இமைகள் தொலைத்த விழிகள்

சிறுகதை:“இமைகள் தொலைத்த விழிகள்”
(வே.ம.அருச்சுணன் - கிள்ளான் )
கலாமணிக்குக் கோபம் கோபமாக வந்தது! குழந்தையாக இருந்த போதுதான் இரவெல்லாம் கண்விழித்துச் சிரமப்பட்டார் என்றால் நாற்பத்தைந்து வயதிலும், தூக்கம் போய் உடம்பைக் கெடுத்துக் கொள்ள வேண்டுமா என்ன?
அவ்வழியாக விரைந்து போகும் மகிழுந்துகளைக் கண்ணாடிச் சன்னல் வழியாக இருக்கையைவிட்டு எழுந்து சென்றுப் பார்ப்பதும் மீண்டும் வந்து கோபமுடன் இருக்கையில் அமர்வதுமாக இருக்கிறார். நள்ளிரவுக்குப் பின்னர் ஒவ்வொரு மணித்துளிகளாக நேரம் கூடும் போதெல்லாம் அவரது கோபம் அளவுக்கதிகமாகப் போகிறது!
கணவர் வேதாசலம், சரியாக இரவு பத்து மணிக்குப் படுக்கைக்குச் சென்றுவிடுவார்.இரவில் வெகு நேரம் கண்விழிப்பது அவருக்கு ஒத்துவராத பழக்கம்.அதிகாலை ஆறுமணிக்குச் சொல்லி வைத்தார் போல் தானாகப் படுக்கையை விட்டு எழுந்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டு தன் அலுவகத்திற்கும் சென்றுவிடுவார். தனக்கு வேண்டிய காலைச்சிற்றுண்டியைக்கூட மனைவி உடம்பு முடியாமல் போகும் சமையங்களில் சுயமாகச் செய்துக் கொள்வதுடன் மனைவிக்கும் வேண்டியப் பணிவிடைகளை முடித்துக் கொடுப்பார். அவர் தனது ஐம்பது வயதிலும் ஆரோக்கிமுடனும் சுறுசுறுப்புடனும் இருக்கிறார்.
சனிக்கிழமை இரவு இணையமையத்திற்குச் சென்ற மதன், மறுநாள் விடியற்காலை மணி மூன்றைப் போல் வீடு திரும்புகிறான். வெளியில் அவன் சாப்பிட்டானோ இல்லையோ தெரியவில்லை! மிகுந்த சோர்வுடன் தள்ளாடிய நிலையில் நடந்து வருகிறான். நேராக அவன் தன் அறைக்குச் சென்று படுக்கையில் சாய்கிறான். சிறிது நேரத்திலேயே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கி விடுகிறான்! அடித்துப் போட்டது போல் அசைவற்றுக் கிடக்கிறான். அவன் தன் அறைக் கதவைக்கூடச் சாத்தவில்லை. குறட்டை ஒலி அவனது அறையைத் தாண்டி வரவேற்பு அறைவரைச் சென்று மிகத்தெளிவாகக் கேட்கிறது.
தூக்க நேரத்தில் மதனிடம் கேட்டால் எந்தப் பதிலும் கிடைக்காது என்பதை நன்கு உணர்ந்திருந்த அம்மா அவனிடம் எதையும் கேட்க விரும்பாமல் அவன் அறைக்கதவை மூடிவிட்டு, மகனுக்காக இரவு வெகு நேரம் காத்திருந்ததால் ஏற்பட்ட உடல் களைப்பினால் தள்ளாடியவாறு உறங்கச் செல்கிறார். படுக்கையில் சாய்ந்த சிலவினாடிகளில் அவர் அயர்ந்து உறங்கிவிடுகிறார்.
வழக்கமாக காலை ஆறு மணிக்கெல்லாம் படுக்கையைவிட்டு எழுந்துவிடும் அவர் சற்று காலதாமதமுடன் எழுகிறார். எழுந்தவர் காலையில் பட்டியலில் அடங்காதப் புதுப்புது வேலைகளையும் செய்யத்தொடங்குகிறார். வாரத்தில் மகன் வீட்டில் இருக்கும் போதுதான் காலைப் பசியாறுதல் தோசை,இட்டலி அதனுடன் தேங்காய்ச்சட்டினி,தக்காளிச் சட்டினி என வித விதமாகச் செய்து மகனுக்குப் பரிமாறுவது அவருக்கு விருப்பமான வேலையாகும். அன்றும் மகனுக்காகக் சமையலைத் தொடங்கியிருந்தார்.
நண்பகல் வேளை நெருங்கியப் பின்பும் மதன் கண் விழிக்கும் அரவம் சிறிதும் இல்லாமல் இருந்தது! அதிரச் செய்யும் குறட்டை ஒலி மட்டும் அவனது அறையிலிருந்து தங்கு தடையின்றி வெளியேறிக் கொண்டிருந்தது!
அம்மா தட்டி எழுப்பிய பிறகுதான், அவன் தூக்க கலக்கத்துடன் மெதுவாகக் கண் விழித்தான்! யாரோ, தனது தூக்கத்தைக் கலைத்துவிட்டார்களே என்ற ஆத்திரத்தில் எதிரில் நின்றவர் அம்மா என்றும் பார்க்காமல் ஒரு கணம், வெறுப்புடன் எரித்துவிடும் பாவணையில் அக்கினிப் பார்வையொன்றை வெளிப்படுத்தினான்!
“ இரவு முழுவதும் எங்கப்பா போனே..........? என்னப்பா இது புதுப்பழக்கமா இருக்கு?” என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும் வண்ணம் ஆத்திரத்தைக் கொட்டுகிறார். அம்மா கூறியதற்கு எந்தப் பதிலும் கூறாமல் படுக்கையில் அமைதியாக அமர்ந்திருக்கிறான். அம்மா எத்துணைக் கண்டிப்பானவர் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும் என்பதால் அமைதி காக்கிறான். தான் செய்தது தவறுதான் என்பதை அவன் உணர்ந்ததால் உடல் கூனிக்குறுகிப் போகிறான்.
“கேட்டதற்குப் பதில் சொல்லாமல் இருந்தால் எப்படி? சொல்லுப்பா நேற்று இரவு நீ எங்கப்பா போயிருந்தே..........? சற்று ஆத்திரமுடனே கேட்கிறார்!
பதில் சொல்லாமல் இனி தப்பிக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்டவன் தயக்கமுடன், “ வந்துமா..........!” எதையோ..... சொல்ல வந்தவன் மறைக்க முயல்கிறான்!
“ மதன்....... அம்மாகிட்ட எதையும் மறைக்காம நேற்று நடந்ததை ஒன்று விடாமல் ஒழுங்காச் சொல்லிடு. விசயம் அப்பாவுக்குத் தெரிஞ்சா என்ன நடக்குமுனு தெரியுமில்லே..........!” மிரட்டும் பாவனையில் சொல்கிறார்.
மதன் ஒரு கணம் தடுமாறி நிற்கிறான்! “அம்மா............நான் என் நண்பர்களோடு இணையமையத்துக்குப் போனேன். என் வேலைச் சம்பந்தமாகச் சில தகவல்களைப் பெற இணையத்தில் தேடிக்கொண்டிருந்தேன்! நேரம் போனதே தெரியாமல் போயிட்டது. அதாமா நேரம் கழித்து வீட்டுக்கு வரவேண்டியதாப் போயிடுச்சு!” தயக்கத்துடன் கூறுகிறான்.
“ இதோட.........இந்தப் பழக்கத்தை விட்டிடு.காலம் கெட்டுப் போய்க்கிடக்குது!
நண்பன்….நண்பன் என்று எளிதில் யாரையும் நம்பி மோசம் போயிடாதே மதன்!”எச்சரிக்கை விடுப்பது போல் அம்மா ஆத்திரமுடன் கூறுகிறார்.
படுக்கையை விட்டு எழுந்தவன், சோர்வாக நடைப் பயின்றவாறு
பெரிய அளவில் வாயைப் பிளந்து கொட்டாவி விட்டவாறு வரவேற்பு அறையில் போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து அமர்கிறான்!
அப்பா வேதாசலம் அன்றைய தமிழ் ஞாயிறு நாளிதழின் வாசிப்பில் ஆழ்ந்து போயிருக்கிறார். அருகில் அப்பா இருக்கிறார் என்ற பயவுணர்வு மனதில் சிறிதுகூட இல்லாமல் திக்பிரமை பிடித்தவன் போல் சிலையாக உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.
மதன் வந்ததை அப்பா உணர்ந்திருந்தாலும், அவனிடம் ஏதும் பேசும் எண்ணம் அவரிடம் வற்றிப்போயிருந்தது.அண்மையக் காலமாகவே மதனின் நடவடிக்கையில் அவர் அதிருப்திக் கொண்டதாலே அவனிடம் பேசும் எண்ணத்தைத் தள்ளி வைத்திருந்தார். பத்திரிகை செய்திகளைக் கிரகித்துக் கொள்வதில் மூழ்கிப்போகிறார்.
இன்றைய சினிமா உலகம் இளைஞர்களின் மன நிலையை அடியோடு மாற்றியிருந்ததை அறிந்து கொண்டதால்,மதனின் விசியத்தில் மூக்கை நுழைத்துக்கொண்டு தன்சுயமதிப்பை இழக்கத்தயாராக இல்லை என்பதால் ‘சும்மா கிடப்பதே சுகம்’ எனும் கருத்துக்குத் தலைவணங்க முடிவெடுத்தன் விளைவே அவரது அமைதிக்கு அடிப்படையாகும்!
அப்போது, அங்கு வந்த அம்மா, “மதன்.........! இன்னும் உட்கார்ந்துக்கிட்டிருந்தா எப்படி? எழுந்து போய்க்குளிச்சிட்டுப் பசியாறு,” அதட்டுகிறார் அம்மா! அந்தக் காலத்துப் பிள்ளைகள் போல் தன் மகனும் கிழித்தக் கோட்டைத் தாண்டமாட்டான் என்ற மாயையிலேயே மிதந்து கொண்டிருக்கும் அவருக்கு மதனின் நடவடிக்கைகள் மீது ஏதும் சந்தேகம் எழாமல் இருந்தது ஆச்சரியமாகத்தான் இருந்தது! பெற்ற பாசம் கண்களை மறைக்கும் என்பது சரியாகத்தான் இருந்தது.
அம்மாவை ஒருவித ஏளனப்பார்வையுடன் பார்க்கிறான் மதன்! எனினும், அவன் முகத்தில் எந்தவொரு சலனமும் தென்படவில்லை! ஏதோ வேறு உலகத்தில் அவன் இருப்பது போல் அவனது முகத்தோற்றம் அமைந்திருந்தது!
இவனுக்கு என்ன ஆயிடுச்சு? நல்லாதானே இருந்தான்! மகனின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் தெரிந்தது. அப்பான்னா அவ்வளவு பயபக்தியுடன் இருப்பவன் அவரைப் பார்த்த பின்பும் அலட்சியமாக நடந்து கொள்கிறானே! அவனது நண்பர்களின் சேர்க்கையால் தப்பு தண்டா ஏதும் நடந்துவிட்டதா? தனக்குத்தானே மனதுக்குள் பெரும் பாரதப் போரை நிகழ்த்திக் கொண்டு மனதைக் குழப்பிப் கொள்கிறார்!
அம்மா சொன்னதற்காக, மதன் வரவேற்பு அறையை விட்டு எழுந்து குளியல் அறைக்குச் சென்றவன், குளித்து உடை மாற்றம் செய்துக் கொண்டு பசியாற வருகிறான்.
அவனுக்கு விருப்பமான உணவுகளைச் சமைத்துத் தயார் நிலையில் வைத்திருந்தார். சூடான இட்டலியும் அதற்கேற்றார் போல் தயாரிக்கப்பட்டிருந்த சுவை மிகுந்த தேங்காயுடன் கூடிய புதினாச் சட்டினி வாசனை மூக்கைத் துளைத்துக் கொண்டிருந்தது!
மதன் பசியாற அமர்ந்ததும் அம்மா இட்டலிகளைப் பரிமாறுகிறார்.அவன் உணவுகளை அமைதியுடன் உண்கிறான். எனினும் ஏதோ சிந்தனையில் மூழ்கிப்போனவனாகத் தன்னை மறந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான்!
“என்னப்பா மதன்......சாப்பிடும் போதுமா உம்மூனு முகத்தை வைச்சுக்கிட்டுதான் சாப்பிடனுமா என்ன...? அம்மாகூட ஏதும் பேசக்கூடாதா?” யாதொரு உணர்வையும் காட்டிக் கொள்ளாமல் கேட்கிறார்.
“உங்ககிட்ட என்னம்மா பேச வேண்டி இருக்கு? எனக்குப் பல வேலைகள்; பல சிந்தனைகள்!” வேண்டா வெறுப்புடன் வெடுக்கனப் பேசுகிறான்!
“பெற்ற தாயிடம் கூடப் பேச நேரமில்லாமல் அப்படி என்னப்பா உனக்கு முக்கியமான வேலை?” என்று கூறியபடி இன்னொரு இட்டலியைச் சாப்பாட்டுத் தட்டில் வைக்கிறார்.
“ போதும்மா.....! போதும்மா.....! எனக்கு இருப்பது வயிறா அல்லது பானையா.......? நீங்கப் பாட்டுக்கு இட்டிலியைப் போட்டுக்கிட்டே இருக்கீங்க!” கோபமாகப் பேசுகிறான்.
“ஒரு வயசுப் பையன் சாப்பிடுறச் சாப்பாட்டையாப்பா நீ சாப்பிடுறே!
உன் போல வயசு பிள்ளைங்க நாளு ஐந்து இட்டிலிகளை அனாயாசமாகச் சாப்பிட்டுட்டு எவ்வளவு தெம்பா,திடகாத்திரமாக இருக்காங்க! உன்னைப் பார்த்தா பத்து நாள் நோய்ல விழுந்த மாதிரி இருக்க. பார்க்கச் சகிக்கில!” அம்மா வருத்தப்படுகிறார்.
“என்னால சாப்பிட முடிந்த அளவுதானே சாப்பிட முடியும்.அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுன்னு உங்களுக்குத் தெரியாதா?” அலுத்துக் கொள்கிறான். “சாப்பிடுற வயசில சாப்பிட்டத்தானே நீண்ட நாளுக்கு நோய் நொடியில்லாமல் வாழமுடியும். ஆரோக்கியமா இருந்தா ஓடியாடி உழைத்து நாளு காச சம்பாதிக்கலாம். எதிர்காலத்துக்குப் பணத்தைச் சேர்த்து வைக்கலாம். யாரையும் எதிர்பார்த்து வாழாம நிம்மதியா வாழலாம்!”
விரைவாகச் சாப்பிட்டுவிட்டு,அம்மாவுக்கும் காத்திராமல் எழுந்து கொள்கிறான்! அருகிலுள்ள குழிதட்டத்தில் கையைக்கழுவிக்கொண்டு அவன் போவதையே விரக்தியோடு பார்த்துக் கொண்டிருக்கிறார்! “ம்........இந்தக் காலத்துப் பிள்ளைகள் சொன்னால் எங்கே கேட்கிறார்கள்!” மனதுக்குள் எழுந்து வருத்தத்தைத் தானே பேசித் தீர்த்துக் கொள்கிறார். வேறு என்ன செய்ய முடியும்?
ஒருமுடிவுக்கு வந்துவிட்டார். இனி மகனிடம் பேசிப் பயன் ஏதும் வந்துவிடப் போவதில்லை என்பதை மட்டும் தெளிவாகப் புரிந்து கொள்கிறார்! பெற்ற கடமை இருக்கிறது அல்லவா? தெரிந்தோ தெரியாமலோ மகன் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாதது போல் பெற்ற தாய் இருந்து விட முடியாது அல்லவா?
தனக்குப் பிறந்த ஒரு பிள்ளையும் தன் எண்ணப்படி நடக்காமல் இருப்பது
அவருக்குப் பெரும் வருத்தமாக இருந்தது. வளர்ந்து விட்டப் பிள்ளளையின் சுதந்திரம் பற்றிச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவன் எண்ணப்படி வாழநினைக்கிறான். வாழ்ந்துவிட்டுப் போகட்டுமே.
நம்மக்காலத்தை எப்படியெல்லாமோ வாழ்ந்து முடித்துவிட்டோம். நம்மைப் போன்று ஏழ்மையிலும் வசதிக்குறைந்த நிலையிலும் வாழமுடிந்தது.ஆனால், இன்று பிள்ளைகள் நன்கு படித்து விட்டார்கள்.உலகப் போக்கு எப்படி இருக்கிறது என்பதையெல்லாம் புரிந்து கொண்டவர்களிடம் நமது நாட்டமையைக் காட்டினால் வாளா இருப்பார்களா என்ன? அவர்களின் விருப்பப்படி வாழ்ந்து விட்டுப் போகட்டுமே. இதில் நமக்கு என்ன குறை வந்துவிடப்போகிறது?
தன் மன உணர்வுகளைக் கட்டிப்போடுவதைத் தவிர இப்போதைக்குச் செய்ய மனதில் எந்த எண்ணமும் தோன்றவில்லை.விட்டுக் கொடுத்துப் போவோம் என்று நினைத்துக் கொள்கிறார். வயது போன நேரத்தில் எதையோ செய்யப் போய் ஏடாகூடமாக ஏதாவது நடந்து வம்பில் வந்து முடிந்துவிடப் போகிறது! இக்காலத்துப் பிள்ளைகளிடம் மிகவும் நிதானித்துப் பேசவேண்டியுள்ளது என்பதை மட்டும் நன்கறிந்து கொள்கிறார்.
மதனிடம் ஏற்பட்டுள்ள மாறுதல் அவருக்கு மனதில் ஒருவித பய அதிர்வினை ஏற்படுத்தியிருந்தது.அண்மைய காலமாகத் தன்னிடம் கூட அவன் மனவிட்டுப் பேசும் சூழல் அறவே அற்றுப் போனது ஆச்சரியமாகவும் அதர்ச்சியாகவும் கூட இருந்தது. தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வதில் விருப்பமுடைவனாக இருந்தான். தன்னைவிட்டு அவன் விலகிநிற்கிறான் என்பது மட்டும் புரிந்து கொள்ளமுடிந்தது.வழக்கத்துக்கு மாறாகக் தூங்குவதில் அதிக நாட்ட முள்ளவனாகவும், கண்கள் சிவந்து, தூங்கிவடியும் முகத்துடன் அவனது அருவருப்புத் தோற்றம் கண்டு மனம் வருந்தினார்.
அடுத்த வரும் சனிக்கிழமையிலாவது மதன் வீட்டில் தங்குவானா என்ற கேள்வி அவரது மனதில் அனலாய் வீசியது. சனிக்கிழமை வந்தாலே கலாமணியின் உள்ளம் ஒரு நிலையில் இருக்காது!
அன்று சனிக்கிழமை. வழக்கமாக மாலை ஆறு மணிக்கெல்லாம்,வீடு திரும்பிவிடும் மதன் இரவு ஏழு மணி ஆகியும் வீடு திரும்பாமல் இருந்தான்.வீட்டுக்கு வராமல் வெளியில் செல்லமாட்டானே? கைபேசியில் பலமுறை அழைத்தும் அவனிடமிருந்து எந்த பதிலும் இல்லை! “ம்…இன்றைக்கு என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லையே?” தனக்குள் புலம்பிக்கொள்கிறார்.
இரவு உணவு உண்ணத் தொடங்குகிறார் வேதாசலம்.மனைவி கலாமணி அமைதியுடன் உணவு பரிமாறுகிறார். “என்ன கலா….மதன் இன்னும் வேலை முடிந்து வீடு திரும்பலையா மணி எட்டாகுது? மதனிடம் அதிகம் பேசுவதில்லை என்றாலும் தந்தை எனும் முறையில் தினமும் அவனைப் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளத் தவறுவதில்லை!
“நானும் பல முறை தொலைபேசியில் கூப்பிட்டுப் பார்த்தேன் அவனிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.என்ன செய்யிறதுன்னே தெரியலே! கையைப்பிசைந்து கொள்கிறார் கலாமணி.
வேதாசலம் முகத்தில் கவலை தெரிகிறது.வீட்டுக்குத் தலைமையேற்க வேண்டியவன் இப்படி பொறுப்பில்லாமல் செயல்படுவது அவருக்கு வருத்தமே.
இந்தக் காலத்துப் பிள்ளைகள் எங்கே இதை எண்ணிப்பார்க்கின்றனர்!
இரவு உணவை முடித்துக் கொண்டு வரவேற்பு அறைக்கு வருகிறார்.தொலைக்காட்சியில் தமிழ்ச் செய்தி ஒளியேறிக் கொண்டிருந்தது! தமிழர்கள் பற்றிய பல்வேறு செய்திகள் இடம் பெற்றுக் கொண்டிருந்தன.
அன்று காலையில், அலுவலகம் ஒன்றில் காவல் துறையினர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையில் போதைப் பொருள் கடத்தல் குழுவினர் பலர் கைது செய்யப்பட்டனர். அப்போது தப்ப முயன்ற இருவர் சுட்டுக் கொல்லப் பட்டனர்! கொல்லப்பட்ட இரு இளைஞர்களின் படங்கள் திரையில் காட்டப்படுகின்றன.அந்த இருவரில் மதனின் படமும் மிகத் தெளிவாகக் காட்டப் படுகிறது!
பொறுப்பற்றப் பிள்ளையைப் பெற்றதற்காக வேதாசலம் முதல் முறையாக வெட்கித் தலைகுனிகிறார்!


முற்றும்

எழுதியவர் : வே.ம.அருச்சுணன் (26-Sep-12, 2:30 pm)
பார்வை : 456

மேலே