
பாழ்பட மண்ணிலே
வீழ்ந்துமே அழிவதேன்?
அள்ளிடப் போகுமோ?
அவலமும் தீருமோ?

உலகமய மாக்கலில்
உன்னைநீ அழிக்கவோ ?
கலங்கிடும் புத்தியால்
‘காலனி’ ஆகவோ?

மழையினை நம்பியே
மண்ணுமே இருக்கலாம்!
களையினை நம்பியே
கதிருமே பிழைக்குமோ?

அந்நியப் பொருள்,வர
அனுமதி கொடுக்கவோ?
உன்னிலத் துழைப்பவர்
உரிமையைத் தடுக்கவோ?

ஆனையை வைத்துதான்
ஆனையைப் பிடிக்கிறொம்;
ஆசையை வைத்தலோ
அவர்நமை ஆள்கிறார்!

பொருள்வழி வாழ்க்கையைப்
பூசனை செய்வையோ?
புரட்டர்கள் கைகளில்
புழுவென மடிவையோ?

அந்நியப் பொருட்களை
இன்னுமா விரும்புவாய்?
உன்னிலப் பொருட்களை
உதறியோ வளருவாய்?

உள்நுழை பொருட்களால்
உனதுநா டழியவோ?
இந்நிலத் துள்ளவர்
ஏழ்மையில் தவிக்கவோ?
பொன்னிலப் பயன்களை
பிறர்க்கென அனுப்பவோ?

துலங்கிடும் பாரதம்
துவங்கிடப் புரட்சிசெய்!
இலங்கிடும் பொருள்களை
இந்தியர்க் காக்கிடு !
இனிவரும் சந்ததி
எழுந்திட உதவிடு!
-0-

எழுதியவர் : எசேக்கியல்காளியப்பன் (11-Jun-12, 12:02 pm)
பார்வை : 225

மேலே