கனவு உலகம்

உண்டக் களைப்பினால் உறங்கிட்டேன்
கண்டேன் கனவில் ஒரு உலகம் !
சாதிமத சாயங்கள் இல்லை அங்கே
இனமென்ற சொல்லே தெரியவில்லை !
உணவுக்கு என்றும் பஞ்சமே இல்லை
வீதியோரத்தில் எவருமே இல்லை !
அமைதிக் காற்று தென்றலாய் வீசுகிறது
ஆரவார அரசியலின் சுவடே இல்லை !
இருப்பவர் இல்லாதார் பிரிவினை இல்லை
நோயின் அறிகுறி அறவே இல்லை !
லஞ்ச லாவண்யம் துளியும் இல்லை
வஞ்சம் வன்முறை எள்ளளவும் இல்லை !
பளிங்கு சாலைகள் பளிச்சென முகங்கள்
கட்டணமிலா கட்டாய கல்வி அங்கே !
கபடம் அறியா உண்மை உள்ளங்கள்
கண்ணியம் தவறா கனிவு நெஞ்சங்கள் !
ஒற்றுமை உணர்வு ஓங்கிடும் நெஞ்சங்கள்
அன்பும் பண்பும் தேங்கிய உள்ளங்கள் !
முதியோர் இல்லம் முற்றிலும் இல்லா
அதிசயம் நிறைந்த ஆனந்த உலகம் !
கனவில் கண்ட வியத்தகு உலகம்
நினைவில் கண்டிட விழைந்திடும் அடியேன் !
பழனி குமார்