படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

போர் ஓய்ந்து போனாலும் திறந்தவெளிச் சிறைச்சாலை பண்பட்ட யாழ்ப்பாணத்தில் கனத்த சப்பாத்துக்களின் சத்தமின்னும் குறையலையே.... மீசை அரும்பா பதின்ம வயதில் பச்சை சீருடை தரித்த புஞ்சி பண்டாவுடன் கைகோர்த்து வருகின்றான் பக்கத்துவீட்டு மகேஷ்குமார்...... பள்ளி செல்லும் வயதில் வீட்டின் வறுமை களைய கட்டாய ஆட்சேர்ப்பில் ஆயுதம் தூக்கினானோ சிங்களத்தின் புஞ்சி பண்டா....... வாரத்தில் ஒரு தடவை `ஆதரவாளன்` பட்டியல் கொடுக்க காவலரண் பக்கம் தலை நீட்டி கைக்கூலி பெற்று - இனத்தின் கோடரிக்காம்பாய் கதிரவன் ......... தேசம் எரிந்துவிட்டது அழிவுகளைப் பார்த்து இதயமும் நொறுங்கிவிட்டது குரல்வளை தொட்ட துப்பாக்கி முனை பார்த்து நாவும் வரண்டுவிட்டது........... அரைகுறை சிங்களத்தில் ஏதேதோ பேசியபடி புஞ்சி பண்டாவின் தோளில் உரிமையாக கைபோட்டபடி கம்பீரமாய் வருகின்றான் இனத்தவனே கொள்ளி வைக்க..... அவனின் காது வெடிக்க அடிக்கவேண்டும்போலிருக்கிறது வாங்கும் காசுக்கு வாலாட்டும் அவனை வெறித்துப் பார்க்கின்றேன் சாளரங்களின் ஊடே ................ தூரத்தே ரோந்துப் பணியில் சீருடைகள்..!! ///////////////////////////////////////////////////////////////////////////// தோழி துர்க்கா


Close (X)

வழி : kalai Barathi கருத்துகள் : 0 பார்வை : 71
4

பனிபடர் பூமியில் நனிகுளிர பயிர்களும் பாங்குற செழிப்புற உழவனின் மனமும் களிப்புற அகமகிழ்ந்து வரவேற்கின்றேன் இனிய தமிழ்த் தைப்பொங்கலை... குறைவின்றி வளம் நிறைந்திருக்க, கொடும் இனவாதப் பகைகொண்ட யுத்தம் என்னும் அரக்கனால் நிம்மதி தன்னை இழந்தே சிதறுண்டு போனோம் பாரெங்கும்... பதவியும், அதிகார வெறியும் பாழ்பட்ட மனதை ஆக்கிரமிக்க, ஊடறுத்த குள்ளநரிக் கூட்டத்தால் துண்டு துண்டாகிப் போனோம் தரணியில் ஒன்றுபட மறந்து ............ வறுமையிலும் செம்மையாய் அழகாய் சர்க்கரைப் பொங்கலிட்டு முக்கனியும் பாங்குறவே படைத்து பண்பாட்டைப் போற்றுகின்றோம் கதிரவனுக்கு நன்றி செலுத்தி ........... உதிரத்தில் கலந்த தமிழுணர்வுடனே அன்பெனும் மந்திரத்தால் ஒற்றுமை என்றும் தழைத்திட ஒன்றுபடு தமிழினமே ஒன்றுபடு தேசம் வென்றிடவே பாடுபடு .....!!! ==================================== தோழி துர்க்கா


வழி : Balaji Ganesh கருத்துகள் : 0 பார்வை : 87
5

உயிர் அழும். மனம் வலிக்கும். கல்லறை திசை தேடி கால் நடக்கும். தூக்குக் கயிறு, விஷப்புட்டி கடல், மலையுச்சி மரணத்தின் விலாசம் தேடும் நிராகரிக்கப்பட்ட நேசம்... நில். நின்று ஒரு நிமிடம் நிறுத்தி மூச்சு விடு. செத்துவிட்டால் தீர்ந்திடுமா? முன்னே பின்னே செத்திருக்கிறாயா? செத்தால் செத்ததுதான்! அந்த ஏழைச் சிறுமி பள்ளி செல்ல எப்படி தானம் செய்வாய் செத்துவிட்ட நீ? அவள் படித்திருந்தால் அவளின் பரம்பரைக்கே பட்டினி இருந்திருக்காது தெரியுமா? நீ தினம் செல்கிற சாலையைக் கடக்க விழையும் அந்த குருடருக்கு உதவ நீ வேண்டாமா? தாய் அழுகை துடைக்க வேண்டாம் தந்தை கனவை செதுக்க வேண்டாம் உலகம் உனக்கு வேண்டாம் - ஆனால் உலகிற்கு நீ வேண்டும்! பின், வியர்வை வழிய வெயிலைப் பயணிக்கும் அந்த முதியவருக்கு நிழலைத் தரப்போகும் மரத்தை யார் நடுவது? யார் நீரூற்றுவது? அனாதைக் குழந்தையொன்று நீ தத்தெடுத்து வளர்க்க என காத்திருக்கிறதே தெரியுமா? என்ன செய்யப்போகிறாய் செத்துவிட்ட நீ? உன்னை நேசிக்க என எங்கோ பிறந்திருக்கும் ஒருத்தியை நீ நம்ப வேண்டாம். தந்தை சுகம் தேடி அவள் பிள்ளை அழுகிறதே கேட்கிறதா? குழந்தையின் ஸ்பரிசம் மலரின் அழகு நண்பனுடன் அரட்டை அம்மாவின் சாப்பாடு இன்னொரு 20 - 20 சின்னதாய் ஒரு வெற்றி... இத்தனையும் விட்டுச் சாகலாம் நீ... நீ செத்தும் அவளிருப்பாளே நினைவுன்னை எரிக்கவில்லை? பிழைத்துக் கிடந்து வாழ்ந்துவிட்டு போ! நிகழலாம் மறுபடியும்... எதுவும்... செத்துவிட்டாலோ???? செத்ததுதான்...! அப்புறம் நீ கேட்கவே முடியாது 'வாய்ப்பெனக்கு கொடுக்காமல் செத்தானே படுபாவி...' - உன் வாழ்க்கை அழும் ஒப்பாரி! - வர்ஷா.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 68
5

இதுவரை... என்ன எழுதினேன்? எதற்காக எழுதினேன்? எழுதியவை என்ன ஆயிற்று? பின்னிரவில் பதுங்கும் குற்றவாளியின் அலையும் கண்களைப் போல எதைத் தேடி என் பேனா செல்கிறது...? முன் தோன்றி மூத்த தமிழின் இலக்கண முகம் அலங்கரித்து இருக்குமா? தெருவோரம் திரியும் எண்ணைப்பசை அற்ற எண்ணற்ற குழந்தைகளில் ஒருத்திக்காவது தலை வாரிப் பூச்சூடி இருக்குமா? எக்கணமும் வறுமை தின்னும் வயிற்றுக்கு ஒரு வேளை சோறு கிடைத்திருக்குமா? எங்காவது ஒரு சிட்டுக்குருவிக்கு சிறகு முளைத்திருக்குமா? எதிர்த்துப் போராடும் எம் மாணவர் ஏந்தும் பதாகையில் எழுத ஒரு வாசகம் கிடைத்திருக்குமா? சொல்ல வாயும் வார்த்தைகளும் அற்று தவிக்கும் ஒரு இதயத்திற்கு சொல்லும் வழியாகி காதல் மொழியாகி இருக்குமா? விரிந்து கொண்டிருக்கும் ஓசான் ஓட்டைப் படலத்தின் ஒரு துளி அடைக்க சமூகத்தை முன்னெடுத்து இருக்குமா? முகிழ்த்து முன்னே வரத் துடிக்கும் கைம்பெண் முன் ஒப்பாரி வைப்பதைத் தவிர்த்து அவள் கைப் பிடித்து காலம் களிக்க ஒரு நல் இதயம் கிடைக்கச் செய்து இருக்குமா? குறைந்த பட்சம்... உழைத்துக் களைத்த எம் பெரு மக்கட்கு ஒரு துளி நேரம் பொழுது போக்கக் கிடைத்திருக்குமா? இருக்கும் விலைவாசியில் இரண்டு சொட்டு மை ஒன்றும் பெரிய செலவில்லை என்பதாலா...? இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன்...


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 67
0

உலகத்தின் தாய் அந்த உழைப்பாளி! ஊருக்கே சோறு போடும் விவசாயி! உலகத்தை முன்தள்ளும் உழவன் அவன்! உழவனை பின்தள்ளும் உலகம் இது! உணவேதும் நமக்கில்லை அவனின்றி. உணவென்று ஏதுமில்லை அவனுக்கு. பால் குடித்த மார்காம்பை கடித்துவிட்டோம். சோறூட்டிய விரல்களை ஒடித்துவிட்டோம். செந்நீரும் கண்ணீரும் சிந்திவிட மண்நீரில் தண்ணீர் கலந்துவிட பதநீரும் இளநீரும் நாம் பருக பாடுபடும் நம் நண்பன் விவசாயி! இயற்கைக்கு கேடு செய்யும் நம்மை போல இயற்கையும் பலசமயம் பொய்த்துப்போக இயற்கையின் அச்சாணி அவன் வாழ்வு இயற்கை எய்த காரணமாய் ஆகிறதே! மண்மீது வைத்த நம்பிக்கை மண்ணாகிப்போக விண்மீது வைத்த நம்பிக்கை வீணாகிப்போக தன்மீது தன்னம்பிக்கை இழக்கின்றான் தற்கொலையை குடும்பத்தோடு செய்கின்றான். விலைமதிப்பில்லா விவசாயி வாழ்க்கையிலே விடியல் என்ற பேச்சிற்கு இடமுண்டா? நமக்கென்ன என்று நாம் இருக்கின்றோம் நம் தலைமுறை என்ன உணவுதேடா எந்திரமா?


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 80
4

எனதருமை கணவனே! ஏன் தாமதம் என்று நிற்கவைத்து கேள்வி கேட்பவரே! சற்றே அமருங்கள்! சட்டென்று முடியாது என் பதில். கொஞ்சம் தண்ணீர் குடித்துக்கொள்கிறேன் கண்ணீருக்கு இலகுவாய் இருக்கும் கதை சொல்லும் போது... வேலை முடித்து வெளியில் வந்தேனே கூலி தாமதம் வரிசையில் நிற்பதில் நேர்மையில்லாததால் வரிசை நகர தாமதம் பெண் என்பதால் பேசிய கூலியில் பாதியைக் குறைத்ததால் போராடி மீதியைப் பெற்றதில் தாமதம் கூட்ட நெரிசலில் கூடும் ஆசையில் தேகம் உரசையில் கோபம் வெடிக்கையில் சண்டை மூண்டதில் வந்த தாமதம் நேரமானதால் ஓடிவந்ததால் அறுந்த செருப்பால் நடக்கத் தாமதம் பேருந்து நிலையம் வந்தாலும் பேருந்து வரவில்லையே காத்திருந்து கால்கள் தேய்ந்ததால் கால தாமதம் பிறகும் ஏன் தாமதம் என்கிறீரா? பளுவைத் தாங்காமல் நடந்த பேருந்து பழுது ஆனதால் ஆன தாமதம் வாங்கிய கூலியை தாங்கிய கைப்பையின் வயிரைக் கிழித்தவன் காதைத் திருவியே காவல் நிலையம் சேர்க்க தாமதம் புகார் எழுத தெரியாததால் போகும் வரும் ஆட்களிடம் உதவி கேட்டு எழுதி முடிக்க தாமதம் வரும் வழியில் வஞ்சரம் கருவாடு வாசனை இழுத்ததும் வந்த உன்னினைவால் அதை வாங்க தாமதம் கருவாடு வாசம் காற்றில் கலக்க நாயின் மூக்கில் நன்றாய் ஏற ஓடி ஒளிந்து தப்பிவர ஆன தாமதம் காலையில் உம் அம்மா கால்வலி மருந்து தீர்ந்ததை சொன்னார் தேடி வாங்க இத்தனை தாமதம். நிற்க வைத்து கேள்வி கேட்டு என் நேரத்தை வீணடிப்பவரே! ஒரு கேள்வி நான் கேட்கட்டுமா? வேலை எதற்கும் செல்லாமல் வெட்டிப் பேச்சு பேசிக்கொண்டு வீட்டில் படுத்து தூங்கித் தூங்கியே உம் வாழ்நாள் முழுவதும் தாமதமாகிவிட்டதே என்ன செய்யப் போகிறீர்?


வழி : Punitha Velanganni கருத்துகள் : 0 பார்வை : 77
1

மண்ணை நாம் மதிக்கவில்லை.. === செயற்கை உரத்தால் தொலைத்தோம்..! மலைகளை நாம் விடவில்லை.... === வெடிகள் வைத்து பொடித்தோம்..! மரங்களை நாம் பார்க்கவில்லை... === மதி தொலைத்து முறித்தோம்..! கடலை நாம் காணவில்லை... === விஷ கழிவை கலந்தோம்..! சுவாசிக்கும் காற்றை நாம்.. === சுற்றி சுற்றி புகைத்தோம்..! வானத்தை நாம் ரசிக்கவில்லை... === பெரும் ஓட்டை போட்டோம்..! பூமியின் கோபம் பூகம்பமாய்... மலையின் கோபம் மண்சரிவாய்.. மரத்தின் கோபம் மழையின்மையாய் கடலின் கோபம் சுனாமியாய்.. காற்றின் கோபம் கடும் புயலாய்.. வானத்தின் கோபம் வெப்பமாய்.. மனிதா மனதில் குறித்துக்கொள்.... சுற்றும் சூரியன் நடுப்பகல் நின்றால்...! மாலை இரவு இங்கு வந்திடுமா..? பறவைகள் கூட்டம் திரும்பிடுமா..? மிளிரும் நிலவு குளிர் தந்திடுமா ..? சாந்த உறக்கம் கண் துஞ்சிடுமா..? காதல் உறவில் களிப்பில்லை கடிகார தியதி உண்மையில்லை கோவிலில் இரவு பூசையில்லை கோவில் நடையும் மூடலில்லை காலை சேவல் கூவவில்லை கறவைபசு பால் தருவதில்லை பிறந்த குழந்தைக்கு தியதியில்லை பின்தியதி காசோலை பலனுமில்லை திருடனுக்கிங்கு பிழைப்பு இல்லை விசாரணை கைதி சாவு இல்லை சாராயம் குடிக்க பாதை இல்லை கொள்ளை நடக்க வாய்ப்பு இல்லை கணினிகளும் மெய் சொல்லவில்லை..! இரவு விடுதிகள் திறக்கவில்லை இரவு ராணிகள் மயக்கம் இல்லை மந்திரவாதிகள் மகிழ்ச்சி இல்லை வட்டி கொடுத்தவன் வசூல் இல்லை திருமணம் இங்கு ஏதும் இல்லை முதல் இரவுயென்ற வார்த்தை இல்லை இயற்கையை சிதைக்க சிந்திப்பாயா..? இப்படி நடந்தால் நீ தாங்கிடுவாயா..? இந்த சூரியன் நடுபகல் நின்றுவிட்டால்..?


வழி : குமரிப்பையன் கருத்துகள் : 0 பார்வை : 68
1

மலர்ந்த பூக்களெல்லாம் மாலைகளாய் ஆவதில்லை வளர்ந்த மரங்களெல்லாம் வாசற்கதவுகளாய் ஆவதில்லை... ! விளைந்த கற்களெல்லாம் மோதிரமாய் ஆவதில்லை விழுந்த மழைத்துளிகளெல்லாம் உயித்துளியாய் ஆவதில்லை... ! எழுதும் வார்த்தைகளெல்லாம் கவிதைகளாய் ஆவதில்லை உழுத நிலங்களெல்லாம் விளைச்சல்களாய் ஆவதில்லை... ! பிறந்த மனிதர்களெல்லாம் மேதைகளாய் ஆவதில்லை திறந்த மனங்களெல்லாம் புனிதர்களாய் ஆவதில்லை... ! நேசித்த இதயங்களெல்லாம் காதலாக ஆவதில்லை வாசித்த இசைகளெல்லாம் சிம்பொனியாய் ஆவதில்லை... ! இணைந்த கைகளெல்லாம் நம்பிக்கையாய் ஆவதில்லை மணந்த பெண்களெல்லாம் மல்லிகையாய் ஆவதில்லை... ! தொடங்கும் கட்சிகளெல்லாம் ஆட்சிகளாய் ஆவதில்லை இசைக்கும் பாடல்களெல்லாம் விருதுகளாய் ஆவதில்லை... ! செய்த சிலைகளெல்லாம் தெய்வங்களாய் ஆவதில்லை புனைந்த கவிகளெல்லாம் பரிசுகளாய் ஆவதில்லை...!


வழி : நாகூர் கவி கருத்துகள் : 0 பார்வை : 77
5

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"



புதிதாக இணைந்தவர்

மேலே