தங்கை!

கலைமகள் காப்பு:-

பூவோடு பிறந்து வந்த
====வாசத்தைப் போல என்றன்
நாவோடு பிறந்து வந்த
====நற்றமிழ்த் தாயே! உன்னைப்
பாவோடு வைக்கும் என்னைப்
====பரிவோடு தொடர்ந்து வந்து
சாவோடும் காப்பாய் அம்மா
====செம்மலர்த் தாளே காப்பு!

கவியரங்கத் தலைமை வணக்கம்:-

ஊன்மறை கின்ற மட்டும்
====உவப்புடன் தமிழ்வ ழங்கும்
தேன்துறை எமக்கு ஆகித்
====தான்"துரை" என்றே நிற்கும்
"தாமரை" அவையின் வேந்தே!
====தூய்தமிழ்க் கவிஞன் பாவில்
சாமரம் வீசு கின்றேன்
====செம்மையில் வாழ்க நீயே!

அவையடக்கம்:-

கற்கொண்ட சிலைகள் எல்லாம்
====கருவறைப் புகுவ தில்லை!
புற்கொண்ட பனியும் சிந்திப்
====புவியுமே நனைவ தில்லை!
சொற்கொண்டு அடியன் யானும்
====செய்கவி அதுபோ லேனும்
பொற்கொண்ட நெஞ்சத் தீரே
====பொறுமையில் கேட்பீ ராக!


கவிதை:-

உறவென வருவ தெல்லாம்
====நல்லுற வாகி விட்டால்
துறவெனும் சொல்லே இந்தத்
====தரணியில் ஒழிந்தி ருக்கும்!
கரவென மறைத்து வைக்கும்
====கறவெனக் கறந்து நிற்கும்
உறவுக ளாலே நாளும்
====உளம்நொந்து மடிவார் கோடி!

குழவியாய் வந்து தித்துக்
====குதலைவாய் அசைக்குங் காலை
குழலொடு வீணை யாழும்
====கசக்குதென் றுரைக்கும் தந்தை
வளர்ந்துநாம் வாலி பத்தை
====வந்தடைந் திட்ட பின்போ
குளவியாய்க் கொட்டு தென்றே
====காதினைப் பொத்திக் கொள்வான்!

கனியென்று உரைத்து வைத்துக்
====களிமுத்தம் தந்த வாயே
சனியென்று உரைத்து வைக்கும்
====சலிப்பொடும் நோக்கி வைக்கும்!
பனியென்று அணைத்த ணைத்துப்
====பாசத்திற் பிணைத்த மார்பே
பிணியென்று இகழ்ந்து வைக்கும்
====பீடையே எனவும் சொல்லும்!

அழகிய மனையாள் மேனி
====ஆசையின் மிகுதி யாலே
இளகிய இரவில் ஓர்நாள்
====இறுக்கியே அணைத்த வாறு
"அழகமா?" கரிய மேகக்
====கூட்டமா? என்று ரைக்கக்
கலகமே போலக் கையில்
====விழுந்ததே ஐயோ என்பான்!

கருவிலே மாதம் பத்துக்
====கனிவுடன் சுமந்த தாயின்
கருணையின் முன்பு அந்தக்
====கடவுளும் தோற்பான்; நித்தம்
கருவிலே நம்மைத் தாங்கிக்
====கனிமுலை தந்து காத்தும்
கருவறை தேரும் சீரும்
====கேட்காத ஒற்றைத் தெய்வம்,

அவளன்றி ஏதும் இல்லை!
====ஆயினும் அன்னை நம்மைத்
துவளென்று பாதி வாழ்வில்
====சொல்லியே தொலைந்து போவாள்!
கவலென்ற சொல்லே நாளும்
====காணாமற் காத்து நின்று
"அவலமே! வேறு இல்லை
====அவளின்றிப் போனால்" என்ற

வேதத்தை உரைத்து விட்டு
====வாய்மூடிச் செல்வாள்; ஆங்கே
நாதத்தை நடையில் கட்டி
====நளினத்தை இடையில் கட்டிப்
பாதத்தை எடுத்து வைத்துப்
====பருவத்தை உடலில் வைத்து
ஒர்தத்தை வருவாள்; அங்கே
====பலவித்தை அரங்க மேறும்!


வாயோடு வயிறும் காத்து
====வளமையை வாழ்விற் சேர்த்து
தாயோடு மறைவ தெல்லாம்
====தாயாகி கணவ னுக்கு
வாய்க்கின்ற படிக்குக்குச் செய்யும்
====வலியதோர் உறவு என்றே
"தாய்க்குப்பின் தாரம்" என்று
====பழமொழி உரைத்தார்; ஆனால்,


மனைஎன்ற உறவு தானும்
====மலர்பெய்த கட்டில் மீதில்
அணையில்லா காதல் வெள்ளம்
====அனுதினம் பெருகி ஓடி
இணையில்லா இன்ப மெல்லாம்
====இராபல சுகித்த பின்பு
வினையெல்லாம் ஒன்று கூடி
====வந்தாற்போல் விளைவு காட்டும்!


நிதிஎன்ப தின்றிப் போகும்
====நேரங்கள் வந்து விட்டால்
"பதி"யென்று கொஞ்சிக் கொஞ்சிப்
====பால்முத்தம் ஆயி ரங்கள்
பதியென்று சொல்லிச் சொல்லிப்
====பதித்திட்ட மனையாள் பின்பு
"விதி"என்றன் விதியே! என்று
====வாய்கூசா துரைத்து வைப்பாள்!

ஏற்றத்தில் இருக்கும் போது
====ஏத்தியே புகழ்வோ ரெல்லாம்
கூற்றத்தில் வந்து நின்று
====கூடியே அழுவ தில்லை!
மாற்றத்தில் ஏறி டாத
====மலரைப்போல் எவ்வி டத்தும்
நாற்றத்தில் மாறி டாத
====நெஞ்சத்தின் உறவே உறவு!


சேயென இருக்கும் போது
====சேர்ந்துவிளை யாடி நிற்பாள்!
பூயென மலர்ந்த போதும்
====பாசத்தில் மடியில் சாய்ப்பாள்!
நேயனை அடைந்த பின்பும்
====நேசத்தை நெஞ்சில் வைப்பாள்!
தாயினைப் போல என்றும்
====தங்கையே பார்த்தி ருப்பாள்!


"தங்""கை"யாய் இருந்து என்றும்
====தன்வயி றுகாப்ப தாலே
"தங்""கை"யாய் இருந்து என்றும்
====தனக்குத விசெய்வ தாலே
"தங்""கை"யாய் இருந்து என்றும்
====தன்மானம் காப்ப தாலே
"தங்கை"என் றுரைத்தார்; அஃதே
====தலையாய உறவு என்றும்!


(எழுத்து.காம் போலவே இன்னும் பல இணைய தளங்களில் எனது எழுத்துகள் வெளியாகின்றன.

அதிலே ஒரு தளத்தில் அரங்கேறவிருக்கும் ஒரு கவியரங்குக்கு எழுதப்பட்ட கவிதை இது.

ஒரு மனிதனின் வாழ்வில் எத்தனையோ உறவுகள் வருகின்றன. அதிலே எந்த உறவு உன்னதமானது? என்பதே கவியரங்கின் முதன்மைத் தலைப்பு.

தாயில் தொடங்கிப் பல்வேறு உறவுகளையும் முன்னிறுத்தும் உப தலைப்புகளில் நான் தேர்ந்தெடுத்த தலைப்பு "தங்கை என்ற உறவே தலையாய உறவு" என்பதாகும்!

என் உடன் பிறந்த தங்கை "சரஸ்வதி"க்கும்; உடன்பிறவா தங்கை "சத்யாசெந்தில்"க்கும் இக்கவிதை சமர்ப்பணம்)



---------------ரௌத்திரன்

(குறிப்பு:- "தாமரை"-தாமரைச் செல்வன்-கவியரங்கத் தலைவர்; "அழகம்"-கூந்தல்)

எழுதியவர் : ரௌத்திரன் (2-Aug-12, 7:10 am)
சேர்த்தது : ரௌத்திரன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 308

மேலே