ஆடிப் பெருக்கு....

சேற்றுவயல் தனைப்பார்த்து
சூரியனோ மகிழ...
நாற்றுகளின் விளைச்சலிலே
நாமெல்லாம் மகிழ..
ஆற்று வெள்ள நீரினிலே-நாம்
ஆடி வந்து மகிழ...
வேற்றுமையைக் களைந்தெறிந்து
ஒற்றுமையில் மகிழ...


ஆடி மாதம் வந்தவுடன்
அனைவருமே மகிழ...
ஓடிச்சென்று உறவுகளை
கூட்டி வந்து மகிழ...
நாடிவந்த பகைகளைந்து
நட்புடனே மகிழ...
தேடிவரும் உறவுகளை
ஆடி கூடி மகிழ...


காவிரித்தாய் மடியினிலே
கவலையெல்லாம் மறப்போம்...
களிப்புடனே பாடி ஆடி
காதல் கூடச் செய்வோம்...
முழுநிலவின் ஒளியினிலே
முழுமனதாய் அமர்வோம்...
முப்பொழுதும் உணவோடு -பழங்
கதைபேசி மகிழ்வோம்...


காவிரித்தாய் வறண்டு விட்ட
காரணத்தால் இன்று...
கழனியிலே நாற்றுகளின்
நாக்கு வறண்டு போச்சு...
காவிரித்தாய் வருவதற்கு
காலம் இன்னும் ஆகுமோ...?
கழனி போல எங்கள் வாழ்வும்
கருகிப்போக வேணுமா...?


ஆற்றுமணலை திருடி விற்று
ஆற்றுக்கு நன்மை செய்தோம்...
சுற்றியுள்ள மரத்தை வெட்டி
சுற்றுச்சூழல் காத்தோம்...
பாலித்தீன் பையை வீசி
ஆற்றைச் சுத்தம் செய்தோம்...
கழிவுநீரை ஆற்றில் விட்டு
காவிரியை காத்தோம்...


நாங்களெல்லாம் படித்தவர்கள்...
இப்படித்தான் செய்வோம்...
நலமுடனே எங்களை நீ
வாழ வைக்க வேண்டும்...
காவிரித்தாய் காவிரித்தாய்
என்று உன்னை அழைத்தோம் ....இனி
காவிரித்தாய் காவிரித்தாய் என
என்று உன்னை அழைப்போம்...

இன்று......எங்களுக்கு நீ
கைவிரித்தாய் கைவிரித்தாய்....
எங்கு நாங்கள் செல்வோம்.....? தாயே
எங்கு நாங்கள் செல்வோம்.....?..

வருத்தமுடன்..
பசுவைஉமா...

எழுதியவர் : பசுவைஉமா (2-Aug-12, 9:08 am)
பார்வை : 3269

மேலே