யாருக்குப் பரிசு?
ஒரு ஆசிரியர் மாணவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றார்.
பாறைகள் நிரம்பிய காடு அது.
ஆசிரியர் மாணவர்களிடம் இங்கு பல பாறைகளை இருக்கின்றன. இதில் ஏதாவது ஒரு பாறையை எடுத்து உருத்தெரியாமல் செய்ய முடியுமா? என்று கேட்டார். உருத் தெரியாமல் செய்பவருக்குத் தகுந்த பரிசு அளிக்கப்படும் என்றார்.
முதலில் ஒரு மாணவன் முன் வந்தான்.
அவன் ஆசிரியரிடம், “எனக்கு ஒரு வெடிகுண்டும் தீப்பெட்டியும் வேண்டும்” என்றான்.
அவனிடம் வெடிகுண்டும் தீப்பெட்டியும் அளிக்கப்பட்டது.
அவன் பாறைக்கு அடியில் வெடிகுண்டை வைத்து தீப்பெட்டியிலிருந்து ஒரு தீக்குச்சியை எடுத்து அந்த வெடிகுண்டைப் பற்ற வைத்தான்.
அந்தப் பாறை சுக்குநூறாக வெடித்துச் சிதறியது.
ஆசிரியர் அவனைப் பாராட்டினார்.
அடுத்து ஒரு மாணவன் வந்தான் அவன் மண்வெட்டி வேண்டுமென்று கேட்டான்.
அவனிடம் மண்வெட்டி அளிக்கப்பட்டது.
அவன் அந்த இடத்தில் ஒரு பெரிய குழியைத் தோண்டி அதில் ஒரு பாறையைத் தள்ளிவிட்டு மண்ணைக் கொண்டு மூடினான்.
பாறை இருந்த இடமே தெரியாமல் போய்விட்டது.
ஆசிரியர் மகிழ்ச்சியடைந்து அவனைப் பாராட்டினார்.
மூன்றாவதாக ஒரு மாணவன் முன் வந்தான்.
அவன் சுத்தியல், உளி வேண்டுமென்றான்.
அவன் கேட்டது அளிக்கப்பட்டது.
அவன் ஒரு பாறையைத் தேர்வு செய்தான். அதைச் செதுக்கிச் செதுக்கி ஒரு புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் சிலையை உருவாக்கி விட்டான்.
ஆசிரியரின் பாறையை உருத் தெரியாமல் செய்ய வேண்டும் என்கிற கேள்விக்கு
ஒருவன் வெடிகுண்டு வைத்துத் தகர்த்தான்.
இன்னொருவன் பூமிக்குள் குழி தோண்டிப் போட்டு மறைத்தான்.
மற்றவன் உளி சுத்தியலுடன் அதை சிலை உருவிற்கு மாற்றி விட்டான்.
இவர்கள் மூவரில் பரிசு யாருக்கு?
ஆசிரியர் மூன்றாமவனுக்குப் பரிசு வழங்கப் போவதாகச் சொன்னார்.
வெடிகுண்டு கொண்டு பாறையை அழித்து விட்டான் அது அழிவு சக்தி.
குழிதோண்டி பாறையை பூமிக்குள் போட்டு மறைத்து விட்டான். அதனால் பயன் ஏதுமில்லை.
ஆனால் உளி, சுத்தியலுடன் பாறையை செதுக்கி சிலையாக உருவாக்கிய ஆக்க சக்திக்குப் பரிசு என்றார்.
அப்போது அந்த பரிசுக்குரிய மாணவன் சொன்னான்;
இந்தப் பரிசுக்கு உகந்தவன் நானில்லை. அந்தப் பாறைக்குள்ளே ஏற்கனவே கிருஷ்ணன் சிலை இருந்தது. அந்தப் பாறையின் மற்ற பகுதிகள் அதை மூடிக் கொண்டிருந்தது. வேண்டாத பாறைகளை நீக்கினேன். அவ்வளவுதான்.
அவனுடைய அடக்கமான பதிலைக் கண்டு அனைவரும் பாராட்டினர். அவனே பரிசுக்குரியன் என்று பரிசையும் அளித்தனர்.