யாதும் ஊரே ! நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் . விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

யாதும் ஊரே !

நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .

விமர்சனம் கவிஞர் இரா .இரவி.

தமிழ்மணி புத்தகப் பண்ணை .281திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை .சென்னை .5. விலை ரூபாய் 150.

அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு கட்டமைப்பு அனைத்தும் மிக அருமை .பாராட்டுக்கள் .நூலின் உள்ளே மின்னூர் சீனி வரைந்துள்ள பெருங்கவிக்கோ வா .மு .சேதுராமன் ஓவியம் அற்புதம் .

வணிகவியல் பட்டதாரியான நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் படித்த படிப்பிற்கு ஏற்ற ஒரு வங்கி வேலை வாங்கி சராசரி மனிதனைப் போல வாழாமல் ,தந்தையின் வழியில் தமிழ்ப்பணி மாத இதழை 41 ஆண்டுகளாக தொய்வின்றி நடத்தி வருவது சாதனை .நல்ல உள்ளத்திற்கு எடுத்துக்காட்டு .

திரைப்பட நடிகர், நடிகை கவர்ச்சிப் படங்கள் இன்றி இதழ் நடத்துவது பாராட்டுக்குரியது . நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் இரா. மோகன்அவர்கள் குறிப்பிட்டார்கள் .ஒருவர் கையில் உள்ள பணத்தை விரைவில் கரைக்க வேண்டும் நிபந்தனை .சீட்டு விளையாண்டார் தோற்காமல் வென்றார் .குதிரை மீது கட்டினார் அதுவும் வென்றது .ஒரு இதழ் தொடங்கினார் பணம் முழுவதும் கரைந்ததாம் .இது நகைச் சுவை அல்ல உண்மை .பல சிற்றிதழ்கள் மாதம் தோறும் சில ஆயிரங்களை இழந்துதான் வெளிவருகின்றன. இப்படி ஒரு இதழுக்கு ஆசிரியராக இருந்துக் கொண்டு கவிதை, கட்டுரை எழுதி நூலும் வெளியிட்டு வருகிறார் நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் .தந்தையின் வழியில் மகன் நடக்க வில்லை என்பதுதான் இன்றைய குற்றச்சாட்டு .ஆனால் தந்தையின் வழியில் நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர்நடப்பது பெருமை .
இந்த நூல் பயண இலக்கிய நூல் .முத்திரை பதித்துள்ள அற்புத நூல் .நூல்ஆசிரியர் நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ள வைர வரிகள் சிந்திக்க வைத்தது .
" ஈழத் தமிழர்கள் இன்னல்களுக்கு இந்நூற்றாண்டில் வாழும் அனைத்துத் தமிழர்களும் பொறுப்பானவர்கள்தான் .அவர்கள் இந்தியாவின் வஞ்சத்தால் இன்றும் தொப்பூழ்க் கொடி உறவுகள் ஈழத்தைப் பெற்றுக் கொடுங்கள் என்றவர்களை முள்வேலிகளில் முடங்கி விட்டனர் .கொடூரம் என் நெஞ்சைப் பிழிகிறது . .நூல்ஆசிரியர் நெஞ்சை மட்டுமல்ல படிக்கும் வாசகர்களின் நெஞ்சையும் பிழிகிறது . ஈழத் தமிழர்கள் இன்னல்கள் நூலில் பதிவாகி உள்ளது .ஆனால் தனி ஈழத்தை என்றும் ஆதரிக்காத பேராயக் கட்சியை இன்று வரை தன் சுய நலத்திற்காக ஆதரிக்கும் கலைஞரை நூல் ஆசிரியர் ஆதரித்து எழுதி உள்ள கருத்து மட்டும் முரண் பாடாக உள்ளது .

புலம் பெயர்ந்து வாழும் வலி மிகுந்த அகதி வாழ்விலும் வருமானத்தில் ஒரு பகுதியை தமிழுக்கும் , தமிழருக்கும் செலவு செய்து தமிழ் வளர்க்கும் உயர்ந்த உள்ளங்களின் அன்பை நன்கு ஆவணப் படுத்தி உள்ளார் .பாராட்டுக்கள் .
குறிப்பாக இணையராக இருந்து விருந்தோம்பல் செய்து தமிழ்ப் பண்பாடு காத்து வருவதை நூலில் குறிப்பிட்டுள்ளார் .
வெளி நாட்டிற்கும் நம் நாட்டிற்கும் உள்ள வேற்றுமையை ஒப்பீடு செய்துள்ளார் .இன்றும் சென்னை தொடர் வண்டிகளில் வண்டிக்குள் எந்த நிலையத்தில் நிற்கிறது என்ற ஒலி வருவதில்லை .ஆனால் அயல் நாடுகளில் எந்த நிலையம் என்பதை ஒலியால் வண்டியின் உள் உணர்த்துகின்றனர் .தேம்சு நதி போல சென்னை கூவமும் மாற வேண்டும் என்ற ஆசையை எழுதி உள்ளார் .

இந்த நூலில் குறிப்பிட்டுள்ள ஈழத் தமிழர்களில் பலர் நான் அறிந்தவர்கள் .என் படைப்புக்களைப் பாராட்டியவர்கள் .லண்டன் நல்ல மனிதர்கள் சம்பந்தன் ,பொன் பாலசுந்தரம் போன்றவர்கள் பற்றியும் எழுதி உள்ளார் .அய்யா பொன் பாலசுந்தரம் அவர்கள் அவராகவே சமைத்து மீன் குழம்பு வைத்து விருந்து வைத்ததை எழுதி உள்ளார் .

" சொல்லொணாத் துயரைத் தாங்கி வாடும் ஈழத்து மக்களின் தனி ஈழம் மலர்ந்தால் மட்டுமே ஈழத்துச் சோகம் நீங்கும் என்பதை உலகமே உணர முடிகின்றது "
இந்த வைர வரிகளை உலகம் உணர வேண்டும் .

லண்டன் ,கனடா ,பாரீசு ,அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து ஆய்ந்து அறிந்து நூல் எழுதி உள்ளார் .
நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் கவிஞர் என்பதால் சில இடங்களில் கவிதையாக நன்கு பதிவு செய்துள்ளார். பயணித்த வானுர்தி தடங்களின் விபரத்தை ஆங்கிலத்தில் நூலின் இறுதியில் எழுதி உள்ளார் .இனி பயணம் செய்ய இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் .பாராட்டுக்கள் .

நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் பற்றிய குறிப்பு விரிவாக உள்ளது .பல பரிசுகளும் விருதுகளும் பெற்று, புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பொன் மொழியை மெய்ப்பிக்கும் விதமாக செயல்பட்டு வருகிறார் .பாராட்டுக்கள் .

இலக்கிய சுற்றுலா செல்லும்போது தான் மட்டும் செல்லாமல் தன் மனைவி பரிமளா அவர்களையும் உடன் அழைத்து சென்றது சிறப்பு .

தன் மனைவி பரிமளா பற்றி ஒரு கவிதையும் எழுதி உள்ளார் .

நங்கை பரிமளா நல்லாள்
நதியின் கரைபோல் இல்லாள்
மங்கையர் உலகம் போற்றும்
மகுடப் பொறுமையைச் சொல்லாள்
பொங்கும் வெள்ளம் தாங்கும்
புனித நதியின் பாதை
தங்கும் இன்பம் தவழ
தேம்சில் நடந்து சென்றோம் !
பயண இலக்கிய நூல்களில் சிறப்பிடம் பெறும் நூலாக வந்துள்ளது .இந்த நூலிற்கு விருதுகளும் பாராட்டுக்களும் கிடைக்கும் .

எழுதியவர் : இரா .இரவி (10-Oct-12, 6:50 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 309

சிறந்த கட்டுரைகள்

மேலே