நினைக்காத நெற்றிநடு..!!

கேள்விக்கும் பதிலுக்கும்
இடைப்பட்ட கணம்போல
இருக்குமோ இருக்காதோ
என்பது போல் எம்வாழ்க்கை

மயக்கத்தில் இறைவன்
மங்குகின்ற நேரத்தில்
மறந்து படைத்து விட்ட
மூன்றாம்பால் எங்களதோ ??

உருவத்தில் உங்களைப்போல்
உள்ளத்தில் இறைவனைப்போல்
பருவத்தில் பாலுணர்வோ
பெருமழையின் ஒருதுளி போல்!!

பார்க்கத்தான் முடியாது
பகுத்தெடுக்க இயலாது
கருசுமந்த தாய்கூட
கண்டறிய முடியாது!!

ஹார்மோன் என்பதென்ன?
ஆடை பட்ட அழுக்கா ?!
அடித்துத் துவைத்தால்
அழிந்து போவதற்கு?

வேண்டிக் கிடப்பவர்க்கு
கிடைக்காத வரம்கோடி!
வேண்டாமல் யாம்பெற்ற
வரமிதுவா ? சாபமா ?!

எங்கள் நிலைகண்டு
எப்போதும் சிரிக்கின்றீர்..!
சிந்தித்துப் பாருங்கள்
சிரிப்பின் சிருஷ்டிகர்த்தா நாங்கள்..

உணர்சிகளை மறைக்காமல்
உலகுக்குக் காட்டுகின்ற
உண்மையின் உயரத்தில்
எங்களுக்கே இடமுண்டு!!

போலியிலே புரள்கின்ற
புத்திகெட்ட மானிடரின்
கேலியிலே எங்களுக்கு
கிஞ்சிற்றும் கவலைஇல்லை

எங்கள் மரணத்தில்
ஏக்கங்கள் கிடையாது!
ஏனென்றால் எங்களுக்கு
மரணமே கிடையாது!!

மனம்மாறா மனிதர்விட்டு
மாறி நாங்கள் போகின்றோம்...
மறுபடியும் பிறப்பெடுத்து
மனம்மாற்ற சாகின்றோம் ...

எழுதியவர் : (29-Dec-12, 10:32 am)
பார்வை : 99

மேலே