குடும்பம் என்பது புரிந்துணர்வுக்கான தளம்.

குடும்பம் என்பது புரிந்துணர்வுக்கான தளம். போராட்டத்துக்கான களம் அல்ல. குடும்பத்தின் ஆரம்ப அங்கத்தவர்களான கணவன் மனைவி எனும் இரண்டு ஜீவன்களுக்கிடையே எண்ணில் அடங்காத வேறுபாடுகள் இருக்கின்றன. இந்த வேறுபாடுகள் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் அமைந்துள்ளன. இதனால் தான் தரமான குடும்ப வாழ்க்கை என்பது இந்த வேறுபாடுகளைக் கவனத்தில் கொள்ளாத வாழ்க்கைதான்.

எப்போது நாம் ஒருவரை எம்மிலிருந்து வேறுபட்டவர் என எண்ணுகிறோமோ அப்போது அவரிலிருந்து எம்மை நாம் விலக்கிக் கொள்கிறோம் என்பது தான் உண்மை. ஏனெனில் இந்த வேறுபாடும் விலக்கலும் தான் பகைமை உணர்வை ஏற்படுத்துகின்றது. இந்தப் பகைமை உணர்வு நாளடைவில் போராட்டத்துக்கு வழி அமைத்து விடுகின்றது. ஒரு போராடத்தின் ஆரம்ப கர்த்தா எப்போதுமே ஒரு தனி மனிதன் தான்.

ஒரு மனிதனுக்குள் ஏற்படும் பகைமை உணர்வின் விளைவு தான் போராட்டத்திற்கு விதையாகின்றது. இந்த விதை மரமாவதோ அல்லது இன்னொரு விதைக்கு உரமாவதோ தவிர்க்க முடியாததாகும். விதை மரமாகுமானால் போராட்ட வடிவத்தை அடைந்ததுவிடுகிறது. உரமானால் இன்னொரு போராட்ட விதை மரமாவதற்கு உறுதுணையாக அமைந்துவிடுகின்றது.

இதனால் தான் பகைமை உணர்வு என்ற விதை என்ன வடிவத்தை எடுத்தாலும் ஆபத்தானதே. குடும்பத்தின் தளம் நட்பு. நட்பின் தளம் புரிந்துணர்வு. புரிந்துணர்வின் தளம் நிபந்தனையற்ற ஏற்றுக்கொள்ளல். நிபந்தனையற்ற ஏற்றுக்கொள்ளல் என்பது உள்ளதை உள்ளபடி உள்வாங்குதல். இந்தச் சிறப்பம்சங்களை பயில்வதற்குத் தரப்பட்டுள்ள அதி சிறந்த தளம் தான் குடும்பம்.

எழுதியவர் : கவிஞர் இனியவன் (4-Jan-13, 4:10 pm)
பார்வை : 215

மேலே