இறுதி ஊர்வலம்

உறுதியாய் உண்டு இறுதி ஊர்வலம்
உயிராய் பிறந்த மனிதர்க்கு பூமியில் !
வாழ்ந்திட வருவர் தனியாய் தரணியில்
வழியனுப்ப வருவர் கூட்டமாய் இறுதியில் !

கருவாய் உருவாய் தருவாய் வளர்ந்து
எருவாகும் ஒருநாள் எரித்திட்ட உடலும் !
பட்டங்கள் பெற்றாலும் பதவியில் இருந்தாலும்
சட்டங்கள் ஒன்றுதான் சவக்குழியும் ஒன்றுதான் !

ஆண்டுகள்பல வாழ்ந்தாலும் சொந்த வீட்டில்
சடலமானால் வைப்பதோ சிலமணி துளிகளே !
உயிருக்கு கிட்டிடா மாலை மரியாதை
உயிரற்ற உடலுக்கு தானே வந்திடும் !

பார்த்து பழகிட்ட வானமும் சாலையும்
பார்த்திடும் நம்மை பார்க்க முடியாதபோது !
விழிகளால் நோக்கி நாம்வியந்தவை எல்லாம்
விழிகளில் நீரோடு வழிநெடுக விடைபெற்றிடும் !

நம்மின் விலாசமறியா நண்பர்கள் பலரும்
வீடுதேடி வந்திடுவார் காடுசெல்லும் முன்னே !
நாமே மறந்தவரும் நம்மை மறந்தவரும்
வந்தாலும் வந்திடுவர் வாசலில் நின்றிடுவர் !

ஏழை பணக்காரர் உயர்ந்தவர் தாழ்ந்தவர்
இனங்களில் மாறுபாடு மதங்களில் வேறுபாடு
இருக்கும்வரை மனிதன் இறந்தால் சடலம்
உணர்ந்து வாழ்ந்தால் புரிந்திடும் வாழ்க்கை !

தூற்றியவரும் வருவர் துயில்வதைக் காண
வாழ்த்தியவரும் வருவர் வழியனுப்ப நம்மை !
இமைகளை மூடினால் பகலும் இரவாகிடும்
இன்னுயிர் பிரிந்தால் இவ்வுலகே மறைந்திடும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (12-Dec-12, 3:00 pm)
பார்வை : 241

மேலே