6.ஆதலினால் காதலித்தேன்.!-பொள்ளாச்சி அபி.

“எத்தனை ஆயிரம் பெண்களை
எட்ட நின்று பார்த்தாலும்
கிட்ட வந்து போவது
அவள் ஒருத்தியின் முகமே.!”

-“பிரபா பன்னீர்செல்வம்”-

பத்தாம்வகுப்பிலான எனது படிப்பு முடிவடைந்த காலம்.இனி அடுத்தது ப்ளஸ்டூ வகுப்பில் சேரவேண்டும் என்ற நிலையில்,எனது தந்தையார் ஒரு விபத்தில் சிக்கி வலது கை முறிந்தது.அதற்குப்பிறகு குடும்பத்தில் ஏற்பட்ட வறுமையும்,சிக்கலும் என்னை ஒரு தொழிலாளியாக்கியது.எங்கள் ஊரைச்சுற்றி,கடைசல் யந்திரங்களின் மூலம் இரும்பாலான உதிரிபாகங்கள் செய்யும் தொழில் பிரபலமாக இருந்தது.நானும் அவ்வாறான ஒரு பட்டறையில்,நாளொன்றுக்கு மூன்று ரூபாய் கூலிக்கு, கடைசல் பிடிப்பவருக்கு உதவியாளராக வேலைக்குச் சேர்ந்தேன்.

கையில் படியும் எண்ணைய்ப்பிசுக்கும்,அழுக்குஉடையுமாக,வீட்டிற்குச் செல்லும்போது,அம்மா என்னைப்பார்த்து கண்ணீர் வடிப்பதைக் காணும்போதெல்லாம் எனக்கும் சிரமமாக இருந்தது.என்னைப்பற்றி அவர் இதுவரை கண்டு கொண்டிருந்த கனவுகளெல்லாம் கண்ணீர் சொட்டுகளாகவே மாறிவிட்டதோ..? என்றும் எனக்குத் தோன்றும்.

அந்த நாட்களில்தான்,ஒருநாள் மாலை ஊருக்குள் சென்று கொண்டிருந்தபோது பேருந்திலிருந்து இறங்கி எனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த உருவத்தைப் பார்த்தேன்.வெளிர் பச்சைநிறத்துணியில்,கரும்பச்சை நூல்களால் வேலைப்பாடுகள் செய்த பெல்பாட்டம் பேண்ட்டும்,அதற்கு‘மேட்சாக’முக்கால் கை நீளமிருந்த மேல்சட்டையும் அணிந்துகொண்டு அந்த உருவம் சென்று கொண்டிருந்தது.
நடையில் தெரிந்த நளினம்,அது ஆண் இல்லையென்று உறுதிப்படுத்தியது.அதுவொரு பெண்ணானால்..,யாராயிருக்கும்.?.எனக்கு ஆச்சரியமாயிருந்தது.

‘நமது ஊரில்,பெண்கள் இப்படி உடையணிவது வழக்கமேயில்லையே.! பாவாடை தாவணிதானே பிரதானம்’ வீதியோடு வாசலிருந்த, வீட்டிலிருந்து வெளியே பார்த்த பெண்கள்,வாசல்படி தாண்டிவந்து நின்று பார்த்ததும்,எதிரே வந்த ஆண்கள் சிலர் குறுகுறுப்பாய் அந்த உருவத்தையே பார்த்துக் கொண்டு கடப்பதும்,எனது எண்ணத்தை உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.
எனக்குத் தெரிந்து முதன்முதலாக எங்கள் ஊரில் பெல்பாட்டம் போட்டுக் கொண்டு நடந்த பெண் அவள்தான் என்பது,இதுவரை வேறு யாரும் மறுக்கமுடியாத உண்மையாகவே இன்றளவும் நீடித்துவருகிறது.அதுவரை எனக்குத் தெரிந்து ஸ்ரீதேவி,ஸ்ரீப்ரியா,ஏன் சில படங்களில் கே.ஆர்.விஜயாவும்தான் பெல்பாட்டம் போட்டுக் கொண்டு,ஆடுவதையும் பாடுவதையும் பாhத்திருந்தேன்.இதுவே மற்றவர்களின் எண்ணமாகவும் இருந்திருக்கக்கூடும்.

ஆகா..இத்தனைபேரின் கவனத்தை திசைதிருப்பும் இந்தப் பெண் யார்.?.அறிந்துகொள்ள ஆவல் மிகுந்தது.‘ஊருக்குள்தானே செல்கிறாள்.பின்தொடர்ந்து பார்த்துவிடுவாமா.?’
தெரிந்தவர்களாய் நிரம்பியிருக்கும் இந்த ஊரில்,யாராவது இதைப்பார்த்துவிட்டு,தவறாக எதையும் எண்ணிக் கொண்டால்..?
மேலும் அழுக்கு உடையும்,எண்ணைப் பிசுக்குமாக வந்து கொண்டிருக்கும் என்னை ஏதாவது சந்தர்ப்பத்தில் அவள் திரும்பிப் பார்த்துவிட்டு முகம் சுளித்துவிட்டால்..,

யாரென்றே தெரியாத ஒருபெண் முகம்சுளிப்பதால் நமக்கு என்ன நட்டம்.? என்று ஒருபக்கம் மனது குதர்க்கம் பேசினாலும்,எந்தப் பெண் முன்னாலும் அவமானப்பட்டுவிடக்கூடாதென எனது‘வாலிபம்’என்னை எச்சரித்தது.உடனடியாக அவளைத் தொடரும் எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு சிலதினங்கள் கழிந்தபோது,ஒருநாள் காலை,இராணுவ வீரராகப் பணியாற்றிவந்த எனது மாமா விடுமுறையில் வீட்டுக்கு வந்துள்ளதாக எனது தாய் கூறினார்.அன்று விடுமுறை தினமும் ஆதலால்,வேகமாகக் கிளம்பினேன். ஜம்முவிலிருந்து வந்திருக்கும் அவரிடம் பாகிஸ்தான் இராணுவம் மற்றும் தீவிரவாதிகளின் ஊடுருவல் பற்றியும்,அதை இந்திய ராணுவம் எப்போதெல்லாம், எவ்வாறெல்லாம் சமாளித்தது,அதில் ஏற்பட்ட சிரமங்கள்,வெற்றிகள் என சொல்வதற்கு ஏராளமான தகவல்கள் இருக்கும்.

எப்போதும் நமது இராணுவத்தின் வீரம்செறிந்த,அந்தப் போராட்டங்களைக் கேட்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம்.தீவிரவாதிகளை எதிர்கொண்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும், தனக்கு போரினால் ஏற்பட்ட புதிய காயங்களைக் காண்பித்தே அவர் விளக்குவார்.இப்போது எங்கெல்லாம் காயப்பட்டு வந்திருப்பாரோ.? எனக்கு ஒருபுறம் கவலையாகவும் இருந்தது.

நாங்கள் இருந்த வீதியிலிருந்து இரண்டு வீதிகள் தள்ளித்தான் மாமா வீடு.சென்றேன்.மாமா இந்த முறையும் என்னை ஏமாற்றவில்லை.இடது கண் முழுக்க சிவந்துபோய் வீங்கிக் கிடந்தது.எதிரிகளின் துப்பாக்கியிலிருந்து பீறிட்டு வந்த குண்டுகள் துளைத்த பாறையிலிருந்து பெயர்ந்த சில்லுகள் தெறித்ததில்,பதுங்கு குழியிலிருந்த மாமாவுக்கும் காயங்கள் ஏற்பட்டதாக பிறகு சொன்னார்.
மேலும் கதைகள் பேசிக் கொண்டிருந்தபோதுதான், “அங்கிள்..”என்று அழைத்து தொடர்ந்து ஹிந்தியில் ஏதோகேட்டுக் கொண்டே வீட்டிற்குள் அவள் நுழைந்தாள்.அன்று பெல்பாட்டத்தில் பார்த்த அவளேதான்.! இன்றைக்கும் வேறுஏதோ மாதிரியான‘பேண்ட்தான்’ அவள் போட்டிருந்தாள்.

எனக்கு இன்ப அதிர்ச்சி.இப்போது அவள் முகத்தை நன்றாகப் பார்க்கமுடிந்தது.மாசுமருவற்ற வட்டமுகம்.அவள் கோபப் பட்டால்கூட,அந்த முகத்திலிருந்த மென்மையான ஒரு சிரிப்பு மாறாமலே இருக்கும் போலிருக்கிறது.நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போதுதான் என்னைக் கவனித்திருப்பாள் போலும்.“அங்கிள்..இது யார்.?” அவள் திடுமென்று என்னைக் கைகாட்டி கேட்டவுடன், நான் தடுமாறினேன்.அவ்வளவு நேரமும் அவளையே பார்த்துக் கொண்டிருந்து விட்டோமே எனக் கூச்சமாயிருந்தது.‘சே..என்ன இது விவஸ்தையில்லாமல்..,’என்று என்னை நானே நொந்து கொண்டேன்.ஹிந்தியில் பதிலிறுத்தபடியே என்னைப்பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார் மாமா.அது சற்று நீளமான அறிமுகம்போல இருந்தது.

அதற்குப் பிறகு சட்டென்று அவள் செய்த காரியம்தான் என்னை உலுக்கிப்போட்டது.திடுமென்று,“ஹலோ..”என்று அவள் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டே,என் வலதுகையைப் பற்றிக் குலுக்கிவிட்டாள்.இது நான் எதிர்பார்க்காதது.சட்டென்று கையை விலக்கிக் கொள்ள முயற்சித்தும் என்னால் முடியவில்லை.தொடர்ந்து அவள் ஹிந்தியில் ஏதோ கேட்க,உடனடியாக மறுமொழி கூறாமல் அசட்டுச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தேன்.அதற்குப் பின் அவள் வீட்டிற்குள்ளே சென்று எனது அத்தையிடம் பேசிக் கொண்டு ஏதோ ஒரு பாத்திரத்தை வாங்கிக் கொண்டு சென்று விட்டாள்.

தொடர்ந்து எனது மாமாவின் இராணுவக் கதைகளைக் கேட்கத் தோன்றவில்லை.அவளைப் பற்றியே மனதுக்குள் சூறாவளி சுழன்று கொண்டிருந்தது.நல்லவேளை,அவரே தனது மௌனத்தைக் கலைத்தார். “நாம குடியிருக்கிற இந்த வீட்டை இவளுடைய அப்பாதான் வாங்கியிருக்கிறார்.பாம்பேயிலிருந்து திரும்பவும் இங்கியே வந்துட்டாங்களாம்” என்று சொன்னபோதுதான்,அவளின் கைகுலுக்கலுக்கு காரணம் புரிந்தது.பாம்பே நம்மைவிட முன்னேறிய நகரம்.அங்கு ஆண்பெண் பேதம் என்பது,நமது அளவிற்;கு கட்டுப்பெட்டித் தனமாக இருக்காது என்றும்,ஒரு ஆணுடன் கைகுலுக்குவது என்பது அங்கு மிகச்சாதாரண நாகரீகமாயிருக்கும் என்றும் எனக்குப் புரிந்தது.

அவளுடனான கைகுலுக்கல் குறித்து,‘நாகரீகம் கருதி’ எனது கையை விலக்கிக் கொள்ளவில்லை...,’அப்படியென்றுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.அதற்குப் பின்னால் நான் தனித்திருந்த சமயம்வரை.ஆனால்,அவளின் கைபட்ட இளம்சூடு,எனது கையில் அப்படியே உறைந்துபோய் விட்டதாகத் தோன்றியது.அப்போதுதான் அவள் கைகுலுக்கியபோது விலக்கிக் கொள்ள மனமில்லாமல் நின்றிருந்தேன் என்றும் எனக்குப் புரிந்தது.அதுவரை வயதுவந்த எந்தப் பெண்ணின் கையும் என்மேல் பட்டதில்லை.அது எனக்குப் புதுஅனுபவமாகவும் இருந்தது.அதை நினைத்தபோது உடலில் மெல்லிய சிலிர்ப்பொன்றும் எழுந்து அடங்கியது.

அதற்குப் பின்வந்த நாட்களில்,தொடர்ந்து அவளுடன் பேசுவதற்கு மிகச்சாதாரணமாய் வாய்ப்புகள் ஏற்பட்டன.ஒவ்வொரு நாளும் அவளின் நடவடிக்கைகள் எனக்குள் மாற்றங்களை உருவாக்கிக் கொண்டே இருந்தன.அந்த நீண்டநாள் பழக்கத்தின் போதுதான்,அவள் மிகச்சாதாரணமாய் சினிமா குறித்தும் கதைகள் குறித்தும் பேசும்போது, “என்னடா எழுதுறானுங்க இவனுங்க..? குதிரைக்கு லகான் போட்ட மாதிரி,ஒரு விஷயத்தை அதன் மறுபக்கத்துடன் சேர்த்து பார்க்கவே மாட்டானுகளா.?”என்று சர்வசாதாரணமாய் அவள் விமர்சிப்பது எனக்கு பிரமிப்பையே கொடுத்தது.

அதற்காக அவள் சொல்லும் காரணங்களும் பொருத்தமாகவே இருந்தன.அதற்கு அவளுடைய பாம்பே வாழ்க்கை அங்கு நிலவும் சமூகச் சூழ்நிலை,நாகரீகம் அவளுக்கு ஏராளமாகக் கற்றுக் கொடுத்திருந்தன என்பதைப் புரிந்து கொண்டேன். இந்த நாட்களிலெல்லாம்,ஒரு ஆண் என்ற அளவில் அவசரமோ,ஆதிக்கமோ காட்டாமல் என்னைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்.அதற்கு காரணம் நான் வளர்ந்த‘சூழ்நிலைகளாயும்’இருக்கலாம்.

அதுவரை,ஆண் என்பவன் திருமணம் செய்துகொள்ள மட்டுமே ஒருபெண் என்ற அளவில், பெண்களைக் குறித்துப் புரிந்து வைத்திருந்த நான்,மெதுவாக அந்தப் பிரமையிலிருந்து விடுபடத்துவங்கினேன்.வயதுவந்த ஆண்,பெண் இடையே உறவு என்பது காதலாக மட்டும்தான் இருக்க முடியும் என்ற எனது பேதைமையான எண்ணத்தை முற்றிலும் தகர்த்து தவிடு பொடியாக்கினாள் அவள்.அந்தத் தெளிவுக்காகவும்,துணிச்சலுக்காகவும் அவளை நான் மிகவும் மதித்தேன்.

நீண்ட நாட்கள் பழக்கம் கொண்ட இரு நண்பர்கள்..அதில் ஒருவர் பெண் மற்றொருவர் ஆண்.அவ்வளவுதான்..!.உள்ளங்களால் இணைந்த நட்பெனும் அன்புக்கு,உருவங்கள் வேறாயிருந்தால்தான் என்ன.? என்று தனது நடவடிக்கையால் நிரூபித்துக் கொண்டேயிருந்தாள் அவள்.இப்போதும் அவள் அப்படித்தான்.!

இப்போதுவரை எனது நட்புவட்டத்திற்குள் இருக்கும் பெண்கள் அனைவரிடமும் மரியாதையாகப் பழகுவதற்கும்,25 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த வட்டங்கள் நீடிப்பதற்கும் முதல்புள்ளியை அவள்தான் வைத்தாள்.
ஆதலினால் காதலித்தேன் அவளை.!
இப்போதும் காதலிக்கிறேன்.!
அவள்பெயர் ‘சரோ’ என்கிற சரோஜா ரங்கசுவாமி.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி.B +ve (18-Aug-12, 10:33 am)
பார்வை : 291

மேலே