இந்தியாவின் சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவர், தொழில்நுட்ப வல்லுநர், இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர், இந்திய ஏவுகணை நாயகன், இந்திய விஞ்ஞான வளர்ச்சியின் தந்தை, சிறந்த ஆசிரியர் மற்றும் அனைவராலும் மதிக்கத்தக்க அற்புதமான பேச்சாளர் எனப் பல்வேறு முகங்களைக் கொண்ட ஏ.பி.ஜே அப்துல் கலாம் இளைஞர்களின் முன்மாதிரியாகத் திகழ்ந்தார். “கனவு காணுங்கள்?” என்ற மந்திரச்சொல் மூலம் பலரது வாழ்வில் மாற்றம் கொண்டுவந்த மாமனிதர். அவரது எண்ணங்கள் எப்படித் தங்களை மாற்றின என்பதை இளைஞர்கள் சிலர் பகிர்ந்துகொள்கிறார்கள்.

அர்த்தம் தெரியாம ஜாலியா சுத்திக்கிட்டிருந்தேன். காலேஜ் முதலாம் ஆண்டுல அப்துல் கலாம் சார் எங்க காலேஜுக்கு வந்தார். அவர் பேச்சு என்னுள் ஒரு மாற்றம் ஏற்படுத்தியது , அன்றிலிருந்து நாம் வாழும் வாழ்க்கை பிறருக்குப் பயன்பட வேண்டும் என்று சமூக சேவையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன்” எனத் தன் அனுபவங்களைக் கூறுகிறார் 3 -ம் ஆண்டு மாணவர் நிலவியல் கண்ணன்.

“வாழ்க்கையோட ஒரு மனிதன் எவ்வளவு உயரங்கள் சென்றாலும் எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்று தனக்கு உணர்த்திய புத்தகம் “அக்னி சிறகுகள்” எனச் சொல்லும் 3-ம் ஆண்டு காமர்ஸ் படிக்கும் கீர்த்தனா, நமக்குக் கிடைத்துள்ள இந்த அற்புதமான வாழ்வை எவ்வாறு வாழ வேண்டும் என்பதில் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்தவர் அப்துல் கலாம் எனப் பெருமையாகக் கூறுகிறார்.

“அப்துல் கலாம் சாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும், அவரைப் பார்க்கணும் என்பது நீண்ட நாள் கனவு” எனக் கூறும் மருத்துவ மாணவி ஆஷிகாவின் கனவு அப்துல் கலாமால் நனவாகியுள்ளது. அந்தச் சம்பவம் தன் வாழ்வில் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது என்ற பூரிப்புடன் சொல்லும் ஆஷிகா, தனக்குப் பிடித்த ஓவியம் ஒன்றை அப்துல் கலாமுக்குப் பரிசாகக் கொடுத்துள்ளார். அப்போது, “ நீ ஒரு சிறந்த மனிதராக உயர சேவை ஒன்றே சிறந்த வழி ஆகும்” என அவர் சொன்ன வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன என்கிறார் அவர்.

“இப்போ நான் வெஜிடேரியன், ஆனா ஒரு காலத்துல வெறித்தனமா நான்வெஜ் உணவுகளைச் சாப்பிட்டுவந்தேன். எனது மாற்றத்துக்குக் காரணம் அப்துல் கலாம்தான்” எனக் கூறுகிறார் 3 -ம் ஆண்டு இதழியல் படிக்கும் மாணவர் ஜெய் சந்திரன். மனித உயிர்களை மட்டும் இன்றி பிற உயிர்களையும் நேசிக்க வலியுறுத்திய உன்னத மனிதர் அப்துல் கலாம் என ஜெய் சந்திரன் நெஞ்சம் நெகிழ்கிறார்.

அப்துல் கலாமின் எதிர்கால இந்தியா 2020 கனவுகள் நிறைவேறவும் அவர் விரும்பிய லட்சிய மாணவர்களாக மாறவும் நாம் அனைவரும் பாடுபடுவதே அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலி என மனதில் பட்டதைச் சொல்கிறார் கார்த்திகா.

இறுதிவரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் எளிமையான வாழ்க்கையும், அவரது இனிமையான பேச்சும் எல்லோரையும் கவர்ந்தன என்பதில் வியப்பில்லை. ‘எதிர்கால இந்தியா இளைஞர்கள் கையில்’ என்ற அவர் “கனவு காணுங்கள்! அந்தக் கனவை நினைவாக்கப் பாடுபடுங்கள்” என்னும் வாக்கியத்தை இளைஞர்களின் மனதில் வேரூன்றச் செய்தவர். உலகம் போற்றும் விஞ்ஞானியான கலாமின் பொன்மொழிகளும், கவிதைகளும் இளைஞரின் உள்ளத்துக்கு வலுவேற்றிக்கொண்டேயிருக்கும்.