நண்பர்கள்

பிறக்கும் எவரும் நண்பர்களாய் பிறப்பதில்லை
பிறந்தப் பின்னும் நண்பர்களாய் மாறுவதில்லை !
இறுதிவரை பலரும் நண்பர்களாய் இருப்பதில்லை
உண்மை நண்பர்கள் என்றும் பிரிந்ததில்லை !

இன்சொல் இன்முகத்தால் ஈர்த்திடும் நண்பர்கள்
இதயத்தால் இணைந்திடும் நாளைய நண்பர்கள் !
மின்னலாய் வந்திடுவர் மின்னஞ்சல் நண்பர்கள்
கைபேசி வழியாய் அழைப்பர் அன்புடனே !

கள்ளம் இல்லா வெள்ளை உள்ளங்கள்
பள்ளிப் பருவத்தின் பால்ய நண்பர்கள் !
கல்லூரி காலத்தில் வண்ணமிகு கனவுடன்
உல்லாச உலாவரும் வாலிப நண்பர்கள் !

அலுவல் பணிதன்னில் உளமகிழ உரையாடி
அன்போடு பழகிடும் பல்வேறு நண்பர்கள் !
பயணிக்கும் நேரத்தில் சயனிக்கும் நேரம்வரை
சிந்தையின் சிதறல்களை பகிர்ந்திடும் நண்பர்கள் !

பொழுதைக் கழித்திட நயமுடன் நகையாடி
பொன்னான நேரத்தை வீணாக்கும் நண்பர்கள் !
நலிவுற்ற நேரத்தில் பொலிவுடன் மீண்டிட
உதிரத்தால் உதவிட்டு உயிர்காக்கும் நண்பர்கள் !

அகமும் புகமும் இருவேறு உருவங்களாய்
வஞ்சமிகு நெஞ்சுடன் வலம்வரும் நண்பர்கள் !
காரியம் நடந்திடும் காலம்வரை உறவாடி
முடிந்தபின் நட்பினை முறித்திடும் நண்பர்கள் !

உதவிகள் செய்தால் உறவாடும் உள்ளங்கள்
உதவிஎனக் கேட்டால் உதறிடும் நண்பர்கள் !
புண்பட்ட நெஞ்சினை பண்பட்ட உள்ளத்தால்
ஆற்றிட உதவிடும் அருமைமிகு நண்பர்கள் !

உள்ளத்தின் ஊற்றுக்களை உளமார பகிர்ந்திட
உதவிடும் உயிரினம் உண்மை நண்பன் !
நானிலம் முழுவதும் நண்பர்கள் பலவிதம்
நாமும் என்றும் அவர்களில் ஒருவிதம் !

என்றும் உங்கள்,

எழுதியவர் : பழனி குமார் (8-Aug-12, 7:59 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 207

மேலே