சிவகாசி பட்டாசு தொழிலாளி.

நான் சிவகாசி பட்டாசு தொழிலாளி.
நான் சிந்துவது கவியல்ல கண்ணீர்துளி.
நீர் வாசிப்பது வார்த்தையல்ல உதிரத்துளி.

விண்ணிலே பூப்பந்தல் விரித்தாடும்.
வானத்தில் வர்ணஜாலம் வாரி இறைக்கும் .
வண்ண ஒளி வகைவகையாய் வெடித்து சிதறும்

பட்டாசு தொழிற்சாலையில் பிறக்கின்றோம்.
பட்டாசு தொழிலாலே வாழ்கின்றோம்.
பட்டாசு வெடித்ததனால் மாள்கின்றோம்.

தீபாவளிக்கு ஊருக்குப் போவர் உங்களில் பலர்.
தீபாவளிக்கு உலகைவிட்டு போவர் எங்களில் சிலர்.

யாரோ செய்கின்ற அஜாக்கிரதை.
நாங்கள் ஆகிறோம் அநாதை.

ஐம்பதோ நூறோ கொடுத்துவிட்டு
ஆறுதலை அரைகுறையாய் சொல்லிவிட்டுத்

தலைமறைவாய் போய்விடும் தலைவர்களால்.
தலைமேலே கைவைத்து நிற்போம் நாங்கள்.

உங்கள் வீட்டுச் சிறாரின் கை பிஞ்சுக்கை.
எங்கள் வீட்டு சிறாரின் கை நஞ்சுக்கை.

விளையாட்டு பொருள் தூக்கும் கைகளாலே
வேதிப் பொருள் தூக்கும் கொடுமை என்ன?

பட்டாசு கொளுத்தி கொண்டாட உங்களுக்கு
பள்ளிக்கு ஒரு நாள் விடுமுறை.

பட்டாசு தொழில் செய்வதாலே எங்களுக்கு
பள்ளி என்ற பேச்சிற்கே இடமில்லை.

பலவிதமாய் விதவிதமாய்ப் பட்டாசு
நீங்கள் வெடித்தாலே எங்கள் கையில் சிலகாசு.

நீங்கள் காசை கரியாக்கி களிப்படைகின்றீர்கள்.
நாங்கள் கரியை காசாக்கி கழி அடைகின்றோம்.

எங்கள் உயிரைப் பணையம் வைத்து
உங்கள் தீபாவளிக்கு உயிர் கொடுக்கின்றோம்.

எங்களை நீங்கள் மறந்துவிட்டு
ஏத்தும் தீபம் முறையல்ல.

சிந்தித்து உதவிட முன்வாருங்கள்.
சிவகாசி மக்களுக்குக் கைகொடுங்கள்.

உண்மையைச் சொல்ல வெட்கமில்லை.
உங்களை விட்டால் எங்களுக்கு யாருமில்லை.

உங்கள் வாழ்வில் மோட்சம் உண்டு.
எங்கள் வாழ்வில் விமோட்சனம் உண்டா?

- ஹுஜ்ஜா

( நாம் சந்தோசமாய் பண்டிகை கொண்டாட அந்தத் தொழிலாளிகள் ஒரு காரணமாக இருக்கிறார்கள். ஆகையால் நம்மளால் முடிந்ததை உதவலாமே.)

எழுதியவர் : hujja (8-Nov-12, 2:53 pm)
சேர்த்தது : hujja (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 930

மேலே