8.ஆதலினால் காதலித்தேன்.! பொள்ளாச்சி அபி.

"நிறையப்பெண்கள்
பார்ப்பதற்கு வேண்டுமானால்
அழகாய் இருக்கலாம்
நீ மட்டும் தான்
நினைப்பதற்கே
அழகாய் இருக்கிறாய.!
- ------------------- - "நவீன் குமார்."------------

தற்போதைய சமூக சூழ்நிலையில்,பெண்கள் பெற்றுள்ள இடம் அவர்களின் மனநிலை குறித்து,பெண்எழுத்தாளர்கள் எழுதியவற்றிலிருந்து ஓரளவு அறிந்துகொண்டே வந்தேன்.
ஆணுக்கு எல்லா வகையிலும் கட்டுப்பட்டவள் பெண்.அவளின் நடவடிக்கைகளுக்கு சாத்திர சம்பிரதாய விளக்கங்கள்.

ஒவ்வொரு ஆணும்,தனது மனைவியின் அகால இறப்போ,விவாகரத்தோ..,ஆண் என்பவன் சுலபமாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடுகிறான்.மற்றொரு பெண்ணை மணந்து கொள்கிறான்.குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்கிறான்.தனது தாய்தந்தையருக்கு உதவி என்கிறான்.ஒரு பெண்ணை இரண்டாவதாக மணந்து கொள்வதற்கு,அவனுக்கு எப்படித்தான் இத்தனை காரணங்கள் கிடைக்கிறதோ..? என்ற வியப்பும் எனக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு.

அதிலும்,பெண் எழுத்தாளர்கள் பலரும்..இன்றுவரை,தமது கதைநெடுக வலியுறுத்தி வந்த பெண்களுக்கான ஒழுக்க நெறிகள்.அதில் முக்கியமானது,கற்பெனும் ஒரு பலமான கருத்து.அது உண்மையில் பெண்களுக்கு அணிகலனா.? விலங்கா.?.

பெண்கள் கற்புநெறி தவறினால்,அதனால் அவள் அடையும் பாதிப்பு.சமூகத்தினால் அவள் கீழ்மைப் படுத்தப்பட்டு,ஒதுக்கப்பட்டு, பாதுகாப்பற்ற நிலைக்கு அவள் உட்படுவது..அல்லது உட்படுத்துவது.

இதையே நமது கலாச்சாரம்,பண்பாடு என்று பெண் பிறந்ததிலிருந்து அவள் மனதிற்குள் பாடம் பாடமாய் ஊட்டி,வளர்க்கப்படும் அவள்,இந்த சமூகம், ஒழுக்கமென்று விதித்த கட்டுப்பாடுகளுக்குள் வளையவந்து,அவளும் ஒரு கூண்டுக்கிளியாகவே மாறிப்போகிறாள்.

மேலோட்டமாகப் பார்த்தால்,கற்பு நெறி என்பது பெண்களுக்கான பாதுகாப்;புக்குரியதுதான்..என்றே தெரியும்.ஆனால்,ஆணுக்கு இல்லாத விஷயம்,பெண்ணுக்கு மட்டுமே வலியுறுத்தப்படுவதேன்.?.

கணவனை இழந்த கைம்பெண் ஒருத்தி,உடல் தேவையோ,ஆதரவு தேடும் மனப்போக்கோ,மற்றொரு ஆணுடன் உடல்ரீதியாக ஒன்றிணைந்த ஒருவிஷயம் வெளிப்பட்டபோது,இதைக் கேள்விப்பட்ட எங்கள் ஊர்ப் பெரிய மனிதர்கள்,அவளை ஊருக்கு நடுவில் இருந்த புளியமரத்தில் கட்டிவைத்து அடித்தனர்.மாறாத வடுவை இன்று வரை என்மனிதில் ஏற்படுத்தியுள்ள,அந்தக் காட்சியை நான் நேரில் பார்த்தேன்.ஊசி இடம் கொடாமல் நூல் நுழையுமா.? என்ற வியாக்கியானம் வேறு.!.--இந்த சம்பவத்தை பின்னனியாகக் கொண்டே,ஒரு தீர்வை முன்வைத்து “தலைமுறைகள்” என்ற சிறுகதையையும் இந்தத் தளத்தில் பதிவிட்டிருக்கிறேன்.--

ஆனால் அவளோடு இணைந்த ஆணுக்கு எந்த தண்டணையும் இல்லை.அவள் அடிபடும்போதும்,இவனுக்கு எந்த சம்பந்தமும் இல்லையென்பது போல்,ஊருக்கு வெளியே ‘மைனர் கு}ஞ்சு’ போல அவன் நண்பர்களுடன் டீ குடித்துக் கொண்டிருந்ததையும் பார்த்துவிட்டே வந்திருந்தேன்.

இதனை வேடிக்கைப் பார்த்த குடும்பத்துப் பெண்மணிகளும்,இவளுக்கு அப்படியென்ன உடம்பு தினவெடுக்கிறது.? என்ற கேள்வியுடன் வசை மாறிப் பொழிந்ததையும் கேட்டேன்.

அதிலொரு பெண்மணி,லாரி டிரைவராக பணியாற்றும் அவள் கணவன்,வெளியூருக்குப் போய்விட்டால்,மற்றொரு ஆணுடன் டவுனுக்கும்,சினிமாவிற்கும் செல்வதும்,மாலை நேரத்தில் அவளுடைய குழந்தைகளுக்கு திண்பண்டங்களை வாங்கிக் கொடுத்துவிட்டு,’மாமா’என்ற அடைமொழியுடன் அவள் வீட்டிலேயே இரவு துணைக்கு தங்குவதும்,நான் பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்தே தெரியும்.
இதில் எந்தப் பெண் செய்தது சரி.? யார் தவறு.? எனக்கு குழம்பியது. சிக்கல் வெளிப்பட்டதால் ஒருத்தி கெட்டவள். அது இன்னும் வெளிவராததால் இன்னொருத்தி நல்லவளா.? என்னடா இது குழப்பம்.?

இருவருக்கும் நடுவில் நூலிழைபோல ஒரு திரை தொங்குவதாக நான் கற்பனை செய்து கொண்டேன்.

அப்படியானால்,பெண் மனம் எதை விரும்புகிறதோ,அதை சுதந்திரமாக அனுபவிக்க எது தடுக்கிறது.?

இனிப்பு என்றால் ஆணுக்கும் இனிக்கிறது பெண்ணுக்கும் இனிக்கிறது.கசப்பும் அதுபோலவே,கவலையெனில் ஆணையும் வாட்டுகிறது.பெண்ணையும் வாட்டுகிறது.கண்ணில் தூசி விழுந்தால் இருவருக்குமே கண்ணீர் வருகிறது.!.

இப்படி புலன்களால் அனுபவிக்கும் எல்லா உணர்ச்சிகளும் இருபாலருக்கும் ஒரே மாதிரியாயிருக்கும் போது இந்தக் கற்பு என்ற ஒருவிஷயம் மட்டும்,எப்படி பெண்ணுக்கே உரியதாக மாறியது.?

இவர்களின் நிலை ஏன் இப்படி மாறியது.? என்பதற்கு போதுமான விடைகள்,பெண் எழுத்தாளர்களின் எழுத்திலிருந்து எனக்கு அப்போது கிடைக்கவேயில்லை.பின்னாளில்,இவ்வாறான விஷயங்களை அந்த எழுத்தாளர்கள் தானாய் விரும்பி எழுதியதில்லை. அந்தக் காலத்தின் ஒரு பகுதியாக இருந்த சமூக கட்டமைப்புகளையும், அதில் பெண்களின் நிலையையும் பிரதிபலிக்கும் வேலையை,ஒரு இலக்கியவாதியாக தங்கள் கடைமையை மட்டுமே செய்தார்கள்,என்பதைப் புரிந்து கொண்டேன்.

அடுத்த கட்டமாக எனக்கு அந்தத் தேடுதல் துவங்கியது.

அந்தநேரத்தில்தான் ஒருநாள்,சரோ என்னிடம் வந்து என்னைத் தனியாக சந்திக்கவேண்டும் என்றும்,தனது வீட்டிற்கு மறுநாள் மதியம் அவசியம் வரவேண்டும் என்று வேண்டுகோள் வைக்க,காரணமின்றி அவள் வற்புறுத்த மாட்டாள் என்று எனக்குத் தெரியுமாதலால் நானும் சம்மதித்தேன்.

அதன்படியே நானும் மதியம் சென்றேன்.ஆனால் சரோ எனக்குக் கொடுத்த அதிர்ச்சி..,நான் அதுவரை எதிர்பார்த்திராதது.!

எதிர்பாராத அந்த அதிர்ச்சியின் தாக்கத்தை என்னால் உடனடியாக ஜீரணிக்க முடியவில்லை.என்ன செய்வதென்று தெரியாமல் சற்று திக்குமுக்காடித்தான் போனேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக,நான் பலமுறை எதிர்பார்த்திருந்த..,கற்பனைகளை சுகப்படுத்திக் கொண்டிருந்த,கவிதைகளை எழுத வைத்துக்கொண்டிருந்த.., அந்த சந்தர்ப்பம்..,எனது உள்ளங் கையில் வைத்த இனிப்பாய்,தொட்டுவிடும் தூரத்தில் எனக்கு ஆசைகாட்டியது.


ஆதலினால் காதலித்தேன்.. .. .. மீண்டும் தொடர்கிறேன்..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி -B +ve (28-Aug-12, 4:55 pm)
பார்வை : 212

மேலே