தேவதைகளின் தேவதை ! நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!

தேவதைகளின் தேவதை !

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் !

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி!

விகடன் பிரசுரம் ,757 அண்ணா சாலை. 2. சென்னை .விலை ரூபாய் 70.

நூல் ஆசிரியர் கவிஞர் தபூ சங்கர் படைப்பு என்றாலே காதலர்களிடையே நல்ல
வரவேற்பு உண்டு .அதனால்தான் இந்த நூல் குறுகிய காலத்தில் பல பதிப்புகள்
வந்து விட்டது .காதலுக்கு சாதிச்சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும்
இந்தக் காலத்தில் இது போன்ற நூல்கள் காதலுக்கு பச்சைக் கொடி
காட்டுகின்றன .நூலில் முதல் வரிகளே காதலின் மேன்மையை எடுத்து இயம்பும்
விதமாக உள்ளது ." உலகம் எட்டு பக்கம் காற்றாலும் எல்லா பக்கமும்
காதலாலும் சூழப் பட்டிருக்கிறது " .கவிதையும் ,வசனமும் கலந்த புதிய நடை .

காதலைப் பற்றி இந்த உலகில் யாருமே இன்னும் முழுமையாகத் தெரிந்துக் கொள்ள
வில்லை என்பதை உணர்த்தும் கவிதை .

காதலைப் பற்றி
முழுவதும் தெரிந்துக் கொள்ளத்தான்
நான் பிறந்திருக்கிறேன் !
தெரிந்து கொண்டதும்
இறந்து விடுவேன் !

கவிஞர் தபூ சங்கர் அவர்களிடமிருந்து அட்சயப் பாத்திரத்து அன்னம் போல
காதல் கவிதை வந்து கொண்டே இருக்கிறது .பாராட்டுக்கள் .காதல் கவிதை வந்து
கொண்டே இருப்பதால் அவர் ஆயுளும் நீண்டு கொண்டே போகும். இளமையாக
வைத்திருப்பது காதல் கவிதைகள் .

கவிதைக்கு ஒப்பீடு அழகு ! உவமை அழகு ! முரண் அழகு ! முனிவர்களின்
தவத்தையும் காதலனின் தவத்தையும் ஒப்பீடு செய்துள்ள கவிதை ஒன்று !

முனிவர்கள் கடவுளைப் பார்ப்பதற்காக தவம் இருக்கிறார்கள் !
நானோ ஒரு தேவதையைப் பார்ப்பதற்காக தவம் இருக்கிறேன் !

வானிலிருந்து பெய்யும் மழையையும் வஞ்சியின் வெட்கத்தையும் ஒப்பீடு செய்து
ஒரு கவிதை இதோ !

சிந்திய மழை மீதும் மேகத்திற்குள் போவதில்லை !
ஆனால் ,
ஒவ்வொரு முறையும் சிந்தும் வெட்கமெல்லாம்
மீண்டும் உன் கன்னத்திற்குள்ளேயே போய் விடுகிறதே !

கவிதைகளுக்கு இடையே வரும் வசனங்களும் கவித்துவமாக உள்ளது. பாராட்டுக்கள்
.இந்நூலை படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதல் மலரும் நினைவுகளை
மலர்விக்கும் விதமாக உள்ளது .இது ஒரு படைப்பாளியின் வெற்றி .இயல்பான
வசனங்கள் காதலுக்கு வலு சேர்க்கும் விதமாக உள்ளது .
கொஞ்சம் கவிதை, கொஞ்சம் வசனம், ,கொஞ்சம் இளமை ,கொஞ்சம் காதலி, கொஞ்சம்
புதுமை, நிறைய காதல் என்று கலந்த கலவையாக உள்ளது .படிக்க சுவையாக
உள்ளது காதலர்கள் படிக்க வேண்டிய நூல் பட்டியலில் இந்த நூலையும்
சேர்க்கலாம் ..

இலைகள் காய்ந்தால் உயிர் உள்ள கொடியும்
பட்டுப் போகிறது !
உன் உடைகள் காய்ந்தால் உயிரற்ற
கொடியும் உயிர் பெறுகிறதே !

கவிதைக்கு கற்பனை நன்று .காதலுக்கு அதிக கற்பனை உண்டு .அதிக கற்பனை அழகோ
அழகு என்று மெய்பிக்கும் கவிதை .

நீ யாருக்கோ செய்த அஞ்சலியைப் பார்த்ததும்
எனக்கு செத்துவிடத் தோன்றியது !
--------------------------------
என்னை உடைப்பததற்காகவே
என் எதிரில் சோம்பல் முறிப்பவள் நீ !

இப்படி பல கவிதைகள் நம் கண் முன் கண்ட காட்சிகளைக் காட்சிப்படுத்தி
வெற்றி பெறுகின்றன .இந்நூல் படிக்கும் வாசகர்களுக்கு இந்நூல் தனக்காக
எழுத்துப் பட்டது என்று என்னும் அளவிற்கு அனைவருக்கும் பொருந்தும் விதமாக
, மன அலைகளின் படப்பிடிப்பாக உள்ளது .

எல்லா தெய்வங்களும் தங்களைக் குளிப்பாட்டி விட
பூசாரி வைத்திருக்கும் போது !
நீ மட்டும் ஏன் ? நீயே குளித்துக் கொள்கிறாய் !
பூசாரியாக நான் வரட்டுமா ?

என்ற விண்ணப்பத்தை எள்ளல் சுவையுடன் மிக நளினமாக கேட்கின்றார் கவிஞர் தபூ சங்கர்.

"30 நாளில் இந்தி படிக்கலாம் "
என்ற புத்தகத்தை படித்து முடித்து விட்டேன் ! என்றாய் !
நீ 30 நாளில் ஒரு மொழியையே படித்து விட்டாய் !
3000 நாளாகியும் உன் விழியைப் படிக்க முடியவில்லை என்னால் !

விழியில் புகுந்து, மூளையில் தங்கி ,உதிர த்திலும் , உயிரிலும் கலந்து
விட்ட காதலுக்கு முதல் நுழைவாயில் விழி என்பதை நன்கு உணர்த்துகின்றார்

என் மனதை கொத்தி கொத்தி
கூடு கட்டி குடியும் ஏறி விட்ட
மனங்கொத்திப் பறவை நீ !
---------------------------------
ஒரு வண்ணத்துப் பூச்சி
உன்னைக் காட்டி
என்னிடம் கேட்கிறது
ஏன் இந்தப் பூ
நகர்ந்து கொண்டே இருக்கிறது ? என்று
-----------------------------
வண்ணத்துப்பூச்சி பேசுமா ? என்று கேள்வி கேட்டு விடாதீர்கள் .காதலனுடன்
வண்ணத்துப் பூச்சி பேசும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்போதுதான்
காதல் உணர்வுகள் புரியும் .காதல் கவிதைகளில் காரண காரியம் பார்க்கக்
கூடாது .அப்படியே ரசிப்பதுதான் அழகு .

மழை நேரங்களில் காகிதப் கப்பல் செய்து
விளையாடுகிற குழந்தை மாதிரி
உன் நினைவு நேரங்களில்
கவிதை செய்து விளையாடுகிறேன் !

பதச் சோறாக சில கவிதைகள் மட்டும் தங்கள் ரசனைக்கு எழுதி உள்ளேன்.
தேவதைகளின் தேவதை !நூல் படித்தால் கவிதை எழுத வராதவர்களுக்கும் கவிதை
எழுவரும் .கவிதை பிடிக்காதவர்களுக்கும் கவிதை பிடிக்கும். தேவதை என்ற
சொல்லே கற்பனைதான் தேவதையை இது வரை யாரும் பார்க்க வில்லை. தேவதை
போன்றவர்களை பார்த்து இருக்கிறோம் .இந்த நூலில் கவிதைகளில் கற்பனையே
ஆதிக்கம் செலுத்துகின்றது. பாராட்டுக்கள்.

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (5-Jan-13, 1:01 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 160

மேலே