நாய் சந்தை

ஒரு நாள், ஏழைக் குடியானவன் ஒருவன், தெருவில் சென்று கொண்டிருந்தான். அப்போது வழியில் அவனது பக்கத்து வீட்டுக்காரனைச் சந்தித்தான்.

ஏழையின் வீட்டருகே வசிக்கும் அவன், புதாவில் நடக்கும் சந்தைக்குச் சென்று விட்டு, மூட்டை நிறைய காசுகளுடன் வந்து கொண்டிருந்தான்.

“இன்று நல்ல வியாபாரம் போல் தெரிகிறதே” என்று மிகுந்த ஆர்வத்துடன் கேட்டான் குடியானவன்.

உடனே பணக்காரனான அவன், ஏழையைச் சீண்டிப் பார்க்க எண்ணினான்.

“ஆமாம்.. ஆமாம்.. இன்று நான் அரசனுக்கு ஒரு டஜன் நாய்களை விற்றுவிட்டு வருகிறேன்” என்றான்.

“அப்படியா?” என்று ஆச்சரியப்பட்டான் குடியானவன்.

“அரசர் நாய்களுக்கு நிறைய காசுகள் தருகிறார் என்பது உனக்குத் தெரியாதா?” என்று மேலும் கூறிச் சீண்டினான் பணக்காரன்.

“அடடா.. எனக்குத் தெரியாமல் போய் விட்டதே!” என்று வருத்தப்பட்டான் குடியானவன்.

“புதாவில் நாய்ச் சந்தை நடக்கிறது” என்று கூறி விட்டு தனக்குள் சிரித்துக் கொண்டே சென்றான் பணக்காரன்.

இதைக் கேட்ட குடியானவனுக்கு கொள்ளை மகிழ்ச்சி. அவனுக்கு பல நாய்கள் திரிந்து கொண்டு இருக்கும் இடம் தெரியும். அதனால் அடுத்த நாள், மிகவும் கஷ்டப்பட்டு, சில நாய்களை வளைத்துப் பிடித்துக் கொண்டு புதாவை நோக்கிப் பயணித்தான்.

நாய்கள் அனைத்தையும் மேய்த்துக் கொண்டு செல்வது அத்தனை எளிதாக இல்லை. இருந்தாலும் மிகுந்த பிரயாசைப்பட்டு, அவற்றை பிடித்துச் சென்று புதாவை அடைந்தான்.

அங்கு அரண்மனை வாசலை அடைந்தான். நாய்கள் மிகவும் சத்தமாகக் குரைத்தன. இங்குமங்கும் ஓடின. கட்டியிருந்த கயிற்றுக்குள் சிக்கிக் கொண்டன. இருந்தாலும் குடியானவன் அவற்றை கட்டியிழுத்து கொண்டு, அரண்மனை முற்றத்தை அடைந்தான்.

நாய்களுடன் வந்த குடியானவனைப் பைத்தியகாரன் என்று கருதி, சேவகர்கள் விரட்ட ஓடி வந்தனர்.

அப்போது முற்றத்தில் நடப்பவற்றை அரசன் மத்தயஸ் பார்க்க நேர்ந்தது. அவர் நீதிமான். அறிஞர். அதற்குக் காரணமும் இருந்தது. அவர் மிகுந்த சாமர்த்தியசாலி.

“இந்த நாயோடு வந்த குடியானவன் பின்னணியில் ஏதாவது காரணம் இருக்க வேண்டும்” என்று அரசர் எண்ணினார். குடியானவனைத் தன்னிடம் அழைத்து வருமாறு பணித்தார்.

புதாவில் நாய்ச் சந்தைக் கதையைக் கேட்டதுமே, குடியானவன் பக்கத்து வீட்டுக்காரனின் கொடூரமான எண்ணம் அரசருக்கு விளங்கியது.

“நல்லது.. உனக்கு அதிர்ஷ்டம் தான். இன்று தான் புதாவில் நாய்ச் சந்தை” என்று கூறி, குடியானவனுக்கு ஒரு பை நிறைய பொற்காசுகளைத் தந்தார். நாய்களை வாங்கிக் கொண்டார்.

குடியானவன் வீட்டை அடைந்ததுமே, முதலில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு நன்றி சொல்லக் கிளம்பினான்.

“இப்போது நானும் பணக்காரனாகி விட்டேன். எல்லாம் புதாவின் நாய்ச் சந்தையால் வந்ததே. உன்னுடைய பெருந்தன்மையான அறிவுரையால் வந்தது” என்று மகிழ்ச்சியுடன் நன்றி கூறிவிட்டுத் திரும்பினான் குடியானவன்.

இதைக் கேட்ட பணக்காரனுக்கு ஆச்சரியம். தான் விளையாட்டாகச் சொன்னது உண்மையானது கண்டு, தானும் அரசரிடம் சென்று பொற்காசுகளைப் பெற எண்ணினான்.

உடனே, மறுநாளே, ஊர் முழுதும் சுற்றி, பார்த்த நாய்களையெல்லாம் வாங்கிச் சேர்த்தான். மிகவும் கஷ்டப்பட்டு, குரைக்கும் நாய்களையெல்லாம் கட்டி இழுத்துக் கொண்டு புதாவின் அரண்மனையை அடைந்தான்.

அரண்மனை முற்றத்தில் நாய்களின் குரைக்கும் சத்தத்தைக் கேட்டதுமே அரசருக்கு தான் பார்க்கப் போவது என்ன என்று தெரிந்துவிட்டது. வாசலில் நாய்கள் சூழ பணக்காரன் நின்றிருப்பதைக் கண்டார்.

“சேவகர்களே.. நாய்களோடு வந்தவனை வெளியேத் தள்ளுங்கள்!” என்று ஆணை பிறப்பித்தார்.

“நான் புதாவின் நாய்ச் சந்தைக்காக வந்தேன்” என்று கத்தினான் பணக்காரன்.

“நல்லது.. நீ தாமதமாக வந்து விட்டாய். புதாவில் ஒரேயொரு முறை தான் நாய்ச் சந்தை நடந்தது. அது முடிந்து விட்டது” என்று கூறினார் அரசர்.

பணக்காரன் ஏமாற்றத்தோடு தன் தவற்றினை புரிந்து கொண்டு ஊர் திரும்பினான்.

எழுதியவர் : ராஜா (26-Oct-12, 3:28 pm)
சேர்த்தது : dine
பார்வை : 252

மேலே