அழுத்தம் குறைந்த புயலானேன் .....!
குழப்பங்கள்
குதூகலிக்க , நான்
குறுநகையோடு நடித்து
உலவினேன் கடற்கரையில்..!
முந்திக்கொண்டு
வருகின்ற திரைகள்...,
பூரிக்கும் சிந்தனைகளை
அள்ளித் தந்தபடி ஆர்பரிக்கும்...!
பாரங்கள்
பஞ்சம் பிழைக்க ஓடிடும்..,
பதில் இல்லாக் கேள்விகள்
புறமுதுகு காட்டி தோற்றிடும்...!
மனம்
ஊஞ்சல் கட்டி ஆடிடும்..,
மகிழ்ச்சியில் திண்டாடியபடி
பிடித்தபாடல் ஒன்றை பாடிடும்...!
இனி
அழுத்தம் குறைந்த
புயலாய்க் கரைகடந்து..,
வீடுசெல்வேன் நிம்மதியாய்....!