உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே ! (பொங்கல் கவிதைப் போட்டி)
பொங்கல் பொங்கி படைத்திடும் நாளும்
எங்கள் வாழ்வில் இனிமேல் வருமா ?
உள்ளம் ஏங்கி துடித்திடும் துயரம்
உழவர் வாழ்வினில் இருத்தலும் தகுமா?
கோவணத் துணிக்கு ஒவ்வோர் உழவனும்,
தீவனத் தீனிக்கு ஏர் இழுக்கும் எருமையும்,
வக்குமின்றி திக்குமின்றி திண்டாடும் இந்நாளில்
பகலவனே உனக்கெங்கள் படையல் கிட்டுமா?
நிறம் குத்திச் சோடித்து, கரும்பு கேட்கும் ஆடுமாடு,
கருப்பட்டிப் பொங்கலுக்கு ஏங்குகின்ற என் பிள்ளை,
முகம்பார்த்து மூச்சடைத்து மன்றாட்டம் - இங்கு
கதிரவனே உனக்கேது கொண்டாட்டம் ?
பசளையிட்டு தரமிழந்த பச்சை வயல்களும்,
பயிர்நிலத்தில் முளைக்கும் பல்லடுக்கு மாடிகளும்,
பாடைக் கட்டிக் கூட்டிப் போகும் எங்கள் வாழ்வில்
படையல் கேட்டு வருகிறாயே இது நியாயமா ?
வயலோரம் கூடு கட்டி வாழ வந்த சிட்டுக் குருவி
வாயார திட்டிச் செல்லும் கதை தெரியுமா ?
வாசலிலே மாக்கோலம் தின்ன வந்த சிற்றெறும்பு,
வசை பாடிச் செல்லும் கதை உனக்குத் தெரியுமா ?
விலை கேட்டோம் தரவில்லை அரசாங்கம்,
மழை கேட்டோம் தரவில்லை ஆகாயம்,
உலை வைக்க வழியின்றி ஊசலாடும்- இந்த
உழவர் வாழ்வோ உலையிலிட்ட அரிசியாகும் !