கள்ளி - இவளும் என் காதலி ..!

கள்ளுண்டதாய் மதிகெட்டே - அவள்
காதலை ஏற்றுக் களித்தேன்
கொள்ளென்று கூடிக் கிடந்தாள் - அவள்
கொஞ்ச மயங்கிக் கிடந்தேன்
தள்ளென்று தள்ளி விழுத்தி - தரை
தன்னில் படுத்திக் களித்தாள்
அள்ளென்றுஅள்ளி சுவைத்தாள் - எந்தன்
ஆளுமை தன்னை அழித்தாள்

என்னென்று சொல்வேன் அவளை - எனை
என்றுமே கூடிப் பிரியாள்
தன்னையே என்னிடந் தந்தாள் - அல்ல
தன்னிலே என்னைக் கலந்தாள்
பொன்னென்றே ஏதும் விரும்பாள் - நான்
போகும் இடமெங்கும் வந்தாள்
புன்னகை செய்திட்டு நின்றார் - பலர்
போனபின்போ புறஞ் சொன்னார்

நன் மனையாட்டியின் முன்னே - எனை
நாணமின்றித் தொட்டு நின்றாள்
என்னஇது என்றுகூறி - சதி
என்னை வெறுத்திடச் செய்தாள்
அன்னை யெனும் பாசம் விட்டு -எனை
ஆகத் தனிமை யென்றாக்க
முன்னைபின்னை யெந்தன்மேனி - முற்றும்
மோகக் குறி பதித்திட்டாள்

காதலில் மாபெரும் கள்ளி - எவர்
காணாமல் என்னுள் கலப்பாள்
மோதலென் றேதுமே யில்லை - என்னை
மெல்லென மோகத்தில் கொன்றாள்
போதுமடி என்று சொன்னால் - இல்லை
போதாதென் றேசுகம் கொள்வாள்
சாதல்;வரை வரு வாளோ - உனைச்
சற்றும் விட்டுப்போகே னென்றாள்

காதிலே சொன்னேன் பார் குற்றம் - அந்தக்
காக்கும் கடவுளும் வையும்
ஏதினிப் போதும் விட்டேகு -- என்ன
இல்லை யென்றேஅழு திட்டாள்
பாதியுடல் கொன்று விட்டாள் - இன்னும்
பார்த்துக் கிடக்கின்றாள் என்று
மீதியும் கொல்வா ளறியேன் - என்றன்
மேனி கலந்த நோய் என்பாள்

எழுதியவர் : கிரிகாசன் (14-Jul-12, 5:57 pm)
பார்வை : 208

மேலே