சாட்டை !திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

சாட்டை !
இயக்கம் M.அன்பழகன் .
நடிப்பு சமுத்திரக்கனி .
திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

துளி கூட ஆபாசமின்றி மிகச் சிறப்பாக இயக்கி உள்ளார் இயக்குனர் அன்பழகன்.சமுத்திரக்கனி ஆசிரியராகவே மாறி பாத்திரத்தில் நடிக்காமல் வாழ்ந்துள்ளார் இப்போது வரும் பல திரைப்படங்கள் குடும்பத்துடன் சென்று பார்க்க முடிய வில்லை .ஆனால் இந்தப் படத்தை குடும்பத்துடன் சென்று அவசியம் பார்க்க வேண்டும் .தமிழ்த் திரைப்படத் துறையை புதிய உயரத்திற்கு கொண்டு சொல்லும் முயற்சி. பாராட்டுக்கள் .

அரசுப் பள்ளிகளின் அவல நிலையை எடுத்துக் காட்டி .ஆசிரியர்கள் மனது வைத்தால் தரத்தை உயர்த்தலாம் என்பதை உணர்த்தும் உன்னதமான படைப்பு .அரசு மருத்துமனை சுகாதாரமின்றி இருப்பது போல அரசுப்பள்ளி தரமின்றி இருக்கின்றது.

சில ஆசிரியர்கள் வட்டிக்கு விடுவது ,வகுப்பறையில் தூங்குவது ,வீட்டு வேலையை மாணவனிடம் வாங்குவது ,சத்துணவுப் பொருட்களை கையாடல் செய்வது ,மாணவியிடம் தவறாக நடக்க முயற்சிப்பது இவற்றை தோலுரித்து காட்டி விட்டு .மாதா ,பிதா ,குரு ,தெய்வம் என்றார்கள் தெய்வத்திற்கும்
முன்பாக குருவை வைத்தார்கள் .அப்படிப்பட்ட குரு எப்படி ? நடந்துக் கொள்ள வேண்டும் . என்று கற்பிக்கும் சிறந்த படம் .இந்தப்படத்தை எல்லா ஆசிரியர்களும், மாணவர்களும் அவசியம் பார்க்க வேண்டிய படம் .

தாயாளன் ஆசிரியராக சமுத்திரக்கனி மிக நன்றாக நடித்து உள்ளார் .தோப்புக் கரணம் போடுவது மூளையை சுறுசுறுப்பு ஆக்குகின்றது.ஒரே நேரத்தில் மணி அடித்து தீபாராதனை காட்டுவது இடது மூளை வலது மூளை இரண்டும் வேலை செய்ய உதவுகின்றது .சாக் பீஸில் எழுதி, எழுதிய சொல்லைக் கேட்காமல் வண்ணத்தை கேட்டு மாணவர்களின் மூளைக்கு வேலை வைப்பது .மாணவர்களிடம் அன்பு செலுத்துவது, சக தோழன் போல பழகுவது .இப்படி தயா ஆசிரியர் படம் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்த பின்னும் மனதை விட்டு அகலாமல் நிற்கிறார் .தயா போன்று எல்லா ஆசிரியர்களும் மாறி விட்டால் நம் நாடு முன்னேறி விடும் .

தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையா ஒரு ஆசிரியர் எப்படி? இருக்கக் கூடாது என்பதற்கு உதாரணமாக வில்லன் பாத்திரத்தில் மிக நன்றாக நடித்து உள்ளார் . படத்தின் கடைசி காட்சியில் தயா ஆசிரியருக்கு பல தீங்கும் செய்த போதும் , தண்டிக்காமல் மன்னித்த உள்ளம் கண்டு நெகிழும் போது மிக நன்றாக நடித்து உள்ளார் .தலைமை ஆசிரியாராக வரும் ஜூனியர் பாலையா மிக நன்றாக நடித்து உள்ளார்.

மாணவ மாணவிகள் அனைவரும் மிக நன்றாக நடித்து உள்ளனர் .இப்படி பாராட்டிக் கொண்டே இருக்கலாம் .

சிறந்த இயக்குனர் வரிசையில் இடம் பிடித்து விட்டார் அன்பழகன் .ஒரு தந்தை மகனிடம் எப்படி ? நடந்து கொள்ள வேண்டும் .ஒரு மகன் தந்தையிடம் எப்படி ? நடந்து கொள்ள வேண்டும். என்று வாழ்வியல் பாடம் சொல்லும் படம் . நம் நாட்டில் பெண் பிள்ளையிடம் அவள் சம்மதம்இல்லாமலேயே யாரவது காதல் கடிதம் தந்து விட்டால் உடன் பெண் பிள்ளையின் படிப்பிற்கு முடிவுரை எழுதும் அவலம் எங்கும் நடக்கின்றது.அது தவறு. பெண் பிள்ளைகளை நம்புங்கள் .படிக்க வையுங்கள். என்று படிப்பினை சொல்லித் தரும் படம் .

மாணவர்களை வெயிலில் முட்டி போட வைத்து தண்டனை தருவது தவறு .அன்பால் திருந்துங்கள் .
ஒவ்வொரு மாணவனுக்குள்ளும் ஒவ்வொரு திறமை இருக்கும் .எந்த மாணவனையும் உதவாக்கரை ,படிப்பு ஏறாது என்று புறக்கணிக்காதீர்கள் .பெண் ஆசிரியர்கள் ஆடை ஒழுக்கமாக இருக்க வேண்டும் .ஆசிரியர்கள் கெட்ட பழக்கம் இன்றி இருக்க வேண்டும் .இப்படி பல தகவல்கள் படத்தில் உள்ளது .இந்தப் படம் பார்த்த மாணவனுக்கும் ஆசிரியருக்கும் மன மாற்றம் நிகழும் என்று அறுதி இட்டு கூறலாம் .

மாணவி அறிவழகியை மாணவன் பழனி விரட்டி விரட்டி ஒரு தலையாக காதலிக்க அவள் மறுக்கிறாள்.படிக்காமல் சுற்றியவன் ஆசிரியர் தயா அவர்களின் அறிவுரை கேட்டு நன்கு படிக்கிறான்.விளையாட்டிலும் ,கலை நிகழ்ச்சியிலும் பள்ளிக்கு முதலிடம் பெற்றுத் தருகிறான் .உடன் மாணவி அறிவழகி அவளும் காதலிப்பதாக சொல்லுகிறாள் .படம் வழக்கமான மசாலா காதல் கதை ஆகிவிடுமோ ? என்று நினைக்கும் போது, மாணவன் பழனி பேசும் வசனத்தில் இயக்குனர் முத்திரை தெரிகின்றது ." இந்த பள்ளியில் ஆசிரியராக இருக்கும் என் தந்தை உள்பட எல்லா ஆசிரியர்களும் என்னை வெறுத்தபோது ,ஆசிரியர் தயா என் மீது அன்பு செலுத்தினார் என்னை நம்பினார் .அவர் நம்பிக்கை வீண் போக நான் விரும்ப வில்லை . அறிவழகி நன்றாக படிக்கும் மாணவி .காதலிப்பது தெரிந்தால் அவள் வீட்டில் அவள் படிப்பதை நிறுத்தி விடுவார்கள் .எனவே நான் காதலிக்க விரும்பவில்லை ".என்று நண்பன் முருகனிடம் சொல்கிறான் .சமுதாயத்தில் மாற்றம் உருவாக்கும் மிக நல்ல படம் .இநதப் படத்தில் கொலை, கொள்ளை ,வன்முறை ,வெட்டு, குத்து ,ஆபாசம் எதுவுமின்றி ய்தரமான படம் தந்துள்ளார். பாராட்டுக்கள்.

இந்த படத்தை கோடிகளை கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் தந்து ,வெளி நாடுகள் சென்று கோடிகளை விரையம் செய்து படம் எடுக்கும் மசாலா பட இயக்குனர்கள் அனைவரும் அவசியம் பார்த்து திருந்த வேண்டிய படம் இது .

திக்கு வாய் குறை உள்ள மாணவி வீட்டில் நன்றாக பேசுகிறாள் ..ஆனால், பள்ளிக்கு வந்ததும் சக மாணவர்கள் கேலிக்கு அஞ்சி அதிகம் திக்குகின்றது .இதனை உணர்ந்த ஆசிரியர் தயா , மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி திக்கு வாய் குறை உள்ள மாணவிக்கு படிக்க பயிற்சி தந்து பேச்சுப் போட்டியில் பங்குப் பெற வைக்கிறார் .ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆசிரியர் தயா.

மாவட்டத்தில் பின்தங்கிய பள்ளியை மாவட்டத்தில் முதல் பள்ளியாக வர வைத்து விட்டு ,ஆசிரியர் தயா படத்தின் இறுதியில் மாணவர்கள் வேண்டுதலையும் மீறி ,அடுத்த மாவட்டத்தில் பின் பின்தங்கிய பள்ளி நோக்கி பயணிக்கும் முடிவும் பாராட்டுக்குரியது .இயக்குனர் M.அன்பழகன், இயக்குனர் சமுத்திரகனி வெற்றிக் கூட்டணியாகி விட்டது .
முற்போக்கு சிந்தனை உள்ள இயக்குனர் M.அன்பழகன் .அவர்களிடம் ஒரு வேண்டுகோள் தங்கள் முன் எழுத்தை தமிழில் எழுதுங்கள் .

எழுதியவர் : இரா .இரவி. (24-Sep-12, 1:12 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 341

சிறந்த கட்டுரைகள்

மேலே