4. யுத்தத்தின் சுவடாய் நான்..ஸ்நேகமுடன் ஸ்நேகா..!
"பாவையவள் வயது சாவை நோக்கும் வயதா..?" என,இத்தொகுப்பின் முதல் கவிதையாக இடம் பெற்றுள்ள விழிகள்.நடராசனின்,மலாலா குறித்த கவிதையை வாசிக்கும்போது,புதுடெல்லியில் சீரழிக்கப்பட்டு, உயிரிழந்த மருத்துவ மாணவியின் நினைவும் நமக்குள் வந்து போவதை தவிர்க்க முடியவில்லை.
இதன் எதிரொலியாகவே தேசிய அவமானத்தின் தேசிய அடையாளம் என்றும் அவர் சுட்டியிருப்பது நெஞ்சை தகிக்க வைக்கிறது.
எழுத்துச்சூறாவளியின் முதல்வணக்கம்,புதுவை காயத்ரியின் தமிழில்பேசு ஆகிய கவிதைகள்,எல்லா தொகுப்பிலும் இடம்பெறக்கூடிய பொதுவானவை.
"தினம்நீளும் பெரும் கனவாய் விதிக்கப்பட்டுவிட்ட அகதி மரங்களின்" நிலை குறித்துப் பொருமும் ரமேஷ்ஆலத்தின் கவிதை இத்தொகுப்பின் மிகச்சிறப்பான கவிதைகளுள் ஒன்றாகக் குறிப்பிட்டே தீரவேண்டும்.இதேபோல் அவருடைய மற்ற கவிதைகளும் வாசிப்பவரின் மனதை சிலகணம்,தங்கள் பிடியிலேயே வைத்திருப்பதை மறுக்க இயலாது.
குழந்தைகள்,இயற்கை,கடல்துளிகள்,கவிஞனின் வாழ்வு ஆகிய கவிதைகள் சொல்லவந்த பொருளைத் தெளிவாகவே சொல்லி இத்தொகுப்பிற்கு அழகூட்டுகின்றன.
நிலாகூ+ரியன் எழுதியுள்ள யார் தீவிரவாதி கவிதை,நடப்பு யதார்த்தத்தின் மீதே நின்று நம்மையெல்லாம் கேள்விகேட்கும்போது,இச்சமூகத்தின் ஒரு பகுதியாக அங்கம் வகிக்கும் வகையில்,நமக்கு பதில் சொல்ல வெட்கமாகவே இருக்கிறது.
இதுபொலவே தொகுப்பு முழுவதும் விரவிக்கிடக்கும் கவிஞர்களின் கவிதைகள் அனைத்தும் நாம் ஏற்கனவே,கேள்விப்பட்டது,படித்தது,பார்த்தது,அனுபவித்தது என அத்தனை விஷயங்களையும் புதுமையாகப் பேசுவதும்,அவற்றைச் சொல்லிச் சென்ற அழகில் வெற்றி பெற்றவையாகவும் இருக்கின்றன.
எழுத்துத் தளத்தில் ஏற்கனவே வெளிவந்து பலரின் பாராட்டுக்களைப் பெற்ற கவிதைகளாயிருந்தாலும்,ஒரு தொகுப்பில் இடம்பெறும் தகுதியுடன் இவை நிலைபெற்றதே பெரும் சிறப்பு என்பது எனது கருத்து.
இத்தாகுப்பின் மிக உயர்ந்த அம்சமாகக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியவை பன்னாட்டுப் படைப்பாளிகளின் கவிதைகள்..!
இலங்கை,லண்டன்,துபாய் என பல பகுதிகளிலிருந்தும் கவிதைகள் படைக்கப்பட்டிருந்தாலும்,அவர்கள் அனைவரின் குரலிலும் ஓங்கிஉயர்ந்து நிற்பது மானுட விடுதலை.
அடக்குமுறை,சர்வதேச பயங்கரவாதம்,இன துவேஷம்,நாடுபிடிக்கும் கொள்கை என சிக்கல்கள் எங்கிருந்து வந்தாலும்,அங்கெல்லாம் பாதிக்கப்படுவது,குடிமக்களே என்பதை பட்டியலிட்டு,உண்மையை நெஞ்சில் அறையும் விதமாக சொல்லிச் செல்கிறார்கள்.
இலங்கை ரோஷான் ஜெப்ரி,அரசிபாரதி,ஹேயேந்தினிப் ப்ரியா,அகரமுதல்வன் ஆகியோரின் கவிதைகளைப் படிக்கும்போது,நெஞ்சம் கனத்துதான் போகிறது.
குறிப்பாக இத்தொகுப்பைப் பற்றி முத்தாய்ப்பாகச் சொல்ல வேண்டுமெனில்,இந்த ஆண்டில் வெளிவந்த கவிதை தொகுப்புக்களில் மிகச்சிறந்ததாக நான் இதனையே சொல்வேன்.! இதை வாசித்துப்பார்த்த பின் அதில் உங்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்பதே எனது நம்பிக்கை..!
இத்துடன் முடிக்கிறேன்.மீண்டும் சந்திப்போம்..!