டாஸ்மாக் நோக்கி ஒரு பயணம்
தினந்தோறும் இரவில்
நட்சத்திர விடுதிகளின்
மதுக்கூடங்களில்
மது அருந்தி விட்டு வரும்
தன் மகனை நினைத்து
வருந்திய அந்தச் செல்வந்தர்...
‘குடி குடியைக் கெடுக்கும்
குடிப் பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்’
என்பதைத் தன் மகனுக்கு
எடுத்துரைக்க நினைத்தார்
டாஸ்மாக் மதுக்கடை வாசலில்
குடிகாரர்கள் செய்யும் அசிங்கங்களையும்
பார்களில் உள்ள அசுத்தங்களையும்
தன் மகனுக்குக் காண்பித்து
அவனைத் திருத்த நினைத்தார்
ஒருநாள் அந்தச் செல்வந்தர்
தன் மகனை அழைத்துக்கொண்டு
தெருக்கோடியில் இருந்த
டாஸ்மாக் மதுக்கடைக்குச் சென்றார்.
அதன் வாசலில்
அரை நிர்வாணமாக ஒரு குடிகாரர்
அசிங்கமான வார்த்தைகளால்
அலம்பல் செய்வதைக் காட்டினார்
பார் உள்ளே
வாந்தி எடுத்த நிலையில் சிலர்
சண்டைப் போட்டுக் கொண்டு
கெட்ட வார்த்தைகள் பேசும் சிலர்
இப்படிச் சில அசுத்த மனிதர்களையும்
இப்படிச் சில அசுத்தங்களையும்
இயல்பாய் இருப்பதைக் காட்டினார்.
இவையெல்லாம்
குடிப்பழக்கம் செய்யும் மாயங்கள்
இதிலிருந்து
என்ன தெரிகிறது உனக்கு.....?
என்று கேட்டார் தன் மகனிடம்.
அதற்கு அவனோ-
“இங்கு எல்லாமே மலிவாய்க் கிடைக்கிறது
நமக்கு பணம் மிச்சமாகும்”