சிறையின் உரை !

என்னை ஒருமுறை
முத்தமிட்டவர்கள் இருவகை,
திரும்ப வராதவன் !
திரும்ப திரும்ப வருபவன் !

அழுக்குகளை
உருட்டிக் கூட்டி - உடையாய்
உடுத்தியிருக்கும்
கறுப்பாடுகள்
தருவித்து - தரம்பார்க்காமல்
வெள்ளாடை உடுத்தி
அழகு பார்க்கும் - அசுரர்களின்
அரசுக் குடில் !

அரிதாய்...
எப்போதாவது
கலி முற்றி களி திங்க
வருபவரும் ஒருசிலரை
காரியமும் செய்வதுண்டு !
கச்சிதமாய் உண்டு !

தவறு உங்கள் சொத்து !
ஆம், பெரிய தவறுகள்
செய்தவன் - வசதியாக
வருந்துகிறான் !
சிறிய தவறுகள்
செய்தவன் - வசதியின்றி
வருந்துகிறான் !

நீதி தேவதை
கண்சிமிட்டும் பொழுதினில்
தப்பித்தவனும் உண்டு !
கண்ணை கட்டிவிட்டு
தப்பியோடியவனும் உண்டு !

அரசியல்வாதிகளை
சலிக்க மறுக்கும்
சல்லடையாக
நிகழ்கால நீதித்துறை !
வளைக்க நெளிக்க
வசதியுடனே வார்க்கபடுகிறது
சட்டத்தின் சன்னல் !

நீதி நீர்த்துப்போகிறது !
அரசியலெனும் சாக்கடையில்
இரண்டற கலக்கும்போது !

தனிமையை விருந்தாய் கொடுத்து,
தவறை உணரச் செய்ய
உதவி செய்கிறேன் !
உணர்ந்தால் ஓடிவிடு !
உணர மறுப்பின் - என்னுள்
நிரந்தரமாக உறங்கிவிடு !
தாலாட்டுடனோ !
ஒப்பாரியுடனோ !

எழுதியவர் : வினோதன் (24-Nov-12, 8:31 pm)
பார்வை : 209

மேலே