!!!====(((ஊர்க்குருவி! - பகுதி - 7 )))====!!!

அந்த ஊருக்காக தன்னையே அர்பணித்து கொண்ட மங்காயி கிழவிக்கு பிற்காலத்தில் ''மங்காயி அம்மன் ஆலையம்'' என்று கோவில் கட்டி' அவளை குல தெய்வமாக வணங்கத்தொடங்கினார்கள் என்றாலும்' சிறிதும் ஆச்சர்யபடுவதற்கில்லை, அந்த ஊரில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் மங்காயி கிழவி ஏதோ ஒரு வகையில் அவசியமாகவே இருந்தாள்' பாரபட்சமின்றி அனைவருக்கும் தன்னால் இயன்ற வேலைகளை செய்து உதவி வந்தாள், ''அந்த பரந்த மனசுக்காரி அந்த ஊருக்கே சொந்தக்காரி''.

மாலை நேரம் 6:30 மணி இருக்கலாம்' மங்காயி கிழவி சொக்கலிங்கத்தின் வீட்டு தாழ்வாரத்து தரையில் ஒரு காலை நீட்டியும் மறுகாலை மடித்து போட்டும் அமர்ந்து இருந்தாள், சொக்கலிங்கத்தின் மனைவி பார்வதி சுடு சோற்றை ஈயத்தட்டில் போட்டு' மொச்சைப்பயிர் குழம்பு ஊற்றி மங்காயி கிழவியின் முன்பு கொண்டு வந்து வைத்தாள், மீண்டும் வீட்டிற்குள் சென்று ஒரு பித்தளை சொம்பில் தண்ணீர் மோர்ந்துகொண்டு வந்து மங்காயி கிழவிக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு நெளிந்த சில்வர் சொம்பில் தண்ணீரை நிரப்பிவிட்டு' சாப்டு ஆயா.., ''இன்னும் சோறு வேணுமுன்னா என்ன கூப்டு என்று கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்''.

மொச்சைப்பயிர் வாசனை மணம் மங்காயி கிழவிக்கு மிகவும் பிடித்திருந்தது, மங்காயி கிழவி மொச்சைப்பயிரோடு சாதத்தை அள்ளி சாப்பிட்டுகொண்டு இருந்தாள், எப்பொழுதும் சொக்கலிங்கத்தின் வீட்டு வாசலையே தனது இருப்பிடமாக கொண்டு வீட்டின் சுவரோரத்திலேயே தங்கி இருக்கும் அந்த வெள்ளை நிற பெட்டைநாய்' மங்காயி கிழவி சாப்பிடுவதையே வெறிக்க பார்த்துகொண்டு இருந்தது, வழக்கம்போல் அதற்கும் ஒரு உருண்டை சோற்றை திரட்டி வைத்தாள், அதுவும் தனது பங்கு கிடைத்த சந்தோசத்தில் சாதத்தை தின்று மகிழ்ந்தது.

இருபது நிமிடங்கள் கழிந்திருக்கும் மங்காயி கிழவி சாப்பிட்டு முடித்துவிட்டு' தனது ஈயத்தட்டை கழுவி ஊத்திவிட்டு, தட்டை எப்பொழுதும் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டு, அம்மா நான் போயிட்டு வரேன் தாயி என்று பார்வதியிடம் கூறிவிட்டு கிளம்பி போனாள் மங்காயி கிழவி.

இனி அவளை பிணமாகத்தான் பார்க்க முடியும் என்று அப்பொழுது எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இரவு எட்டு மணி சொக்கலிங்கம் டவுனுக்குக்கு போய் மண்டியில் நிலக்கடலை போட்டுவிட்டு வரும்பொழுது' முனியாண்டி ஓட்டல் கடையில் வாங்கி வந்து இருந்த' ரொட்டியையும் மட்டன் சால்னாவையும் குடும்பத்தோடு சாப்பிட்டுவிட்டு படுத்துவிட்டார்கள், ஆகையால் பார்வதி ஆக்கிய சோறும் மொச்சைப்பயிர் குழம்பும் அப்படியே இருந்தது.

''விடியற்காலை,'' பார்வதி வீட்டு வேலைகளை செய்துகொண்டு இருந்தாள், பார்வதியின்ஐந்து வயது மகன் குமரன் அம்மா பசிக்கிதும்மா சோறு போடும்மா' என்று அவள் முந்தானை சேலையை பிடித்துக்கொண்டே அவள் பின்னாலேயே தொடர்ந்துகொண்டு இருந்தான்.

காலங்காத்தால ஒரு வேல செய்ய உடமாட்டியே...'' என்று தன் மகனை கடிந்துகொண்டே அடுப்பங்கரைக்கு வந்த பார்வதி, ஒரு தட்டில் சோறு போட்டு அடசட்டியில் இருந்த மொச்சைப்பயிர் குழம்பை அகப்பையில் மோர்ந்து தட்டில் உள்ள சோற்றில் ஊற்றினாள்.

அம்மா பல்லிமா ...''!'' அம்மா பல்லிமா....''!'' என்று பக்கத்தில் நின்றுகொண்டு இருந்த பார்வதியின் மகன் குமரன் கத்த...!'' சோற்றில் ஊற்றிய மொச்சைப்பயிர் குழம்பில் ஒரு பல்லி செத்து கிடப்பதை பார்த்த பார்வதிக்கு மனசு திக்கென்றது.

எப்படி பல்லி கொழம்புல வந்து விழுந்து இருக்கும், நேத்து கொழம்பு கொதிச்சிகிட்டு இருக்கும்போது சட்டியை மூடாம குழாய்க்கி தண்ணி எடுக்க போனமே அப்போ விழுந்திருக்குமோ....??? இந்த எண்ணம் பார்வதியின் மனதில் உதித்த அதே கணம் மங்காயி கிழவியின் நியாபகம் அவளுக்கு உதிக்க' மனசு பட படக்க கை காலெல்லாம் அவளுக்கு நடுங்கத் தொடங்கிவிட்டது.

குமரா சோத்துல பல்லி கெடந்ததுன்னு ஆருகிட்டையும் சொல்லாத, அப்பா ராத்திரி வாங்கியாந்த வாயபழம் அங்க இருக்கு நீ போய் எடுத்து சாப்புடு,'' சொல்லும்போதே வாய் குழறியது அவளுக்கு.

பல்லிகிடந்த சோற்றை எடுத்து ஓரமாக ஒதுக்குபுறத்தில் மறைத்து வைத்துவிட்டு, வீட்டைவிட்டு வெளியே வந்து ஆட்டுகொட்டகையை நோக்கி ஓடினாள்,'' கை கால்கள் தட தடவென நடுங்கின அவளுக்கு,

பனை ஓலையால் வேயப்பட்ட ஆட்டுகொட்டகையை சுற்றிலும் பனை ஓலையால் படல் கட்டி அண்டை செய்யப்பட்டு இருந்தது'', கொட்டகையின் வாயிலும் பனையோலை படலால் சாத்தப்பட்டு இருந்தது.

மங்காயி ஆயா..........'' மங்காயி ஆயா.........'' என்று கூவி அழைத்தவாறே பனையோலை படலை நகர்த்திவிட்டு உள்ளே எட்டி பார்த்த பார்வதிக்கு மனசு பகீரென்று தூக்கிவாரி போட்டது, ஒரு கணம் அவளது இதயம் துடிப்பதையே நிறுத்தி மீண்டும் எஞ்சின் வேகத்தை மிஞ்சிக்கொண்டு இருந்தது.

மாட்டு சாணத்தால் பாங்காக மொழுகபட்டிருந்த கொட்டகைக்குள் வடக்கு புறத்தில் ஆடுகள் கட்டப்பட்டு இருக்க, தெற்கு புறத்தில் ஒரு கந்தல் துணியை விரித்து ஒருக்களித்தவாறே முடங்கி கிடந்தாள் மங்காயி கிழவி,''! வாயிலிருந்து தள்ளிய நுரைகள் பள்ளம் கண்ட வழியில் கோடாக ஓடி தாழ்வான ஒரு இடத்தில் வரைபடமாய் சூழ்ந்து நின்று தோய்ந்து கிடந்தது,'' அவளது வாயிலும் நுரை காய்ந்து குவிந்திருந்தது.

என்ன செய்ய...?'' ஊருக்காக உழைத்த அந்த ஊர்குருவி சத்தமில்லாமல் தனது சலனத்தை நிறுத்திவிட்டது, ஊரே அந்த அனாதைகாய் அழுதது,'' துரைராசு புதுப்புடவையை கொண்டுவந்து போர்த்தினான் அவளுக்கு,'' ஊர் சூழ அவளை பாடையில் சுடுகாட்டிற்கு எடுத்துச்சென்றனர்.

அந்த வெள்ளை நாய் தெருவோரத்தில் படுத்து வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தது,'' தெருவில் தன் சகாக்களோடு விளையாடிக்கொண்டு இருந்த குமரன், தன் சகாக்களிடம் எங்க வீட்டு சோத்துல பல்லி கெடந்தது,'' எங்க வீட்டு சோத்துல பல்லி கிடந்தது,'' என்று கூவி கூவி கூறிக்கொண்டு இருந்தான்.

------------- x x x -------------

முக்கிய குறிப்பு;.
==============
தயவு செய்து முதல் பகுதியில் உள்ள ''சம்பவத்தை மட்டும்'' ''மீண்டும் ஒருமுறை'' வாசித்துவிடுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் ''நன்றிகள் கோடி''....

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (4-Dec-12, 12:25 pm)
பார்வை : 233

மேலே