தீயே..உனக்கின்னும் பசியே தீரலையோ..!
சிவகாசி..!
உழைப்பின் பெருமை சொல்லிடவே
ஊருக்கதனை உரைத்திடவே
‘குட்டி ஜப்பான்’பெயர்சூட்டினோமே
குடும்பங்களை குடியேற்றினோமே.!
அதனால்தானோ.., என்னவோ.,
அணுகுண்டு வெடித்தது போலவே
அள்ளிக் கொண்டு போனாயோ
அருந்தவத்தில் விளைந்த உயிர்களையே..!
சரம் சரமாயப் பட்டாசுகள்
மேகம்தொடும் பாணங்கள்
வானம்முழுதும் ஒளித்துளிகள்
ஜாலம் காட்டும் வர்ணங்கள்
எத்தனைபடைத்தார் உழைப்பாலே
சிறார்கூட தம் கையாலே..
சொற்பக் கூலி முறையினிலே
தொடர்ந்த சோக வாழ்வினிலே.!
ஆண்டுக்கணக்காய் மாறவில்லை
அதற்கொரு முடிவென துப்பில்லை.
இதற்காய் சிந்திய கண்ணீரும்
இத்தனை நாளும் மாறவில்லை.!
இப்படி நாங்கள் தவிக்கையிலே
இன்னும் கொடுமை நீளுதையோ
இன்னுயிர் உனக்கு வெல்லமோ..!
இன்னும் பசியே தீரலையோ..!
தீயே..கொடுந்தீயே..!
அரசுயந்திரங்கள் முகாமிடும்
அவசரநிதியை அள்ளித்தரும்
அறிக்கைப் பொய்யை வெளியிடும்
அவலங்களென்னவோ தொடர்ந்திடும்.!
ஆயுசு மட்டும் இனி எரியும்
அவரது குடும்பத்து வயிறுகளே.
அதனை அணைக்க உனக்கின்று
சக்தியிருக்குதா சொல் தீயே..!
இதற்கொரு தீர்வாய் உன்கையில்
வழியொன்றிருக்குதா சொல் தீயே..!
வரம்தரும் சக்தி உனக்கில்லையேல்
இன்னும் தெய்வமெனச் சொல்லவோ.?
தீயே..கொடுந்தீயே..!