கவிதையைத் தூக்கி வர ஆட்களா?
அராபிய சுல்தான் ஒருவன் கவிஞர்களின் கவிதைகளைக் கேட்டு, அவற்றை அப்படியே தானே திருப்பிச் சொல்லியோ அல்லது தன் அடிமைகளைத் திருப்பிச் சொல்லச் சொல்லியோ கவிதை பழையது என்று வெறுங்கையுடன் திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தான்.
அந்நாட்டிலிருந்த அஸ்மாயி என்பவர் மிகப் பிரபலமான கவிஞர்.
அரசனின் இந்தச் செயல் பிடிக்காமல் அரசனுக்குச் சரியான பாடம் கற்பிக்க விரும்பினார்.
ஒருநாள் அரசவைக்கு வந்தார். கஷ்டமான வார்த்தைகள் அடங்கிய கவிதையைச் சொன்னார்.
அரசனாலோ, அவனது அடிமைகளாலோ அதைத் திரும்பச் சொல்ல முடியவில்லை. திணறினார்கள்.
“கவிஞரே! உம்முடைய கவிதை உண்மையானது என்பதை உணர்ந்தோம். ஆகவே நீங்கள் எழுதியதைச் சமர்ப்பித்து, அதன் எடைக்குத் தகுந்தாற்போல் பொருளைப் பெற்றுச் செல்லுங்கள்” என்றார் சுல்தான்.
“அரசே உங்கள் சேவகர்களில் சிலரை அதை எடுத்து வர அனுப்புங்கள்” என்றார் கவிஞர்.
“என்ன ஒரு தாளில் எழுதியதைத் தூக்கி வர ஆட்களா?” என்று நகைத்தான் சுல்தான்.
“சுல்தான் அவர்களே, நான் இந்தக் கவிதையை இயற்றிய போது தாள் எதுவும் கிடைக்கவில்லை. என் தந்தை விட்டுச் சென்ற பளிங்குக் கல் ஒன்று இருந்தது. அதில் அந்தக் கவிதையைச் செதுக்கி விட்டேன். அந்தப் பளிங்குக் கல்லைத் தூக்கி வரத்தான் ஆட்கள் கேட்கிறேன்” என்றார் கவிஞர்.
சுல்தானும் அதன்படி ஆட்களை அனுப்பி வைத்து அதைக் கொண்டு வரச் செய்தான்.
ஒட்டகத்தின் மேல் ஒரு பளிங்குக் கல் வந்து இறங்கியது.
சுல்தான் தன் வாக்குறுதியைக் காப்பாற்ற தன் பொக்கிஷ அறையையே காலி செய்ய வேண்டியதாகி விட்டது.
சுல்தான் அன்றிலிருந்து கவிஞர்களைத் திருப்பி அனுப்பாமல் பிற மன்னர்களைப் போல் ஏதாவது பரிசு கொடுத்து அனுப்பத் தொடங்கினான்.