இதுவே கடைசி என்று .. பல முறை

ஒவ்வொரு முறையும்
டாட்டா சொல்லும் வரை
மறந்து போகிறது ..
சொல்ல நினைத்ததெல்லாம்

அரவணைத்த அம்மாவுடன்
அரை குறையாய் அளவளாவி
கை பிடித்து வளர்த்த அப்பாவுக்கு
கைகளில் திணிக்கிறேன் பணமாய்

பக்கத்துக்கு வீடு பாட்டி மரணம்
பகிர்ந்து கொள்ள பல மாதம் ஆகி ..
சொந்தங்களில் நடக்கும் நல்ல நிகழ்வுகள்
நாட்கள் பல கடந்து ... முகங்கள் மாறி

கூட படித்தவன்
கொஞ்சும் குழந்தையை
பார்த்தப்பின் நினைத்தேன்
அவன் திருமணம் முடிந்ததை

நண்பன் கேட்ட பணத்தை
அனுப்பிய நான் - அவன்
வீட்டு நிகழ்வுக்கு போக
முடியாத மன வருத்தம்

விமானத்தில் அமர்ந்து
இருக்கைகள் நனைந்து
போகிறது என் கண்ணீரில்
இதுவே கடைசி என்று .. பல முறை

எழுதியவர் : நெல்லை பாரதி (19-Jul-12, 6:26 pm)
பார்வை : 251

மேலே