நான் பெருமையடைகிறேன்

இயற்கை புன்னகை புரிந்தது! என்ற என் கவிதையில்,

ஆற்றின் அழகைப் புகழ்கிறாயே
அது என்னில் பிறந்து உருவானது – தெரியுமா
பொதிகை மலை கேட்டது!

அருவியின் அழகைப் பாடுகிறாயே
அது என்னில் தோன்றி எங்கும் வீழ்வது – தெரியுமா
வெள்ளிப் பனிமலை கேட்டது!

மலர்களின் அழகைக் கண்டு மகிழ்கிறாயே
அது என் வளர்ச்சியில் மலர்ந்தது – தெரியுமா
தாய்ச்செடிகள் கேட்டது!

என நான் எழுதிய போது ’தாய்ச்செடிகள் கேட்டது!’ என்பதில் எழுவாய் (தாய்ச்செடிகள்) பன்மையிலும், பயனிலை (கேட்டது) ஒருமையிலும் எழுதுகிறோமே என்ற தடுமாற்றம் ஏற்பட்டது. இருந்தாலும் விட்டுவிட்டேன். அப்பொழுது கவிஞர் வைரமுத்துவின் ’கல்வெட்டுக்கள்’ என்ற புத்தகத்தில் நான் வாசித்த செய்தியும், பகுதியும் ஞாபகத்திற்கு வந்தது.

ஒருமுறை கவிஞர் கண்ணதாசனுடனான வானொலி கலந்துரையாடலில் வைரமுத்து தன் சந்தேகத்தைக் கேட்டாராம்.

கவிஞர் கண்ணதாசனின் வெண்பா:

’சின்னஞ் சிறுவயதில் தேர்ந்த உணர்வினுக்கே
என்னபொருள் என்றே நான் இன்றுணர்ந்தேன் – அந்நாளில்
முத்தென்று சொல்லுதிர்த்த மோகக்கவிதை எழில்
சித்திரத்தாள் பாராமல் சென்றாள்’.

இந்த வெண்பா ‘சென்றாள்’ என்று முடிகிறது. வெண்பாவின் இலக்கணப்படி ’சென்று’ என்றோ ’செல்’ என்றோ முற்றுப்பெற வேண்டும். ‘சென்றாள்’ என்று முற்றுப் பெறுவது இலக்கணத்திற்கு முரணாகும், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று கவிஞர் கண்ணதாசனிடம் வைரமுத்து கேட்டாராம்.

அதற்கு அவர் ’பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரையாரும் எனக்குச் சுட்டிக் காட்டினார். ’கவிதையின் அழகுக்காக விட்டுவிட்டேன்’ என்றாராம். ’இலக்கணத்திற்காகக் கவிதையின் அழகைக் காவு கொடுப்பதைவிட கவிதையின் அழகுக்காக இலக்கணக் கோடுகளை அகலப்படுத்திக் கொள்வது பிழையன்று’ என்று கண்ணதாசன் சொன்னாராம்.

மேலேயுள்ள என் கவிதையை ’தாய்ச்செடிகள் கேட்டது!’ என்று எழுதியபோது நான் வாசித்த செய்தியை நினைவுபடுத்திக் கொண்டேன். எனவே முதலில் அப்படியே விட்டுவிட்டேன். நான் எழுதுவது மரபுக் கவிதை அல்ல. புதுக்கவிதையில் அவ்வளவு இலக்கணம் பார்க்க வேண்டியதில்லை. இருந்தாலும் நண்பர் அகன் சுட்டிக் காட்டியபின் மாற்றி விட்டேன்.

ஓசை நயம் கருதி ஒருமை பன்மை இலக்கணம் கவிதையில் தவிர்க்கப் படுவதுண்டு என்ற நண்பர் கவின் சாரலனின் கருத்து முற்றிலும் உண்மையாயிருந்தாலும், சத்தியமாக நான் என்னைக் கவிஞர் கண்ணதாசனுடன் ஒப்பிட்டுச் சொல்வது சரியல்ல. அப்படி நான் நினைக்கவுமில்லை. அவரோ பிறவிக் கவிஞர், கவி அரசர். நான் மிக மிகச் சாதாரணமானவன். கடந்த ஒரு வருடமாக மனதில் தோன்றுவதை நயமாகக் கொடுக்க எண்ணுகிறேன், அவ்வளவே.

’எழுத்து’ தள நண்பர்கள் இக்கவிதையை வாசித்தும், கருத்துச் சொல்லியும் இருப்பதில் நான் பெருமையடைகிறேன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Oct-12, 3:55 pm)
பார்வை : 391

மேலே