அட்டணங்கால்

அட்டணங்கால் அல்லது அட்டணைக்கால் என்றும் சொல்லலாம். ஒரு காலின் மேல் இன்னொரு காலை குறுக்கே அணைத்து வைக்கப்படுவது (அடு + அணை + கால்) அட்டணங்கால் எனப்படுகிறது. அட்டணை என்பது அட்டம் + அணை என்றும் பிரித்து பொருள் கொள்ளலாம். அட்டம் என்பது குறுக்கே என்று பொருள்படும்.

இருகாலையும் மடக்கி, கால்களை நிலத்தோடு நிலமாகப் படிய வைத்து உட்கார்வதை சம்மணம் அல்லது சப்பணம் போட்டு உட்கார்வது என்று சொல்கிறோம். தரையில் உட்கார்ந்த நிலையிலும், ஒரு கால் மடக்கி உட்கார்ந்து அக்காலின் மேல் இன்னொரு காலைக் குறுக்காக மடக்கிப் போட்டு உட்கார்தலும் அட்டணங்கால் எனப்படுகிறது.

"காட்டுயர் அணைமேல் இருக்கவும் பயந்தேன்;
காலின் மேல்கால் வைக்கப் பயந்தேன்;
பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன்;
பஞ்சணை படுக்கவும் பயந்தேன்;
நாட்டிய உயர்ந்த திண்ணைமேல் இருந்து
நன்குறக் களித்துக்கால் கீழே
நீட்டவும் பயந்தேன் நீட்டிப் பேசுதலை
நினைக்கவும் பயந்தனன் எந்தாய்!"

வள்ளலார் பாடிய பிள்ளைச்சிறு விண்ணப்பத்துள் ஒன்று இது.

கால்மேல் கால்போடுதல் அவைக்குப் பொருந்தாத செயல் என்றும், செருக்குக்கு அடையாளமாகவும் யாவராலும் கருதப்படுகிறது. பெரும்பாலும் நம் ஆரம்பகாலத் திரைப்படங்களை காணும்பொழுது, செல்வந்தர்களின் வீட்டு பிறந்த நாள், திருமண வரவேற்பு போன்ற நிகழ்ச்சிகளில் நாட்டியம் அல்லது சங்கீத நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஏற்பாடு செய்த செல்வந்தர் மற்றும் திருமண தம்பதியர் ஆடம்பரமான இருக்கைகளில் அமர்ந்து அட்டணங்கால் போட்டு அமர்ந்தபடி தலையாட்டி ரசித்துக் கொண்டிருப்பார்கள். அந்தப் பெருமைக்கு எடுத்துக் காட்டாக நடிகர்கள் T.K.சண்முகம், எஸ்.வி.ரங்காராவ், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பாலாஜி மற்றும் பலரைச் சொல்லலாம்.

கீழே உட்கார்ந்தும், நாற்காலி மற்றும் ஆடம்பர இருக்கையில் அமர்ந்தும் (சோஃபா), சில சமயங்களில் படுத்த நிலைகளிலும் ஒரு கால்மேல் மற்றொரு கால் போட்டு இருந்தாலும் அட்டணங்கால் என்றே சொல்லப்படும். ’குடும்பம் ஒரு கதம்பம்’ என்னும் திரைப்படத்தில் நடிகர் விசு ஒருக்களித்துப் படுத்தவாறு அட்டணங்கால் போட்டு காலை ஆட்டியபடி பேசிக் கொண்டிருப்பது நகைச்சுவையான காட்சியாகும்.

நான் அரசு ராசாசி மருத்துவமனை கண் பிரிவில் உதவிப் பேராசிரியராகவும், பேராசிரியராகவும் பணிபுரிந்த காலங்களில் பரிசோதனைக்கு வரும் பெரும்பாலோர் இருக்கையில் அமரச் சொன்னதும் அட்டணங்கால் போட்டு உட்கார்வது வழக்கம். அப்படி வருபவர்களில் படித்தவர், படிக்காதவர், இளைஞர், முதியோர் அனைவருமே அப்படி உட்கார்வதில் எந்த வித தயக்கமும் காட்டுவதில்லை.

அவ்வாறு உட்கார்வதில் அவர்கள் கவனம் சிதறுவதாக நான் உணர்வேன். எனவே அவர்களை நேராக கால்களை வைத்துக் கொள்ளச் சொல்லி பரிசோதிப்பது வழக்கம். நோயாளிகளோ, என் கீழ் பணிசெய்யும் ஊழியர்களோ மற்றும் மாணவ மாணவிகளோ அட்டணங்கால் போட்டு உட்கார்ந்தால் நேராக உட்கார்ந்து கவனமாக சொல்வதைக் கேட்க வேண்டும் என்றும் அறிவுறுத்துவேன்.

எனவே அட்டணங்கால் போட்டு உட்கார்வது சௌகர்யம் என்பதைவிட மரியாதைக் குறைவுடன், கவனச் சிதறலும் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே பொது இடங்களில் இரண்டு கால்களையும் நேராக வைத்து உட்கார்வது அவசியம்.

ஆதாரம்: கழக இலக்கியச் செம்மல் புலவர் இரா.இளங்குமரனாரின் ’நட்டணைக் கால்’ கட்டுரை, ‘செந்தமிழ்ச் செல்வி’ தமிழ் திங்கள் இதழ், மே, 1987

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Aug-12, 3:21 pm)
பார்வை : 283

மேலே