எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தமிழ்   ஒரு   பூக்காடு பாவலர்  கருமலைத்தமிழாழன் 
 முத்தமிழே !    ஞாலத்தில்   முந்தி   வந்தே            
---மூவாமல்    கன்னியென   இலங்கு   கின்றாய்
தித்திக்கும்    அமுதமெனச்   சுவையாய்   நாவில்            
---திகழ்கின்றாய் !   முச்சங்கப்    புலவ   ராலே
எத்திக்கும்   புழ்மணக்கும்   ஏற்றம்   பெற்றாய் !            
---எழுந்துவந்தே   கடற்கோள்கள்    அழித்த   போதும்
வித்தாக    முளைத்துநின்றாய் !  மூவேந்   தர்தம்            
---வளர்ப்பினிலே    பூக்காடாய்   செழித்து   நின்றாய் ! 

 எழுத்திற்கும்    சொல்லிற்கும்   நெறிவ   குத்தே           
---எழுதுகின்ற   உலகத்து   மொழிக   ளுக்குள்
எழுத்திற்குள்   அடங்காத   உணர்வை;  காதல்            
---எழுப்புகின்ற   மெய்ப்பாட்டை   இல்ல   றத்தை
தழுவுகின்ற   கூடலினை   ஊடல்   தன்னை           
 ---தாய்செவிலி   பாங்கிபாங்கன்    வாயில்   கூற்றை
வழுவாத   மறத்தைவாழ்வின்     பொருளைக்   கூறும்            
---வண்தமிழோ   இலக்கணத்துப்   பூக்கா   டென்பேன் ! 

 நிலம்ஐந்தாய்   பகுத்ததனைத்   திணைக   ளாக்கி           
 ---நிகழ்கின்ற   நிகழ்வுகளைத்   துறைக   ளாக்கிப்
 புலப்பண்பைக்    கருஉரியாய்   அகத்தில்   வைத்தும்           
 ---புகழ்வீரம்   புறமாக்கிப்   பத்துப்   பாட்டாய்
நிலவிடும்எட்   டுத்தொகையாய்    அறமு   ரைக்கும்            
---கீழ்க்கணக்காய்க்    காப்பியமாய்    தொன்னூற்   றாறாய்ப்
பலப்பலவாய்   வாழ்வியலை   எதிரொ   லிக்கும்           
 ---பசுந்தமிழோ    இலக்கியத்துப்   பூக்கா   டென்பேன் !       

 நங்கையிடம்   தூதாக   நடக்க   வைத்து           
 ---நரிதன்னைப்   பரியாக்கி   சாம்பல்   தன்னை
மங்கையாக   உயிர்ப்பித்து   முதலை   உண்ட           
---மதலையினை   உமிழவித்துப்    பாய்சு   ருட்டி
 இங்குனக்கோ    இடமின்றேல்   எனக்கு    மில்லை           
 ---என்றாழ்வார்   பின்செல்ல   வைத்துப்   பாட்டால்
 எங்குமுள்ள    இறைவனையே   ஆட்டி   வைத்த           
---எழிற்றமிழோ    பக்திமணப்    பூக்கா   டென்பேன் ! 

 கீர்தனைகள்    எனப்புரியா    மொழியில்   பாடக்          
  ---கீழ்மேலாய்த்   தலையாட்டும்    மாடாய்   ஆனோம்
சீர்த்தகுரல்   கைக்கிளையும்   துத்தம்   தாரம்           
 ---விளரியொடு   உழைஇளியும்    ஏழாய்   நின்று
ஆர்த்தசுரம்   பன்னிரண்டு   பாலைக்   குள்ளே           
 ---அரும்பண்கள்    நூறோடு   மூன்றில்    தேனைச்
சேர்த்தளிக்கும்    துளைநரம்பு    கருவி   கொண்ட           
 ---செந்தமிழோ    இசைநிறைந்த    பூக்கா   டென்பேன் ! 

 போர்க்களத்தில்    அறம்பார்த்தும்   விழுப்புண்   மார்பைப்           
 ---பொருதுபெறப்   போட்டியிட்டும்   பிறர்இல்   நோக்கா
பேர்ஆண்மைக்    காளையரைக்   களவில்   பார்த்தும்           
 ---பெருங்காளை   அடக்கிவரக்   கற்பில்   சேர்ந்தும்
பார்சுற்றிக்    கடல்கடந்து    பொருளை    ஈட்டிப்           
 ---பகிர்ந்தளித்தும்   சாதியற்ற   சமத்து   வத்தில்
 ஊர்இணைந்தும்    வாழ்ந்திருந்த   சங்க   கால           
 ---ஒண்தமிழோ   வாழ்வியலின்   பூக்கா   டென்பேன் !             

 அன்றில்போல்    அன்பிணைந்த   காதற்   பண்பை           
 ---அழகான   இல்லறத்தை    மக்கட்   பேற்றை
துன்பத்தை    இன்முகமாய்    ஏற்கும்   நெஞ்சை            
---துவளாமல்   வினையாற்றும்   பக்கு   வத்தை
 நன்மைதரும்    மக்களாட்சி    மாண்பை    செங்கோல்            
---நடத்துகின்ற    அமைச்சர்தம்   மதியைச்   சொல்லும்
 சின்னவடி   முப்பாலால்   செழித்தி   ருக்கும்            
---சீர்தமிழோ    குறள்மணக்கும்   பூக்கா   டென்பேன் ! 

 வானத்தில்   ஊர்தியினைப்   பறக்க   விட்டு            
---வளியடக்கிக்    கடல்நீரில்    கலத்தை   விட்டு
 ஞானத்தால்    அணுப்பிளந்து   பூமிக்    கோளோ            
---ஞாயிற்றைச்   சுற்றுகின்ற    செய்தி    சொல்லி
வானளாவ    நிற்கின்ற    கோபு   ரங்கள்           
---வழியடைத்து    நீர்தேக்கும்    அணைகள்   என்றே
நானிலமும்    வியக்கின்ற   அறிவைப்   பெற்ற          
--நற்றமிழோ   அறிவியலின்   பூக்கா   டென்பேன் !  

நெருப்பாக   இருந்தவளோ   நெருப்புக்   குள்ளே           
 ---நிதம்வெந்து   மாயும்மன்   றல்கை   யூட்டை
ஒருகுலமாய்    வாழ்ந்தவரைப்   பகைமை   யாக்கி            
---ஒற்றுமையைச்    சிதைத்திட்ட   சாதிப்   பேயை
 உருக்குலைக்கும்    மூடத்தை   ஏற்றத்   தாழ்வை            
---உழல்கின்ற   பெண்ணடிமை   ஆண   வத்தைக்
கருவறுக்கும்   பாரதியார்   பாவேந்   தர்தம்            
---கனல்தமிழோ   புரட்சியூட்டும்    பூக்கா   டென்பேன் !             

 கொடிபடரத்    தேரீந்தும்   காட்டிற்    குள்ளே           
 ----கோலமயில்   குளிர்போக்கப்   போர்வை   தந்தும்
துடித்திட்ட   பறவைக்குச்   சதைய    ரிந்தும்            
---துலக்கிட்டார்    கருணையொன்றே   துணையா   மென்று
 வடித்திட்ட   யாதும்ஊர்    கேளிர்   என்னும்            
---வகையான   கருத்தாலே    உலகைச்    சேர்க்கும்
விடியலுக்கோ    அன்பென்னும்   விளக்கைக்   காட்டும்          
  ---வியன்தமிழோ   மனிதநேயப்    பூக்கா   டென்பேன் !  

முத்தமிழோ   அறிவியலின்   மொழியாய்    ஓங்கி            
---முன்னேறிக்    கணிப்பொறியில்   இடம்பி   டித்தே
 எத்திசையில்   இருப்போரும்   அறியும்   வண்ணம்           
 ---ஏற்றவகைக்   குறியீட்டில்   எழுத்த    மைத்து
வித்தாக    மென்பொருளும்    சொல்தொ   குப்பும்            
---விசைப்பலகை    எனப்பொதுவாய்   ஆக்கி   ஞாலம்
மொத்தமுமே    ஒருநொடியில்    படிக்க   மாறு            
---முகிழ்ந்ததமிழ்   இணையத்துப்   பூக்கா   டென்பேன் !  

ஆட்சிமொழி   தமிழ்என்னும்     பூவைச்   சேர்த்தே            
---அங்காடிப்    பெயரெல்லாம்   தமிழ்ப்பூ   வாக்கி
மாட்சிதரும்   மழலையர்தம்    பள்ளி   யெல்லாம்            
---மணக்கின்ற    தமிழ்ப்பூவை    மலரச்   செய்து
காட்சிதரும்    பொறியியலை   மருத்து   வத்தைக்            
---கவின்கொஞ்சும்    தமிழ்ப்பூவின்    தோட்ட   மாக்கி
நாட்டிலெல்லா    துறைகளிலும்   பதியம்   வைத்து            
---நற்றமிழின்    பூக்காட்டை   வளர்போம்   நன்றாய் !

மேலும்

இனிதாய் எண்சீரில் எழிலான தமிழுக்கு ஏற்றம் கொடுத்த கவிஞரின் கரங்களுக்கு காணிக்கையாக்குவோம் முத்தங்களாய் 16-Apr-2016 2:19 pm
இதுபோன்ற கவிதைகள்தான் கவிதை எழுத பல பாடங்களை கற்றுக்கொடுக்கிறது, நன்றி அய்யா 16-Apr-2016 12:35 pm
தமிழ் வரலாற்றை எண் சீர்களில் சுருங்க சொன்ன அழகு அருமை ஐயா .. வாழ்க தமிழ் வளர்க நற் கவிதைகள் 15-Apr-2016 6:22 pm

அன்பு  நண்பர்களே வணக்கம்.ப்ரதிலிபி  இணைய  தளம்  கொண்டாடப் படாத காதல்  என்ற  தலைப்பில்  போட்டி வைத்துள்ளது.  அந்தப் போட்டிக்கு நான் கவிதை அனுப்பியுள்ளேன்.  அந்தக் கவிதையை  கீழே  உள்ள  லிங்கில்  கிளிக் செய்து பார்த்து படித்து உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுங்கள். நீங்கள்  தெரிவிக்கும் கருத்தின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுப்பார்கள்.அதனால்  கொண்டாடப்படாத காதல் என்ற தலைப்பில்கருமலைத்தமிழாழன்  என்ற பெயரில் உள்ள என்னுடைய  கவிதையைப் படித்து உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன். http://tamil.pratilipi.com/event/kondaadapadaadha-kaadhalgal இல்உள்ள உங்கள் படைப்பின் தலைப்பின் மேல் Right click செய்து "Copy linkas" க்ளிக் செய்யவும்.பிறகு அதனை Notepad, MS - Word, மின்னஞ்சல், வாட்சப், முகநூல் போன்றுஎங்கு வேண்டுமானாலும் PASTE செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவும். அல்லது கட்டுரையின்தலைப்பின் மீது சொடுக்கி, உங்கள் கட்டுரையின் பக்கத்திற்கு சென்று, அங்கிருந்தும்"Share" செய்யலாம். *முடிவுகள் மற்றும் தேர்ந்தெடுக்கும் முறைகள் குறித்து ப்ரதிலிபியின் முடிவேஇறுதியானது. 

மேலும்

புதுமைப் பொங்கல்   பொங்கிடுவோம்

பாவலர்  கருமலைத்தமிழாழன்

 பொங்கிடுவோம்   பொங்கிடுவோம்
புதுமைப்பொங்கல்  பொங்கிடுவோம்          

 பாபருக்கும்    இராமருக்கும்                     
  பகைமையினை  நீக்கியே          
 தூபமிடும்     மதவெறியைத்                     
  துரத்தித்தூர  விரட்டியே        -பொங்          

 இலஞ்சத்தை   ஊழலினை                      
 இல்லையென  ஓட்டியே          
 நலதிட்ட   பலன்களெல்லாம்                      
 நலிந்தோர்கள்    கைசேர்த்தே     -பொங்           

 சாதிவெறி   வன்முறையைச்                      
 சாய்த்துமனம்    ஒன்றாக்கியே          
நீதிநெறி   நேர்மையிலே                      
 நிலைத்தநல   வாழ்வாக்கியே       -பொங்           

 சொல்லின்றி    உழைப்பினிலே                      
 செழிக்கின்ற  வளமாக்கியே          
 நல்வழியில்   அறிவியலால்                      
 நாட்டுநிலை  உயர்வாக்கியே     -பொங்           

 செங்கரும்பு    கதலியொடு                      
 செந்நெல்லின்  மணிகுவித்து           
மங்கலமாய்   மஞ்சளெழில்                      
 மனையெல்லாம்  திகழவைத்தே        -பொங்

 அன்பென்னும்    தோரணத்தால்                       
அகமெல்லாம்  அழகுசெய்து
முன்நின்று   அனைவரையும்                     
 முகம்மலர்ந்து   வரவேற்றே           --பொங் 

மேலும்

சமத்துவப்பொங்கல்   பொங்கிடுவோம்
பாவலர்
  கருமலைத்தமிழாழன்

கழிக்கின்றோம்   பழையவற்றைக்                  
காணவாரீர்   எனவழைத்தே
விழியெரிய   நேயத்தை        
 விளையன்பை   எரியவைத்தே
கழிவென்றே   மனிதத்தைக்        
 கருகவைத்துக்   கணியன்தன்
வழியடைத்துக்   கொளுத்துகின்ற        
 வன்முறையா    போகியிங்கே !

சாதிமணி    உலையிலிட்டுச்        
 சதிவெறியாம்   பாலையூற்றி
மோதிபகை    வளர்வெல்லம்        
 மொத்தமுமாய்    அதிலிட்டு
வீதிகளில்   குருதிவாடை        
 வீசிடவே    மனக்குடத்தில்
ஆதிக்கம்    பொங்வைத்தே        
 ஆடுவதா    பொங்கலிங்கே !

 காடுகளில்    உழைப்பவரை        
 கழனிசேற்றில்   புரள்பவரை
ஆடுகளின்   மந்தையாக         
அடித்தட்டில்    தாழ்ந்தவராய்
மாடுகளைப்    போல்விரட்டி        
 மனிதகுலம்    தலைகுனிய
கேடுகளை   விளைவிக்கும்       
  கேளிக்கையா    காணும்பொங்கல் !

 தெருவெல்லாம்   அன்பென்னும்
தோரணங்கள்    கட்டிவைப்போம்
கரும்புசுவை   மனமேற்றிக்
கனிவுததைக்   தூவிடுவோம்
அரும்மஞ்சள்    முகமொளிர
அணைத்தொன்றாய்க்    கூடிடுவோம்
உருவாகும்    சமுத்துவத்தில்
உயர்பொங்கல்    பொங்கிடுவோம் !    

மேலும்

அன்புள்ள அம்மா
பாவலர் கருமலைத்தமிழாழன்

அன்புள்ள அம்மாவே அந்த நாளில்
அதர்மந்தான் என்றறிந்தும் இரக்க மின்றி
என்னுடைய சுயநலத்தால் மனைவி சொல்லை
ஏற்றுன்னைச் சேர்த்திட்டேன் முதியோர் இல்லில்
உன்னுடைய உள்ளத்தின் குமறல் தன்னை
உன்கண்ணில் தெரிந்திட்ட ஏக்கந் தன்னை
என்னுடைய கல்நெஞ்சால் எண்ணி டாமல்
ஏதிலியைப் போலுன்னை விட்டு வந்தேன்!

சிற்றெறும்பு கடிக்குமுன்னே துடிது டித்து
சிறுசினுங்கள் செய்தாலும் ஓடி வந்து
நெற்றியிலே முத்தமிட்டுப் பூவைப் போல
நெஞ்சோடே எடுத்தனைத்துப் பாலை யூட்டி
பற்றுடனே தமிழூட்டிக் கல்வி யூட்டி
பார்பவர்கள் பாராட்ட வளர்த் (...)

மேலும்

சிணுங்குதல் என்றால் மூக்கால் அழுகுதல் என்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன், ஐயா! சிறுசிணுங்கல் என்பதைத்தானே குறிப்பிட்டுள்ளீர்கள்? "சிற்றெறும்பு கடிக்குமுன்னே துடிது டித்து சிறுசினுங்கள் செய்தாலும் ஓடி வந்து நெற்றியிலே முத்தமிட்டுப் பூவைப் போல நெஞ்சோடே எடுத்தனைத்துப் பாலை யூட்டி பற்றுடனே தமிழூட்டிக் கல்வி யூட்டி பார்பவர்கள் பாராட்ட வளர்த்தே ஊரில் கொற்றவன்போல் உயரவைத்த தாயே உன்னை கொடுங்கோலன் போலவன்றோ சிறைய டைத்தேன்!" ====இவ்வரிகள் நெஞ்சைப் பிசைகின்றன. 21-Oct-2014 7:00 pm

நாளையமனிதன்
பாவலர் கருமலைத்தமிழாழன்

அக்கம் பக்கம் அறிந்தவனாய்
அன்பு நெஞ்சில் நிறைந்தவனாய்
துக்கம் தோய்ந்த உறவுகளின்
துயரில் பங்கு கொண்டவனாய்
தக்க உதவி கேட்காமல்
தமராய் எண்ணிச் செய்பவனாய்
மிக்க நேயம் உடையவனாய்
மிளிர்ந்தான் நேற்று மனிதனிங்கே !

பொருளே வாழ்வின் குறிக்கோளாய்ப்
பொறுப்பே சிறிதும் இல்லானாய்
அருளை மறந்த மனத்தவனாய்
அடுத்தவர் வீழக் காண்பவனாய்
இருளின் செயலைச் செய்பவனாய்
இன்னல் விளைத்து மகிழ்பவனாய்
உருவில் மட்டும் மனிதனாக
உலவு கின்றான் இன்றிங்கே !

குண்டுகள் நிறைந்த உடலாகக்
குருதி யெல்ல (...)

மேலும்

வரவாய் அறிவு வளர்ந்தாலும் வானே கைக்குள் விழுந்தாலும் உரமாய்ப் புதுமை மலர்ந்தாலும் உலகே கடுகாய்ச் சிறுத்தாலும் மரத்தைத் தாங்கும் வேராக மனத்துள் அன்பு இல்லையென்றால் சிரமே இல்லா உடலாகச் சிதைந்தே மனிதன் அழிவானே ! .................................அருமை. 02-Oct-2014 2:01 pm

கொலை செய்தோம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

தாலாட்டித் தூங்கவைத்த
தளிர்கரங்கள் தளர்ச்சியிலே
கோலூன்றி வரும்போது
கொடுத்துதவ யாருமில்லை !

நோன்பியற்றிப் பால்தந்து
நெகிழ்ந்தவளை உடல்தளர்ந்து
கூன்முதுகாய்க் குனிந்தபோது
கூட்டிவர யாருமில்லை !

மதிகாட்டி அமுதூட்டி
மகிழ்ந்தவளை மனம்தளர்ந்து
முதிர்நிலையில் மகிழ்வூட்ட
முன்வருவோர் யாருமில்லை !

சான்றோனாய் வளர்த்தவளை
சாதித்துத் தளர்ந்தபோது
தேன்மொழியால் அரவணைத்துத்
தேற்றுவோர்கள் யாருமில்லை !

மனிதனாக்கி மணமுடித்து
மதிப்புயர உழைத்த (...)

மேலும்

இன்றைய கால கட்டத்தில் , இது போன்ற வரிகள் அவசியம் தேவை எனினும் , வலிக்கிறது .....கண்கள் பனிக்கிறது.... தாயைவிட அன்பும் மிக்கார் யாருமில்லை உலகில் எந்த காலத்திலும் .... அதனை உணர்வார் மகிழ்வார் என்றும். 08-Nov-2014 6:47 am
என் தாயை நினைக்காமல் இருக்க முடியவில்லை ...இதைப் படிக்கும் யாருக்கும் அப்படியே தோன்றும் என்று நம்புகிறேன் .. 23-Oct-2014 6:41 am
அதனை வரிகளும் அருமை.....சந்தம் சதிராடுகிறது......வலியின் வரிகள் மனத்தைக் கரைக்கிறது.... 02-Oct-2014 2:04 pm

நதிகளை இணைப்போம்
பாவலர் கருமலைத்தமிழாழன்

வெட்சிப்பூ தலைசூடி வேற்று மண்ணை
வென்றெடுக்கப் போர்புரிந்தார் மன்ன ரன்று
கட்சிப்பூ தலைசூடி ஆட்சி யாளர்
களம்நின்றார் ஆறுகளின் உரிமைக் கின்று
புட்கள்தம் நிமித்தங்கள் கேட்ட வாறு
புறப்பட்டார் களம்நோக்கி மறவ ரன்று
வெட்டியான வாய்பேச்சு பகைமை தூண்ட
வெகுண்டெழுந்தார் அணைநோக்கி மக்க ளின்று !

நிலத்திற்காய் நடந்திட்ட போர்கள் மாறி
நிலம்மீது பாய்கின்ற ஆறு கட்காய்
நலம்கேட்டு வாழ்திருந்த அண்டை மக்கள்
நல்லுறவு கெடநாளும் மோது கின்றார்
புலம்பெயர்ந்து தானாகப் (...)

மேலும்

ஆற்று வெள்ளம் வருமோ வராதோ ,இந்த கவி வெள்ளத்தில் மூழ்கி விட்டது போலிருந்தது 23-Oct-2014 6:38 am
அழகான கருத்து அருமையான நடை. எளிமையான சொற்கள்; கடுமையான சாடலுடன் வருத்தம் காட்டும் கவிதை. படிக்கப் படிக்க மகிழ்ச்சி! 21-Oct-2014 7:06 pm
வெள்ளத்தால் ஒருபகுதி மூழ்கிப் போக வெறுந்தரையாய் மறுபகுதி காய்ந்து போகத் துள்ளிவரும் மழைநீரோ பயனே யின்றித் தூரத்துக் கடலுக்குள் வீணாய் சேர கள்ளிப்பால் கொடுத்துப்பெண் சிசுவைக் கொல்லும் கயவர்போல் மாறிவிட்ட ஆட்சி யர்தம் குள்ளநெஞ்சில் தூர்வாரி தூய்மை செய்தே கூறுபோட்ட நதிகளினை இணைப்போம் ஒன்றாய் ! ....................................................ஒருநாள் இது நடக்கும் தோழரே. 02-Oct-2014 2:07 pm

என்ன வாழ்க்கை
பாவலர் கருமலைத்தமிழாழன்

காலையிலே எழுந்தவுடன் கண்ணிற் குள்ளே
கற்பழிப்பைக் களவுகளைக் கத்திக் குத்தை
வேலைப்போல் பாய்ச்சுகின்ற செய்தித் தாள்கள்
வேதனையை எழுப்புகின்ற வெறிக்கு ரல்கள்
ஆலையிட்ட கரும்பாக நெஞ்சு நோக
அவலத்தைக் காட்டுகின்ற கொடும்ப டங்கள்
மூலையிலே அமர்ந்திதனைப் பார்த்துக் கொண்டு
முடங்கிருக்கும் இந்தவாழ்க்கை என்ன வாழ்க்கை?

கண்முன்னே வன்முறைகள் மதத்தின் பேரால்
கடவுளரை இழிவாக்கும் கூக்கு ரல்கள்
புண்செய்யும் சாதிவெறி புன்மைப் பேச்சால்
புரையோடிக் கால்கைகள் வெட்டும் சத்தம்
தண்ணீர்க்க (...)

மேலும்

விரக்தியின் சத்தமில்லா சத்தம் இது வோ ? 23-Oct-2014 6:36 am
அத்தனையும் அருமை....படைப்பில் பதியுங்கள்.... 02-Oct-2014 2:09 pm

இயற்பெயர்- கி.நரேந்திரன்
இடம்- ஒசூர், தமிழ்நாடு
பிறந்த தேதி- 16-07-1951
பாலினம் ஆண்

மேலும்

வருகைக்கு நன்றி....இந்த கவிதா சமுத்திரத்தில் ஐக்கியமாகுங்கள்.......வாழ்த்துக்கள் தோழரே... 02-Oct-2014 2:11 pm
மேலும்...

மேலே