படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

பொதுவாக நாம் நினைப்பதற்கு மாற்றான நாம் அறிந்திடாத காரணங்கள்


Close (X)

வழி : AUDITOR SELVAMANI கருத்துகள் : 0 பார்வை : 4011
6

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்துவிட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே.... 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது. இந்த இதழில் வீதியெங்கும் விளைந்து கிடக்கும் குப்பைமேனி பற்றி அறிந்து கொள்வோம்... 'குப்பையில் கிடக்கும் கோமேதகம்’, 'சேற்றில் முளைத்த செந்தாமரை’ எனச் சொல்வார்களே... அதற்கு முற்றும் பொருத்தமானது, குப்பைமேனி. வாய்க்கால், வரப்பு, சாலையோரங்கள், குப்பைமேடுகள் எனக் காணும் இடங்களிலெல்லாம் துளிர்த்துக் கிடக்கும் குப்பைமேனி... மனிதனைக் காக்கும் அற்புத மூலிகை என்பது, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? குப்பையான மேனியைக் குணப்படுத்தும்! 'உணவே மருந்து... மருந்தே உணவு’ எனச் சொன்ன முன்னோர்களின் அறிவை, கை கொள்ளாததன் விளைவு, பல்வேறு பிணிகளால் பின்னப்பட்டுக் கிடக்கிறது, நம் உடம்பு. இப்படி, நோயால் குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால்தான் இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்திருக்குமோ... என ஆச்சரியப்படும் வகையில் இருக்கிறது, இதன் பயன்பாடு. குப்பைமேடுகளில் வளர்வதால்... இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. பூனைவணங்கி! இதை, 'மார்ஜால மோகினி’ என வடமொழியில் அழைக்கிறார்கள். 'மார்ஜாலம்’ என்றால் பூனையைக் குறிக்கும். பூனைவணங்கி’ என்ற பெயரும் இதற்கு உண்டு. 'குப்பைமேனியில் உள்ள கந்தகச்சத்து, பூனையின் கண்களுக்கு எரிச்சலைக் கொடுப்பதால், அதன் அருகில் வரும்போது பூனையானது கண்களை மூடிக் கொள்ளும். அதேசமயம், ஆரோக்கிய குறைவான உணவை உண்பதால் பூனைகளுக்கு ஏற்படுகிற நஞ்சினை நீக்குவதற்கான மருந்து, குப்பை மேனியில்தான் இருக்கிறது. எனவே, கந்தகத் தாக்குதல் குறைவாக இருக்கும் இரவு வேளைகளில் சென்று, குப்பைமேனி இலைகளை பூனைகள் உண்ணும். அதனால்தான் பூனைவணங்கி என்று பெயர் வந்தது' என்று இதற்கு விளக்கம் சொல்கிறார்கள். குப்பைமேனி சிறுசிறு கிளைகளுடன் உள்ள அடர்த்தியான செடி. இலையின் ஓரங்கள் ரம்பத்தின் பற்களைப் போன்று இருக்கும். பச்சை நிறத்தில் மிளகு போன்ற காய்கள் இதில் காய்க்கும். இது, விதை மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் இலைகளின் அமைப்பே வித்தியாசமானது. மாற்றடுக்கில் அமைந்துள்ளதால், உச்சிவெயில் நேரத்தில் ஓர் இலையின் நிழல், அடுத்த இலையின் மீது விழாது. குடற்புழு நீக்க மருந்து! குப்பைமேனி குணமாக்கும் நோய்களின் எண்ணிக்கை ஏராளம். இதன் இலை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன்பாடு நிறைந்தவை. குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி, அப்படியே நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கி உலர வைக்க வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி, ஆற வைத்து வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால்... பேதியாகி மலத்துடன் வயிற்றுப் பூச்சிகள், கிருமிகள் வெளியேறிவிடும். இலையை பொடி செய்து சாப்பிட்டும் பூச்சிகளை வெளியேற்றலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான அற்புதத் தீர்வு, இதன் இலையும், வேரும். குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். இதற்கு ஆங்கில மருந்துக்கடையில் ஒரு குப்பியை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதைவிட குப்பைமேனி இலையை அரைத்து சாறெடுத்து, குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்தாலே போதுமானது. வயது வித்தியாசமின்றி பலரும் இன்று மூல நோயால் அவதிப்படுகிறார்கள். காரமான உணவு உண்பது; சரிவிகித உணவாக இல்லாமல் புரதம் நிறைந்திருக்கும் உணவை மட்டும் உண்பதால் ஏற்படும் மலச்சிக்கல் ஆகியவைதான் மூல நோய்க்கு முக்கியமான காரணங்கள். இந்நோய்க்கு எளிதான தீர்வு, குப்பைமேனி. அறுவை சிகிச்சைக்கும் அசைந்து கொடுக்காத மூலத்தை, நிர்மூலமாக்கும் ஆற்றல் குப்பைமேனிக்கு இருக்கிறது. குப்பைமேனியை வேருடன் பிடுங்கி, நிழலில் உலர்த்தி சூரணம் செய்து, 5 கிராம் அளவு எடுத்து பசு நெய்யோடு சேர்த்து 48 நாட் களுக்கு காலை, மாலை என இருவேளைகளும் உண்டு வந்தால்... ஆசன மூலம், பக்க மூலம், சிந்தி மூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலை மூலம், கொடி மூலம், கண்டமாலை என எட்டு வகையான மூல நோய்களும் கட்டுப்படும். தோல் நோய் குணமாகும்! ஆஸ்துமா, சைனஸ்... போன்ற நோய்களைக் குணமாக்கும் ஆற்றலும் குப்பைமேனி இலைக்கு உண்டு. இது, உடலில் வெப்பத்தை உண்டாக்கி, நாள்பட்ட கோழையைக்கூட வெளியேற்றி விடும். இலையை உலர்த்தி சூரணம் செய்து, சின்ன நெல்லிக்காய் அளவு தேனில் கலந்து கொடுத்து வந்தால்... இருமல், இரைப்பு, கபம் குணமடையும். சொறி, சிரங்கு போன்ற பல்வேறு தோல் நோய்களுக்கு, குப்பைமேனி தைலத்தை 15 நாட்கள் தொடர்ந்து தடவி வந்தால்... 'ஸ்கின் பிராப்ளமா... எனக்கா?’ எனக் கேட்கும் அளவுக்கு 'அடடா’ மாற்றத்தை உணர்வீர்கள். இப்படி, தலைவலி, வாத நோய், படுக்கைப் புண்கள்... என இது தீர்க்கும் நோய்கள் ஏராளம், ஏராளம். தான், குப்பையில் வளர்ந்தாலும் மனிதர்களின் நோய்களை அறுக்கும் குப்பைமேனி ஆராதிக்கப்பட வேண்டிய ஒன்று.


வழி : VIBA கருத்துகள் : 0 பார்வை : 11931
22

திருக்குறள் மூலமாக இந்தியாவை இணையுங்கள்!'' இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக தமிழுக்காக தமிழர் அல்லாத ஒருவர் குரல் கொடுத்துள்ளார். இந்திக்கு ஆதரவாகவும் ஆங்கிலத்துக்கு எதிராகவும் நாடாளுமன்றத்தில் நாளும் விவாதங்கள் நடந்துவரும் சூழலில், ஒரு வடநாட்டு எம்.பி எழுந்து, ''வட இந்தியர்கள் தமிழைக் கற்க வேண்டும்'' என்று சொன்னதோடு, ''திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகளின் தினமாகக் கொண்டாட வேண்டும்'' என்றும் கோரிக்கை வைத்திருப்பது அனைவரையும் மலைக்க வைக்கிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில்தான் இந்த அதிசயம் நடந்தது. அந்த எம்.பி-யின் பெயர், தருண் விஜய். பஞ்சாபியான இவர், இப்போது இருப்பது உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில். தருண் விஜய் மாநிலங்களவை உறுப்பினராவதற்கு முன்பு, 20 வருடங்களாக ஆர்.எஸ்.எஸ்-ஸின் இந்தி ஏடான பஞ்ச ஜன்யாவில் பணியாற்றி ஆசிரியராகவும் இருந்தவர். இவருக்கு தி.மு.க தலைவர் கருணாநிதி, தானே கையெழுத்திட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு திருக்குறளை அனுப்பியுள்ளார். அவரைச் சந்தித்தித்தோம்... ''தமிழுக்காகவும் திருக்குறளுக்காகவும் நாடாளுமன்றத்தில் முழங்கியுள்ளீர்களே... என்ன காரணம்?'' ''தமிழ் மொழியின் மீதுள்ள அளவில்லாத பற்று காரணமாகத்தான் நான் அப்படிப் பேசினேன். நம்முடைய வரலாற்றில் தமிழர்கள் சிறப்பு வாய்ந்த இலக்கியங்களைக் கொடுத்துள்ளனர். இந்திய நாகரிகத்துக்கு தமிழர்களது நாகரிகம் பெரும் பங்களித்துள்ளது. தமிழ் அரசர்கள், ஞானிகள், கவிஞர்கள் போன்றவர்களின் பங்களிப்பினால் திருக்குறள் போன்ற அரிய வகை நூல்களைப் பெற்றுள்ளோம். ராஜராஜ சோழன் போன்ற சோழ மன்னர்களும் பாண்டிய மன்னர்களும் முதன்முதலாக கொடிபிடித்து மிகவும் கடினமான கடல்களைக் கடந்து, நமது நாகரிகம், கலாசாரம் மற்றும் மொழியையும் பரப்பியுள்ளனர். இந்தியாவில் இதுபோன்று வேறு யாரும் சாதிக்கவில்லை. ஆனால், இந்த முத்திரையை பதித்த சோழ, பாண்டிய அரசர்களைப் பற்றி இந்திய பள்ளிகளின் பாட புத்தகங்களில் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், சேர்க்கப்படவில்லை.'' ''அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?'' ''காரணம், டெல்லியை ஆண்டவர்கள் ஆணவம் மிக்கவர்களாகவும் அறியாமை உடையவர்களாகவும் இருந்தனர். உபநிடதங்களும் ராமாயணமும் சொல்லுவதே சரி என்று இருந்துவிட்டார்கள். ஆனால், திருக்குறள் என்ன சொல்லுகிறது என்பதை எந்த வட இந்தியராவது அறிந்திருப்பாரா? இல்லை. இந்த தேசத்தின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கெடுதி விளைவித்து வருகிறோம் என்பது எங்களிடையே இருக்கும் கவலைக்குரிய விஷயம். ஏன் எங்கள் மொழியான இந்திக்கும்தான். இந்தி மொழி என்பது கங்கை மாதிரி. அது எளிமையாக விரிந்து பாய வேண்டும். அன்பு செலுத்த, இரக்கம் காட்ட, ஏன் நட்பு கொண்டாட பயன்பட வேண்டும். ஆனால், அதை அரசு இயந்திரத்தை வைத்து பயணிக்கக் கூடாது. உத்தரவின் மூலமாகவோ சட்டத்தைப் போட்டு கட்டுப்படுத்தக் கூடாது.'' ''மொழி தொடர்பாக உங்களது கோரிக்கைகள் என்னென்ன?'' ''ஒரு வட இந்திய மொழி மேலாதிக்கம் செய்து அரசு இயந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது. தமிழையும் மற்ற தென்னிந்திய மொழிகளையும் வட இந்திய பள்ளி கல்லூரிகளில் படிக்கும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அப்போதுதான் ஒருமைப்பாடு வளரும்.'' ''திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்கக் கோருகிறீர்கள். இது உங்கள் கருத்தா? கட்சியின் கருத்தா?'' ''இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இதை இத்தோடு விட்டுவிடாமல், ஆட்சியில் இருப்பவர்களிடமும் எங்கள் கட்சித் தலைவர்களிடமும் வலியுறுத்துவேன். கட்சித் தலைவர் அமீத் ஷாவையும் சந்தித்து இதுகுறித்து பேசுவேன். என்னுடைய மொழியான சமஸ்கிருதம் மற்றும் இந்தி மீது முழு மரியாதை உண்டு. ஆனால், நம் நாடாளுமன்ற சுவர்கள், மைய மண்டபங்கள், தூண்கள், கதவுகளில்கூட சமஸ்கிருதம், ஆங்கில மொழிகளில் கல்வெட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழில் ஒரு கல்வெட்டுகூட இல்லை. மகாராஷ்டிராவில் சிவாஜி பெயர் மட்டும்தான் இருக்கும். எங்கேயாவது ராஜராஜ சோழன் பெயர் இருக்கிறதா? ஆனால், தமிழர்கள் தங்கள் குழந்தைக்கு சிவாஜி என்று பெயர் வைக்க தவறுவது இல்லை. ஏன் ஒரு சிறந்த நடிகர் வி.சி.கணேசன் சிவாஜி கணேசனாகவே வலம்வந்தார். நமக்குள்ள இடைவெளியை போக்க ஒரு பாலம் அமைக்க திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்கக் கோருகிறேன். உலகிலேயே இந்தியாதான் உச்சத்தில் இருக்க வேண்டும் என்கிற பெருமை எல்லாம் கொண்டாடும்போது, 'இந்தி பெல்ட்’தான் இந்தியா என்று நினைத்துக்கொள்ளக் கூடாது.'' ''தமிழை வட இந்தியர்கள் படித்தால், தென்னிந்தியர்கள் இந்தி படிக்க வேண்டும் என்பீர்களா?'' ''நீங்கள் என்னுடைய மொழியை தெற்கே அறிமுகப்படுத்த விரும்பினால், அது உங்களுடைய விருப்பம். இதில் கொடுக்கல்-வாங்கல் வியாபாரம் என்பது என்னுடைய நோக்கமாக இருந்தால், அது முழுமையாக தோல்வியைத்தான் கொடுக்கும். என்னுடைய நோக்கம் வட இந்தியர்கள் தென்னியந்திய மொழிகளை அறிய வேண்டும் என்பதுதான். சமகாலத்தில் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்துக்கும் மீனவர்கள் பிரச்னைக்கும் வட இந்தியர்கள் எத்தனை பேர் வருத்தப்பட்டார்கள்? ஆனால், காஷ்மீர் பிரச்னை என்றாலும் சரி, என்னுடைய மாநிலத்தில் உள்ள பிரச்னை என்றாலும் சரி, தெற்கே எப்படியெல்லாம் மனிதாபமானத்துக்காகப் போராட்டம் நடத்துகிறார்கள் என்பதையும் நான் அறிந்துள்ளேன். இந்தப் பிரிவினை சுவரை இடித்துத் தள்ள வேண்டும். இதுதான் என்னுடைய தமிழ் பற்றின் நோக்கம்.'' - சரோஜ் கண்பத்


வழி : VIBA கருத்துகள் : 0 பார்வை : 2467
18

சும்மா இருக்கிறது என்கிறது சுலபமில்லை. பிறந்த குழந்தை கூட கை காலை உதைக்கிறதே? அதுக்கு என்ன தெரியும்? நாம் எல்லாருமே அறியாமலே பல விஷயங்களை செய்து கொண்டு இருக்கிறோம். இதயம் துடிக்கிறதுலேந்து, மூச்சு விடுகிறது போல பலது. ஒரு கதை. ஒரு கோவில். புதுசா ஒரு மணியக்காரர் வந்தார். எல்லா விஷயங்களையும் ஒரு அலசல் செய்யணும்ன்னு பார்த்தார். கோவில்ல நடக்கிர ஒவ்வொரு காரியத்தையும் கவனித்தார். சுவாமிக்கு நைவேத்தியம் செஞ்ச பிறகு பிரசாத உருண்டை வினியோகத்தை பாத்தார். ஏதோ ஒரு நியமத்தில அதை எல்லாம் வினியோகிச்சாங்க. சும்மா கோவில் தூண்ல சாஞ்சு கொண்டு இருந்த ஒத்தனுக்கும் கொடுத்ததை பாத்தார். அப்புறமா அர்ச்சகரை கூப்பிட்டு "யார் அது? ஏன் கொடுத்தீங்க?" ன்னு கேட்டர். "அவர் ஒரு சாது. ரொம்ப நாளா கொடுத்து வரோம்'" ன்னு சொன்னாங்க. எதுக்கு தண்டமா இப்படி கொடுக்கிறீங்க, நிறுத்துங்கன்னு உத்திரவு போட்டார். அடுத்த நாள் சாதுவுக்கு உருண்டை கிடைக்கலே. என்ன விஷயம்ன்னு விசாரிச்சார். மணியக்காரர் "ஏன் சும்மா உக்காந்து இருக்கிறவனுக்கு பிரசாதம்? கொடுக்காதேன்னு உத்திரவு போட்டுட்டார்" ன்னு பதில் கிடைச்சது. "அப்படியா? அந்த மணியக்காரரை கூப்பிடு" ன்னார். மணியக்காரரும் வந்தார். "ஏம்பா, நீதான் சும்மா இருக்கிறவனுக்கு பிரசாதம் கொடுக்காதேன்னு சொன்னாயா?” ன்னு கேட்டர்.” ஆமாம், அதுக்கு என்ன இப்போ?” "சரி, இங்க வா. இந்த தூண் பக்கத்திலே கொஞ்ச நேரம் அசையாம சும்மா உக்காரு" ன்னார். மணியக்காரரும் உக்காந்தார். நாலு ஐஞ்சு நிமிஷம் ஆச்சு. அவருக்கு இருப்பு கொள்ளலே. அசைய ஆரம்பிச்சார். "அட அசையறியே? நான் சும்மாதானே உக்கார சொன்னேன்?” திருப்பி முயற்சி பண்ண மணியக்காரருக்கு இது கஷ்டம்ன்னு புரிஞ்சு போச்சு. அர்ச்சகரை பாத்து "இனிமே இவருக்கு 2 உருண்டை கொடுங்க" ன்னு உத்திரவு போட்டார். அது மாதிரி யாராலேயும் ஒரு வேலையும் செய்யாம இருக்க முடியாது.இந்த இணையத்தில் வரும் தகவல்கள் குறித்த உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்களேன். இந்த இணையம் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்களேன். செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தை பின்தொடருங்களேன்.


வழி : இன்னமுதம் கருத்துகள் : 0 பார்வை : 1988
3

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே