உன் சிங்காரக் கணையாழி.

சிறுத்த என் விரலினிலே உன்
சிங்காரக் கணையாழி என்
கறுத்த மேனிக்குத் தான் வெகு
பாந்தமாய் இருக்குதடி

இறுக்கமாய் அமைந்து அது
இருப்பினை நன்குணர்த்தி எங்கோ
நறுக்கென கடித்தது போல் என்
நாடியில் கலக்குதடி

உறக்கம் மறந்ததடி பெண்ணே
உடம்பும் கொதிக்குதடி இந்த
கிறக்கம் போக்கிடவே உன்னை
நாடச் சொல்லுதடி

மறக்கும் வழியுமில்லை உன்னை
அடைந்திட முடியாதோ தமிழ்
மறவர்கள் வாழ்வில் என்றும் சுடும்
துன்பம் தான் மலிவு.

சிறந்தது எதுவென்று உன்
கணையாழியையே கேட்டேன் அது
அறம் பல செய்தாலே நம்மை
இணைக்கும் வழியென்றது.

விரலினிற் போட்டு விட்டு நீ
ஒதுங்கியே நிற்பதென்ன உன்
சிரத்தினை நீட்டி விடு பின்
நான் என்றும் நான் உனதடிமை.

கறுத்த என் விரலினிலே உன்
சிங்காரக் கணையாழி வெகு
இறுக்கமாய் அமைந்ததனால் விரலில்
இரத்தமும் கட்டியதே!.

எழுதியவர் : தா. ஜோசப் ஜூலியஸ் (11-Dec-12, 1:10 pm)
சேர்த்தது : T. Joseph Julius
பார்வை : 70

மேலே