''தெய்வங்களின் இருப்பிடம் கோவில்களில் தான்''

பகலை கிழித்து எழுந்தது
என் ஒப்பாரி ஓலம்,
வேறு ஏதாகினும் சொல்
இந்த துயரப் பனியில் உறைய நான் தயாரில்லை!
அவனை நேசித்த நண்பனாக சொல்கிறேன்,
அவன் வாழ்வை பறித்திட யாருக்கும் உரிமையில்லை !

அணைத்து விட முடியாத பெருமனலாய்
என்னுடல் பற்றி எரியும்,
ஒரு காகிதமாய்
ஒரு வார்தைகளுமில்லாமல்
சாம்பலாகிப் போகிறது. . . . . . . .

சிறு வயதில் குறும்பு படர்ந்திருக்க
நீயும் நானும்
விளையாடிய மைதானம் கண்ணீர் விட்டபடி !

உயரத்தில் இருக்கும்
கோணப் புளியை கல்லெடுத்து எறிந்து-உன்னோடு
உண்ட இன்பம்
ஒரு நூறாண்டு பசி எடுக்காது!

என் தோழனே !
பிள்ளையார் கோவிலின் திருவிழா நாட்களில்,
உன் எந்தச் சிரிப்பின் வழியாக உலவித்திரிகிறாய்
கோவிலுக்குள் ?
எனக்கு மட்டும் சொல் உன்னை ஒரு தடவை
பார்த்து விடுகிறேன்,
பல வருடங்களுக்கு பிறகு.!

குழப்படியின் அடையாளமென
தலைதூக்கி நிற்கும் எம்
சிறு வயது நட்பை,
பொதிந்த எம் ஊரின் வரலாறாய்
கவனமாய் எடுத்து வைக்கும்,
பல வருடமாய்
திருத்தப்படாமலே கிடக்கும்
எங்களூரின் ''நூலகம்''!

நேற்றுப் பொரித்த கோழிக் குஞ்சுக்கு
பாடை கட்டி,
அலாதியாய் பறந்து செல்லும் ''வல்லூறாய்''
உனைத் தூக்கிய படி
பறந்திருக்கிறது,
மரணமேயில்லாத இந்த பாழாப் போன மரணம்!

உன் அம்மம்மாவின் மாலை நேரத்
தேடுதலின் போது
மைதானத்தில் கைதாகிவிடக் கூடாதென,
நீ ஒரு நாள்
மறைந்திருந்த என் முதுகு
உன் புன்னகையை மறக்காமல் குண்டு பட்ட வலியை உணர்த்துகிறது !

இளஞ்சிசுவின் வாய்வழியால் அழைப்பதாய்
என் ஊர் பெயரை
கொண்டு
நீ
அழைக்கும் போதெல்லாம்,
''பிரதேச பேதம்'' பிடித்திருந்தது
உனக்காக மட்டும் !

உன்னோடு சண்டை போடுவதும்,
சிலவேளை
பெரியவராய் எமை நினைத்து
கடும் சொல் பேசும் எம்
சிறுபிள்ளை விளையாட்டுகளை
பார்க்கவோ,கேட்கவோ
இனி வரமில்லாமல் போனது
பிள்ளையார் கோவிலின் பின்புறத்து
நொச்சிப் பூ மரங்களும்,
பூச்சுப் பூசாத சுவர்களும் ......

முள்ளிவாய்க்கால் ரணத்திலிருந்து நான்
மீளாமல் துடிக்கும் போதே -உன்
மரணவாய்க்கால் தோண்டப்பட்டிருக்கிறது
காலனின்
பெரும் மண்வெட்டி கொண்டு !

நட்பின் வனாந்தரத்தில்
உன் மரணம் தீ மூட்டியிருக்கிறது,
பெரும் மழையடித்தும் அணையவில்லை!

என் கோபம் எல்லாம்
உன்னை தீ தின்றுவிட கொடுத்தவர் மீது தான்.
ஏன் என்கிறாயா?
பூவை எவரும் தீயில் போட நான் அனுமதியேன்,
அது சரியன்று !
உன்னை விதைத்து இருக்க வேண்டும்.

அதோ !
கோவிலுக்குள் யாரோ ஓடிப் போவது
போல தெரிகிறது,
நீயாக கூட இருக்கலாம் !
நீ இங்கு தானே உள்ளாய் ?

என் அம்மம்மா சொல்லியிருக்கிறாள்!
''தெய்வங்களின் இருப்பிடம்
கோவில்களில் தான்''.

05.22.2010 அன்று மரணம் கவ்விக் கொண்ட என் தோழன் உமாகாந்தன் ராமுக்கு !

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (22-Aug-12, 11:47 pm)
பார்வை : 622

மேலே