உல்லாசம் பொங்கும் தீபாவளி!
உல்லாசம் பொங்கும் தீபாவளி!
========================================ருத்ரா
எந்த நரகாசுரன்களை
வதைக்கப்போகிறீர்கள்?
ஒவ்வொரு வருடமும்
நீங்களே உருவாக்குகிறீர்கள்
நீங்களே
அவனது காகிதசடலங்களை
வாசலில் தெளிக்கிறீர்கள்.
தீபாவளி பட்டாசுகளில்.
தம் மனிதபிஞ்சுகளையே
அஞ்சு ரூபாய்க்கும்
பத்து ரூபாய்க்கும்
அள்ளிக்கொடுத்து விட்டு
அந்த கூலியில்
வயிறுகளை கழுவிக்கொள்ள
முயலும்
குடும்பங்கள் எத்தனை?எத்தனை?
தீபாவளி அன்றைக்கு
உங்களுக்கு மகிழ்ச்சி வேண்டும்
என்பதற்காக
இன்றே
சுடுகாட்டுக்குள்
புகையாய் போனார்களே!
என்ன கொடுமை இது!
நல்லா வெடிக்குமா
என்று ஒத்திகை பார்க்க
அந்த மனிதப்பூக்களா
கைவேறு தலைவேறாய்
கருகிச்சிதறவேண்டும்?
இது தடுக்கப்படவேண்டும்
என்று
இதுவரை எல்லோருமே
தாரை தப்பட்டை வைத்து
முழக்கியாகி விட்டதே!
இந்த அவலக்குரல்கள் எல்லாம்
உங்கள் புராணக்குரல்களைவிடவும்
பழமையாகிப்போனதே மிச்சம்.
பொருளாதார சுரண்டல் வாதத்தின்
பக்கம் மட்டும் வதம் செய்ய
அந்த விஷ்ணு வரமாட்டேன் என்கிறாரே!
இந்த "நரன்"குஞ்சுகளை
வறுமை அரக்கன் வறுத்து
தின்பது
ஏன் இன்னும் தெரியவில்லை?
பெருமாளே
உன் விஷ்ணு சக்கரங்கங்களை எல்லாம்
இந்த சிவகாசி (விபத்து) அசுரர்களுக்கு
குத்தகை கொடுத்துவிட்டு
குத்த வைத்து காத்துக்கொண்டிருக்கிறாயே
எங்கள்
விஷ்ணு சஹஸ்ரநாமங்களை கேட்க!
மானுட தர்மங்களை
ஈயம் பித்தாளை பேரிச்சம்பழத்துக்கு போட்டுவிட்டு
உன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றும்
இந்த அக்கிரமங்களுக்கு முடிவு எப்போது?
சம்பவாமி யுகே யுகே என்று
"சோ"க்கள் "நாடகம்" நடத்துகிறார்கள்.
ஆனாலும்
சோகமே எப்போதும் அரங்கேற்றம்.
=======================================ருத்ரா
!