விநாயகர் சதுர்த்தி....??????

வெள்ளிக்கிழமை பேளூர் அருகில் நண்பரின் வீட்டு விருந்துக்காக சென்று கொண்டிருந்தேன். வழியில் சிறு சிறு வாகனங்களில் விநாயகர் சிலைகளுடன் இளைஞர்கள் ஆர்பாட்டத்துடன் சென்று கொண்டிருந்தனர்.
திடீரென்று ஒரு டெம்போவை நடுரோட்டில் நிறுத்தி டிரைவர் உட்பட அனைவரும் இறங்கி மேளதாளத்துடன் ஆட ஆரம்பித்தார்கள். பார்த்ததுமே புரிந்துவிட்டது அனைவரும் குடிபோதையில் இருந்தது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட, பின்னால் இருந்த லாரி டிரைவர் ஒலி எழுப்பினர். திடீரென்று அந்த இளைஞர்கள் அவரை நாராச வார்த்தைகளால் திட்ட ஆரம்பித்தனர் , சிறிது கடவுள் நம்பிக்கை இருக்கும் என்னையே முகம் சுழிக்க வைத்தது.
ஏன் இதையே இவர்கள் இரயில் வரும்போது நடுவில் வண்டியை நிறுத்தி ஆட்டம் போட்டிருந்தால் இதே விநாயகர் இவர்களுக்கு அருமையான மோட்சத்தை கொடுத்திருப்பாரே!!!!!!!

குடிக்காமல் விநாயகர் சிலை கரைக்க வருபவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். "குடித்துவிட்டு தான் என்னை கரைக்கனும்னு எந்த விநாயகர் சொன்னார்"????

இந்த விநாயகர் சிலைகளை எப்படித்தான் கரைக்கிறார்கள் என்று பார்க்க ஞாயிற்றுகிழமை மூக்கன் ஏரி சென்றேன், அங்கு கண்ட காட்சிகள் பதற வைத்தது.
இயற்கை எழில் மிகுந்து, பறவைக்கூட்டங்களுடன் காணப்பட்ட ஏரி இன்று வெறும் மாலைகளும், பிளாஸ்டிக் பைகளும், தம்ளர்களுமாக காணப்பட்டது.அதைப்பார்த்து பதைத்துக்கொண்டிருந்த தருணத்தில் ஒரு புத்தம் புதிய கார் வந்து நின்றது.

காரிலிருந்து இரண்டு இளம் பெண்களும், ஒரு ஆணும் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டே இறங்க, பெண் கையில் ஒரு அற்புதமான விநாயகர் சிலை( pop ), பெரிய கொடையுடன், பல வண்ண பெயிண்ட் செய்யப்பட்ட சிலை. அந்த ஆண் கையில் இரண்டு பெரிய பிளாஸ்டிக் கேரிபாக், ஒன்றில் இரண்டு காய்ந்து நைந்து போன மாலைகள்.( இவர்கள் திருமணத்தில் பயன்படுத்தியது போலும் ) மேலும் சிலபல குப்பைகள். அதை அப்படியே ஏரியில் வீசினார். பிறகு விநாயகரையும் தூக்கி வீசிவிட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடி முடித்த சந்தோசத்தில் சிரிப்புடன் புறப்பட்டார்கள் அந்த படித்த மேதாவிகள்.
ஏற்கனவே நீர்நிலைகள் எல்லாம் நீரின்றி அம்மணமாக கிடக்கிறதே, மீதமுள்ளதையும் அம்மணமாக்க முயள்கிறார்ர்களே என்று அவர்களை திட்ட வார்த்தைகள் தேடிக்கொண்டிருந்த வினாடியில், ஒரு மூதாட்டி இடுப்பில் ஒரு குழந்தை (பேரன் போலும்) கக்கத்தில் ஒரு மஞ்சள் பையுடன் வந்து நின்றார். குழந்தையை இறக்கிவிட்டு பையிலிருந்து ஒரு சிலையை எடுத்தார். களிமண் சிலை, அழகில்லை, உருவமும் முழுமையாக இல்லை, ஜோடனைகள் இல்லை, பிளாஸ்டிக் குடை இல்லை, ஆனால் பார்த்ததுமே புரிந்தது அது விநாயகர் சிலை தான் என்று. இவர்களே செய்திருப்பார்கள் போலும். அதை பேரனிடம் காட்டிவிட்டு புன்னகையுடன் நீரில் கரைத்தார். பிறகு மீண்டும் மஞ்சள் பைக்குள் கையை விட்டார், " என்ன குப்பை கொண்டு வந்து போட போகிறாரோ" என்று ஏளனமாக நினைத்த எனக்கு மிகப்பெரிய செருப்படியாக இருந்தது அவர் செயல்.
பையிலிருந்து ஒரு கைப்பிடி பொரியை எடுத்து வீசினார் மீன்களுக்கு, அசந்து விட்டேன் ஒருகணம்.
இதுவல்லவா விநாயகர் சதுர்த்தி.

விக்ரம்

எழுதியவர் : விக்ரம் (26-Sep-12, 4:16 pm)
பார்வை : 399

மேலே