ஏன் இல்லை மனிதம்
உயரம் எண்ணி
துயரும் பறவை இல்லை
ஆழம் எண்ணி
அஞ்சும் மீன் இல்லை
பளுவை எண்ணி
பதறும் பூமி இல்லை
இயக்கம் எண்ணி
இளைப்பாறும் இதயம் இல்லை
தூரம் எண்ணி
துவளும் நதி இல்லை
உழைப்பு எண்ணி
ஓயும் அலை இல்லை
பருவம் எண்ணி
பயங்கொள்ளும் பயிர் இல்லை
நிலையின்மை எண்ணி
நிற்கும் மேகம் இல்லை
விளம்பரமின்மை எண்ணி
விசும்பும் விண்மீன் இல்லை
காட்டை எண்ணி
கலங்கும் விலங்கு இல்லை
துர்நாற்றம் எண்ணி
தூரம் போகும் காற்று இல்லை
மரணம் எண்ணி
மருகும் மலர் இல்லை
ஆனால் வாழ்நாளில்
அத்தனையையும் எண்ணி
அஞ்சாத மனிதம் ஏன் இல்லை ?
என் இறைவா...
இது ஆறாவது அறிவால் வந்த அச்சமா ?