மூடன் இவன்

மாலைப் பொழுது
மயக்கும் அழகை.....
சேலைக் கிளிகள்
காண்பதாகா என்றான்....

தாப்பா ளிட்டான்
தாயின் கணவன்....
அடித்துச்சொன்னான்
தலை நிமிராதே என்று

உரத்து குரலில்
ஒப்பாரியும் வையாதே.....
சிரத்தைத் தாழ்த்தி
சிந்தை கெட்டு வாழ் என்றான்.....

பசிக்குக் கஞ்சி
பாதி போதுமென்றான்
பாசம் மட்டும் இன்றி
அத்தனையும் பொழிந்தான்

முட்கள் விரிக்கும் குடைக்குள்ளே
மௌவல் மழை எதிர்பார்த்தாள்
மௌனம் மட்டும் மழையாய்ப் பொழிய
இவள் தேகம் நனையக் கண்டாள்

சோக நாட்டில்
தனி சாதி இவள்................
கால் கட்டிய
யானை இவள்............

சோலைக் கேசம்
செம்பட்டையாய்......
கீறல் போடும்
முள்ளாய்த் தொடர.........

எழுத்துப் பார்த்தல்
பாவமென்றான்
படித்தல் அது
சாபம் என்றான்

மூலைக்குள் முடங்கச்சொல்லி
பெண் மூளைக்கு விலங்கிட்டான்
அழுகை தேங்கும்
விழிப் பொய்கைக் குள்ளே
குமிழி விடும் அவளை விற்றான்

ச்சீ....
மூடன் ....
அவள் செய்த தவறேது?
அவன் விழுமியங்கள்
மண்டியிட்டு மரணிக்கட்டும்.....

எழுதியவர் : நேகம பஸான் (17-Dec-12, 1:04 am)
பார்வை : 107

மேலே