சொற்பொழிவாளருக்கு நரகமா?

பக்தி சொற்பொழிவாளர் ஒருவர் இருந்தார். உணர்ச்சிப் பெருக்குடன் அவர் ஆற்றிய சொற்பொழிவைக் கேட்க மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள்.

தன்னுடைய சொற்பொழிவைக் கேட்க கூட்டம் அதிகமாவதைக் கண்ட அவர் தனது சொற்பொழிவிற்கான கட்டணத்தை அதிகமாக்கிக் கொண்டார்.

இந்தக் கட்டணத்தை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே போனார்.

பல ஆண்டுகள் கழிந்தன. அவர் இறந்து போனார்.

அவரை எமலோகத்துக்குக் கொண்டு சென்றார்கள்.

பாவபுண்ணியக் கணக்குகளைப் பார்த்த சித்ரகுப்தன், "இவர் கணக்கில் புண்ணியம் ஏதுமில்லை. இவரை நரகத்திற்குக் கொண்டு செல்லுங்கள்" என்றார்.

இதைக் கண்டு திகைத்த சொற்பொழிவாளர், "என் பேச்சைக் கேட்டு எத்தனையோ தீயவர்கள் திருந்தியிருக்கிறார்கள். பலருக்கு நான் கடவுள் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளேன். எத்தனையோ நபர்களைக் கடவுள் பக்தியாளராக மாற்றியுள்ளேன். இப்படிப் பல புண்ணியச் செயல்கள் செய்த எனக்கு நரகமா?" என்று கேட்டார்.

"நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையே. நீங்கள் செய்த சொற்பொழிவை சும்மா செய்யவில்லை. அதற்கு தகுந்த ஊதியத்தைப் பெற்றுக் கொண்டீர்கள். அந்த ஊதியத்தையும் அதிகமாக்கிக் கொண்டே போனீர்கள். தொழிலாகச் செய்த அதற்கு புண்ணியம் எப்படி கிடைக்கும். நீங்கள் நரகத்திற்குச் செல்வதுதான் சரி." என்றார் சித்ரகுப்தன்.

இதைக் கேட்டுத் தலைகுனிந்து நின்ற அவரை எம தூதர்கள் நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள்.

எழுதியவர் : ராஜா (26-Oct-12, 3:02 pm)
சேர்த்தது : dine
பார்வை : 184

மேலே