என்ன செய்ய?

------ என்ன செய்ய?------

யாரவள் ?

எனைத்தான் பார்க்கிறதா
அவள் பார்வைகள் ?

எனைப்பார்த்தபடி
முகமெங்கும் வழிந்தோடும்
அவள் வெள்ளை சிரிப்புக்கு
பதிலளிக்க என்னிடம்
பாவனைகள் இல்லையே
என்ன செய்ய.....?

அது அவனா?
அவளா?
பாலினம் கண்டறிய
பரீட்சை தேவையா இக்கணம்?

பல யுகமாய்
பாழடைந்த என்
மன பங்களாவை
ஒரு நொடியில்
ஒட்டடை அடித்து
சுத்தம் செய்கிறாளே
சூத்திரம் என்ன?

என் முகம் நோக்கி
சிரித்து கொண்டே இருக்கிறாளே !
சிறுக்கி
என்ன வேண்டும் அவளுக்கு
நான் என்ன கொடுப்பது....
ஒன்றும் புரியவில்லை எனக்கு.

கையில் முத்தம் பதித்து
காற்றில் அனுப்பி
ஆனந்த பொலிவு
அடைந்திருக்கும்
அவள் முகத்தை கிள்ளலமா?
அதனால்
அருகில் இருக்கும்
அவள் அப்பா
ஆத்திரபட்டால்
என்ன செய்ய?

கூப்பிடுகிறாளா?
கும்பிடுகிறாளா?
எதோ கதை சொல்கிறாளே
கையசைத்து?

வார்த்தைகள் ஒளித்து வைத்து
மௌன பரிவர்த்தனையில்
ஒரு காதலை என்னுள்
கடத்துகிறாளே !

கழுத்தை நெரித்தும்
சிரிக்கிறதே !
அவள் கையில் இருக்கும்
கரடி பொம்மை....

கைக்குட்டையே
பாரமென கருதும்
என் கைகளுக்கு
ஏந்தி
அள்ளி கொள்ளும்
ஆசையை
ஏன் பரப்புகிறாள்?

விலைமதிப்பற்ற
என் நேரத்தை
கிலுகிலுப்பையாக்கி
அவள் கைகளில்
கொடுத்தது யாரு?

தவத்தில் இருந்தவனை
தற்கொலை முனையில்
நிறுத்திவிட்டு
நீ எப்போதடி
நித்திரையில் ஆழ்ந்தாய்?

பயணங்களிலும்
பல நேரங்களிலும்
எங்கேயும் எப்போதும்
சந்திக்க நேருகிறது
உதட்டிலிருந்து
கன்னம் வரை
மிட்டாய் சாயம்
அப்பிய
ஒரு குழந்தையின்
சிரித்த முகம்.

பேச்சின்றி நிக்கவா?
பூச்சாண்டி காட்டவா?
குழப்பத்தில் நானும்
இப்போது
குழந்தையாகிறேன்...


---- தமிழ்தாசன்-----

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (10-Sep-12, 11:53 am)
பார்வை : 199

மேலே