நானும் காதலிக்கிறேன்

---- நானும் காதலிக்கிறேன் -----

ஐந்து முற்று புள்ளி
கீழே
ஒரு ஆச்சரிய குறி
உன் பாத சுவடு
உருவகபடுத்தலாம்.
ஆனால்
பட்டாளத்தான் பூட்ஸ் பாதம்
பழங்குடியின
பெண் மார்பில் பதிந்துள்ளதே
என்ன செய்ய?

வானவில் உரித்து
தறியில் கொடுத்து
சுடிதாராக
சூடி கொண்டவள் நீயென்று
எங்கனம் எழுதுவது....

அங்கங்கே கிழிந்து
அடுப்படி கரிதுனிப்போல சுருங்கி
அழுக்கேறிய உடுப்பை
அணிந்து திரியும்
சகோதரிகளை சந்தித்துவிடுகிறேன்
எந்த சந்திலாவது?

அகல் விளக்கொளியில்
உன் மீது சாய்ந்து
கோயில் குளத்து மீன்கள்
பசி தீர்க்க
பொறி தூவி
பொழுதுகழிக்க
எனக்கும் ஆசைதான்...
ஆனால் இங்கே
வாசலில் கிடக்கும்
பிச்சைக்காரியின்
உணவுக்கும் கற்புக்கும்
உத்தரவாதம் உண்டா?

தகனம் முடியும் வரை
தகப்பன் போல நேசித்திருப்பேன்
உன் கைகள் மேல் நான்
சத்தியம் செய்யலாம்
ஆனால்
ஒரு பிள்ளையை
மார்போடு சேலையில் முடிந்து
ஒரு மகளை அழுத்தி
விரல் பிடித்து
கையேந்தும் பெண் நிலைக்கு
காரணமானவனை
என்ன செய்ய?

ராவண சிறையில்
உன் ரவிக்கை கிழிந்திருக்கலாம்.
ராணுவ முகாமில் நீ
ராத்திரி தங்கியிருக்கலாம்.
நீ சீதைதான் நீருபிக்க
நான் தீக்குளிக்கலாம்..
ஆனால்
பாவைகளை
பலாத்காரம் செய்த
பாவிகளை
விலைமகனென்று
விடாமல் விளிக்குமா
இச்சமூகம்?

நெருப்பிட்டு கொளுத்தும்
செருப்பெடுத்து வீசும்
எனினும் பொருட்படுத்தாது
உன்னை
இழுத்து ஓட
இயலும் என்னால்.
ஆனால்
சாதிமத நெருக்கடியில்
சாகவிருக்கும்
ஒரு தாயின் தற்கொலையை
தடுக்க இயலுமா?

சிகப்பென்றால் நீ கங்காடி
நெருப்பென்றால் நீ செங்கொடி
உன்னை உயர்த்தி எழுத
உண்ணும் என்னால்
ஆனால்
வயதானவளா அவள் கிழடி
வாரிசில்லையா அவள் மலடி என
வாய்ப்பாடும் சமூகத்தை
என்ன செய்ய?

உன்னை தீண்ட தீண்ட
நத்தைப் போல்
நரம்புக்குள் ஊர்ந்தோடும்
மின்சாரத்தை உணர்வதிலும்
உல்லாசம்தான்...
ஆனால்
பாலியல் படுகொலையில்
பூப்படையாத
பச்சிளம் மொட்டுகள்
பல உதிர்ந்துவிட்டதே
என்ன செய்ய?

நீ ரசித்தால் ராதை
சிரித்தாள் சீதை
முறைத்தால் கண்ணகி
உவமை பாடி
கவிதை எழுதுவது
கைவந்த கலை எனக்கு...
ஆனால்
வாசனை திரவிய விளம்பரத்தில்
வரும் கன்னிப்பெண்கள்
கவர்ச்சி பொருளானதை
கண்டிக்க முடியவில்லையே
என்ன செய்ய?

சொல்லடி
இந்திய தேசம்
இப்படி இருக்கையில்
நீ எப்படி பெண்ணே
என்னை காதலிக்கிறாய்?

பறவையே உனக்கு
பரந்த வானம் ஒன்றை
பரிசாய் தருகிறேன்...
சிறகடித்து மகிழடி
என் சின்ன தேவதையே !
இப்படி பேசும்
என்னை எதிர்த்து
எப்போது கேட்பாயடி
" நீ யாரடா
எனக்கு சுதந்திரம் தர "?


---- தமிழ்தாசன்----

எழுதியவர் : ---தமிழ்தாசன்---- (1-Oct-12, 12:06 pm)
Tanglish : naanum kathalikiren
பார்வை : 378

மேலே