மிளிரப் போகும் வைரங்கள்
மிளிரப் போகும் வைரங்கள்;;;;
(கவிதை)
போதையிலா வாழ்வுதனைப்
போற்றிடுவோம்! அதில்
போய்விழுந்த காளையரை
மீட்டிடுவோம்! நல்ல
பாதையினைக் காட்டியவரை
மாற்றிடுவோம்! பல
பாடங்களைக் கூறியவரைக்
காத்திடுவோம்!!
நீர்க்குமிழி வாழ்விதன்
நிரந்தர மறிந்தும்
சேர்க்கையில் கூடிய
சேற்றுப் பழக்கமதை
தீர்க்கமுடன் போராடி
தீயிடுவோம்! அதில்
தேறிவரும் தோழர்க்கும்
தோள் கொடுப்போம்!
வேண்டாத பழக்கந்தனை
வேகத்தில் பூண்டு
பூண்டோடு கைலாய
புகழிடந் துணிவோரை
கண்டதுமே ஒதுங்காமல்
கவனித்திருப்போம்! அவரை
மீண்டுவந்த வைரமென
மிளிர வைப்போம்!
முகில் தினகரன்
கோவை