சத்துள்ள உணவு

ஒரு ஊர்ல அண்ணன் தம்பி ரெண்டு பேர்.
அண்ணனுக்கு படிப்பு வரலை.அதனால அவன் ஆடு மாடுகளை வயலுக்கு அழைத்துச் சென்று மேய்க்கத் தொடங்கினான்.
தம்பி கெட்டிக்காரன்.அவன் பள்ளிக்கூடம் சென்று படித்து வந்தான்.வகுப்பிலும் அவன் தான் முதலிடம்.
அவர்களுடைய அம்மா பெரிய மகன் அலைந்து திரிந்து மாடுகளை மேய்க்கிறான் என்பதற்காக அவனுக்கு நல்ல சாப்பாடு,முட்டை, பால் எல்லாம் கொடுப்பார்.
தம்பி பாடம்தானே படிக்கிறான் அவனுக்கு அதிக உழைப்பு இல்லை என்பதால் அண்ணனுக்குக் கொடுப்பதை விட குறைவாகவே கொடுப்பார்.
ஒரு நாள் அவங்க வீட்டுக்கு ஒரு உறவுக்கார பாட்டி வந்தாங்க.
அம்மா செய்வதைப் பார்த்து ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்க அம்மா கடினமான உழைப்பு மாடு மேய்ப்பவனுக்குத்தானே படிப்பவனுக்கு அவ்வளவு சக்தி விரையமாகாது என்றாள்.
பாட்டி சொன்னாங்க பெரியவன் மாடுகளை வயலில் அவிழ்த்து விட்டு விட்டு நன்றாக மரத்தடியில் படுத்துத் தூங்குகிறான்.
அவனுக்கு எந்த கவலையும் இல்லை.
ஆனால் படிப்பவனுக்குத்தான் அதிக உழைப்பு தேவைப்படும்.பாடங்களைப் படிக்கவும்,எழுதவும் ,மனனம் செய்யவும் ,பரீட்சைக்குத் தயாராகவும் என இவனுக்கு வேலை இருந்து கொண்டேயிருக்கும்.
மேலும் பள்ளியில் பல போட்டிகளில் கலந்து கொள்ளவும் செய்கிறான்.
இப்படி படிக்க விளையாட என அதிக சக்தி தேவைப் படும். படிப்பது என்பது சுலபமல்ல என்று கூறினாள்.
இதைச் சோதித்துப் பார்க்க அம்மாவுக்கு ஒரு உபாயமும் சொன்னாள்.
இரவு தூங்கும் போது இருவரின் தொண்டைக்குழியிலும் ஒரு உருண்டை வெண்ணையை வைக்கச் சொன்னாள்.
மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது மாடு மேய்க்கும் பெரியவனின் தொண்டைக் குழியில் வெண்ணை அப்படியே இருந்தது.
படிக்கும் சின்னவனின் தொண்டைக் குழியில் வெண்ணை உருகி விட்டிருந்தது.
பாட்டி சொன்னாள் 'படிப்பவனுக்கு எந்த நேரமும் அதே சிந்தனை,கவலை ,பயம்.அதனால் உடல் சூடாகி வெண்ணை உருகி விட்டது.
ஆனால் மாடு வீட்டுக்கு வந்த பிறகு மறு நாள் வரை பெரியவன் கவலைப் படுவதில்லை.
எனவே அவன் உடல் குளிர்ச்சியாக இருக்கிறது.எனவேதான் வெண்ணை உருகவில்லை.
அம்மா புரிந்து கொண்டு படிக்கும் சின்ன மகனுக்கும் நல்ல உணவு,பால்,பழம் எல்லாம் தரத் தொடங்கினாள்.