முகப்பு!

முகப்பு! என்னும் தலைப்பில் கவிவேந்தர் கா.வேழவேந்தன் அவர்களின் இனிய கவிதை.

”மின்னல்களே மழைமேக முகப்பு! துள்ளும்
வெள்ளலைகள் கடற்கிழவன் முகப்பு! வீட்டின்
சன்னல்களே இல்லஒளி முகப்பு! கீழைச்
செவ்வானம் விடியலுக்கு முகப்பு! மங்கைக்
கன்னத்தின் முத்திரைகள் காதல்வாழ்வுக்
கற்கண்டுக் காவியத்தின் முகப்பு! சோழப்
பொன்மகளின் காவியமாம் ‘சிலம்’போ தூய
புகழ்பாடும் தமிழ்க்கற்பின் முகப்பே என்பேன்! 1

கல்வெட்டே வரலாற்றின் முகப்பு! வேகக்
கடிகாரம் காலத்தின் முகப்பு! நல்ல
நெல்விளைச்சல் வளவாழ்வின் முகப்பு! தோயா
நேர்உழைப்பே வெற்றிக்கு முகப்பு! நூலின்
கல்வியொன்றே அறிவுக்கு முகப்பு! பாழும்
கர்வந்தான் வீழ்ச்சிக்கே முகப்பு! பண்டைத்
’தொல்காப்பி யப் பெருநூல்’ தமிழர் வாழ்வின்
சுடர்க்கொள்கை முகப் பென்றால் தவறும் உண்டா? 2

மாம்பூக்கள் இளவேனில் முகப்பு! சூடும்
மாலைகளே இல்வாழ்வின் முகப்பு! சேர்ந்து
கூம்பும்கை அடக்கத்தின் முகப்பு! வீழும்
குளிர்அருவி மலைப்பெண்ணின் முகப்பு! வந்து
தேம்புகின்ற விழிநீரோ நெஞ்சத்துள்ளே
தேக்கிவைத்த துயரத்தின் முகப்பு! நாளும்
நாம்போற்றும் திருக்குற ளோஅகிலத் திற்கே
நமைக்காட்டும் முகப் பென்பேன்! மறுப்போர் உண்டா?” 3

ஆதாரம்:’தமிழ் மாருதம்’ திங்கள் இதழ், சனவரி, 2005

எழுதியவர் : கவிவேந்தர் கா.வேழவேந்தன் (8-Jul-12, 5:51 pm)
பார்வை : 216

மேலே