படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)

இந்த பதிவு நீங்கள் படித்த வலைப்பதிவுகளில் பிடித்தவற்றை சுட்டுவதற்கு.

உயர்ந்த கருத்தும், எளிய வார்த்தைகளும், ஓசை நயத்துக்கும் சொந்தக்காரர் கவிஞர் அழ. வள்ளியப்பா. குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்களை எழுதியவர். ’அம்மா இங்கே வா... வா... ஆசை முத்தம் தா... தா...’ ’மாம்பழமாம் மாம்பழம்... மல்கோவா மாம்பழம்...’ ‘கை வீசம்மா கை வீசு... கடைக்குப் போகலாம் கை வீசு...’ - தலைமுறைகள் தாண்டினாலும் மாறாத குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து கொண்டு இது போன்ற எண்ணற்ற எளிய பாடல்களை எழுதியவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா. உயர்ந்த கருத்தும், எளிய வார்த்தைகளும், ஓசை நயமும் கவிஞரின் பாடல்களின் உயிர் நாடி. பிறப்பு: புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தின் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார் - உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாக 07.11.1922 பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன். கல்வி: இராயவரம் எஸ்.கே.டி.காந்தி ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் கடியப்பட்டியிலுள்ள உள்ள பூமீசுவரசுவாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பள்ளிக்கு நான்கு கிலோமீட்டர் நடந்து செல்லும் போது தன் கற்பனைத் திறன் கொண்டு கவி பாடிச் சென்ற கவிஞர் ஒரு நாள் மாலையில் பள்ளி முடிந்தவுடன், நண்பர்களுடன் நடந்தே வீட்டுக்கு வந்து கொண்டிருந்த போது அவ் வழியில் ஒரு டூரிங் டாக்கீஸ் ‘லாஸ்ட் ஜங்கிள்’ என்கிற ஆங்கிலப் படத்தை, ‘காணாத காடு’ என்று தமிழில் மொழிபெயர்த்துச் சுவரொட்டிகளில் அச்சிட்டிருந்தனர். அதைப் பார்த்தவுடன் வள்ளியப்பா ஆனந்தமாக... ‘காணாத காடு கண்டுவிட்டால் ஓடு ஒளிய இடம் தேடு ஏழைகள் படுவதோ அரும்பாடு டிக்கெட் விலையோ பெரும்பேடு’ என்று பாட நண்பர்களும் உரக்கப் பாடிக்கொண்டே வள்ளியப்பாவுடன் ஓடினார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் அதாவது தனது பதின்மூன்றாம் வயதிலேயே கவிதை இயற்றத் தொடங்கியுள்ளார் கவிஞர். எழுத்துப் பணி: தொடர்ந்து படிப்பை தொடர முடியாத நிலையில் வாழ்வாதாரம் தேடி 1940 ஆம் ஆண்டில் வை. கோவிந்தனின் சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராக பணியில் சேர்ந்தார். அப்போது சக்தி ஆசிரியராக இருந்த தி.ஜ.ர.வின் ஊக்குவிப்பின் காரணமாக சக்தி இதழிலேயே எழுத ஆரம்பித்தார். சக்தியில் பணியாற்றும் காலத்திலேயே இலக்கிய நண்பர்கள் பலர் அறிமுகமானார்கள். "ஆளுக்குப் பாதி" என்னும் தலைப்பில் தன்னுடைய முதல் கதையை எழுதினார். திருமணம்: சக்தி இதழ் பணியாற்றிய போது வள்ளியம்மை என்பாரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். வங்கி பணி: சக்தியில் இவர் பணி புரியும்போது, இந்தியன் வங்கி விடுத்த அழைப்பை ஏற்று 1941ல் வங்கியில் சேர்ந்தார். வங்கிப் பணியில் இருந்தவாறு கவிதையும் கட்டுரையும் எழுதத் தொடங்கியவர் 1982 -ல் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை எழுதினார். வங்கி பணிக்கு ஓய்வு அளித்த கவிஞர் கவிதைப் பணிக்கு ஓய்வு அளிக்காமல் எழுதிக் கொண்டுதான் இருந்தார். வங்கிப் பணியில் இருக்கும்போதே பாவலர் மலர், டமாரம், சங்கு இதழ்களுக்குக் கெளரவ ஆசிரியராகப் பணியாற்றினார். இதழ் ஆசிரியர் பணி: 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஒய்வு பெற்ற பின்பு 1983 முதல் 1987 வரை கல்கி வெளியீடான கோகுலம் இதழில் ஆசிரியராக பணியாற்றினார். குழந்தை எழுத்தாளர் சங்கம்: குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950-ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை. கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். நூல்கள்: வள்ளியப்பாவின் 23 பாடல்கள் கொண்ட முதல் கவிதைத் தொகுதியான மலரும் உள்ளம், 1944 ஆம் ஆண்டு வெளிவந்ததது. 1957-ல் 135 பாடல்கள் கொண்ட தொகுதிகளையும், 1961 இல் மற்றொரு தொகுதியையும் வெளியிட்டார். குழந்தை கவிஞர்: சிரிக்கும் பூக்கள் என்ற தொகுதியை வெளியயீடுக்குப் பிறகுதான் குழந்தைக் கவிஞர் என்ற பெயரிட்டு அனைவரும் அழைக்கத் தொடங்கினார்கள். எழுதிய நூல்கள்: மலரும் உள்ளம் - 1 பாப்பாவுக்குப் பாட்டு சின்னஞ்சிறு பாடல்கள் சுதந்திரம் பிறந்த கதை ஈசாப் கதைப் பாடல்கள் ரோஜாச் செடி உமாவின் பூனைக் குட்டி அம்மாவும் அத்தையும் மணிக்குமணி மலரும் உள்ளம் - 2 கதை சொன்னவர் கதை மூன்று பரிசுகள் எங்கள் கதையைக் கேளுங்கள் நான்கு நண்பர்கள் பர்மாரமணி எங்கள் பாட்டி மிருகங்களுடன் மூன்று மணி நல்ல நண்பர்கள் பாட்டிலே காந்தி கதை (பாடல் தொகுதி) குதிரைச் சவாரி நேரு தந்த பொம்மை நீலாமாலா பாடிப் பணிவோம் (பாடல் தொகுதி) வாழ்க்கை விநோதம் சின்னஞ்சிறு வயதில் பெரியோர் வாழ்விலே சுவையான நிகழ்ச்சிகள் அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் மத்திய அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றுள்ளன. குழந்தைகளுக்காக இவர் ஐம்பதிற்கும் மேலான நூல்களையும், ஆயிரத்திற்கும் மேலான பாடல்களையும் எழுதியுள்ளார். நம் நதிகள் என்ற தலைப்புடன் தென்னாட்டு ஆறுகள் பற்றிய இவரது நூலை, தேசீய புத்தக டிரஸ்ட் பதினான்கு இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது. சொற்பொழிவுகள்: 1979 -ல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் கல்கி அறக்கட்டளை நிகழ்வில் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். 1981 -ல் 5வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் "வளர்ந்து வரும் குழந்தை இலக்கியம்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். பாராட்டும் விருதும்: குழந்தைகள் இலக்கிய முன்னோடி, பிள்ளைக் கவியரசு, மழலைக் கவிச் செம்மல் என்று சில அமைப்புகள் பாராட்டியுள்ளன. 1982 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழத்தினால் தமிழ் பேரவைச் செம்மல் என்ற விருது அளிக்கப்பட்டு பாராட்டப்பட்டார். திரைப்பட பாடல்: குழந்தை பாடல்கள் எழுதி வந்த கவிஞர் வள்ளியப்பா ‘வா ராஜா வா’ படத்தில், ‘கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா...’ என்ற பாடல் மூலம் திரையுலகிலும்தனது பங்கை பதியம் போட்டுயுள்ளார். மறைவு: பால்யத்தின் பசுமைப் பக்கங்களில் பதியம் போடப்பட்ட இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை படைத்த கவிஞர் மதுரைப் பல்கலைக்கழகத்தின் குழு உறுப்பினர் என்கிற முறையில், ‘குழந்தை இலக்கியத்தை பல்கலைக்கழகத்தில் ஒரு பாடமாக வைக்க வேண்டும்’ என்கிற தீர்மானத்தை வலியுறுத்திப் பேசிக் கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்தார். பின்னர், சிகிச்சை பலனின்றி அகவை 66ல் (16.03.1989) மறைந்தார்.


Close (X)

வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 85
3

அதிர்கிறது சர்வதேசம் காணாமல்போன விமானத்தைத் தேடி...! அறியாத மனிதரில்லை பேசாத வாயில்லை வேண்டாத தெய்வமில்லை.! இறுதிப் போரை நிறுத்த கொட்டும் பனியிலும் ஆர்ப்பாட்டங்களிலீடுபட்ட புலம்பெயர் தமிழரால் அதிராமல், அசையாமல் தானிருந்தது சர்வதேசம் .......! அமெரிக்கக் கப்பலுக்காய் நப்பாசையுடன் காத்திருந்தே நம்பிக்கையிழந்து உயிரைவிட்ட ஈழத்தமிழனின் கூடுகளும் ஆதாரத்திற்கு இன்றங்கில்லை.! ஆனாலும் எஞ்சியுள்ள தமிழன் உளமுருகி வேண்டுகின்றான் காணாமல்போன பயணிகள் உயிர்தப்ப வேண்டுமென ...........! உலக மக்களுக்காய் கண்ணீர் விடுபவனுக்கு கண்ணீர் விட யாருமில்லை.... கொள்ளி வைக்கத்தான் உலகமெங்கும் ஆட்களதிகம்...!! ====================== தோழி துர்க்கா


வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 120
6

உத்திரப் பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் 11 வருடங்களுக்கு முன்னர் தேவர்னியா - பாத்வா கிராமத்தைச் சேர்ந்த 25 வயதான சத்ரபால் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். அவரது உடலில் அசைவுகள் அற்று, பேச்சு மூச்சற்று கிடந்ததால், அவர் உயிரிழந்துவிட்டார் என்று அவர்களது குடும்ப வழக்கப்படி அவர் உடலை ஆற்றில் தூக்கி வீசிவிட்டனர். மிகமிகச் சிறிய வயதில் விதவையான சத்ரபாலின் மனைவி ஊர்மிளா அப்போது, கர்ப்பமாக வேறு இருந்தார். அவருக்கு வயதும் மிகக் குறைவு என்பதால், சத்ரபாலின் குடும்பத்தால் மிகவும் யோசித்து, சத்ரபாலின் இளைய சகோதரரை ஊர்மிளாவுக்கு மணம் முடித்து வைத்தனர். பின்னாளில் அவர்களுக்கு இரு குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை, திடீரென அவர்களது வீட்டுக்கு வந்தார் சத்ரபால். அதுவும் 11 வருடங்கள் கழித்து. அப்போது தனக்கு நேர்ந்ததை அவர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். பாம்பு கடித்து விஷம் ஏறி இறந்ததாகக் கருதப்பட்ட சத்ரபாலை அவர்களது உறவினர்கள் ஆற்றில் தூக்கி வீசிய பின்னர், அவரை பாம்புக் கடி வைத்தியர்கள் சிலர் தண்ணீரில் இருந்து எடுத்துக் காப்பாற்றியுள்ளனர். அவருக்கு பாம்புக் கடி வைத்தியம் செய்து, படுக்கையில் இருந்து வெகு சிரமங்களுக்கு மத்தியில் எழும்பவிட்டு, உயிரோடு உலவ வைத்துள்ளனர். பின்னர் அங்கிங்கு பல இடங்களுக்கும் சுற்றி, சத்ரபால் அவர் வீட்டுக்கே திரும்பியுள்ளார். இந்நிலையில், சத்ரபால் மற்றும் அவரது இளைய சகோதரர் என இருவரையுமே தனது கணவர்களாக ஊர்மிளா ஏற்றுக் கொண்டுள்ளார். இருவரும் அனுமதிக்கும் பட்சத்தில் இருவருக்குமே மனைவியாக இருப்பேன் என்று கூறியுள்ளார். தற்போது, சத்ரபாலின் சகோதரருடன் இருக்கும் ஊர்மிளா, இந்த விஷயத்தில் குடும்பத்தினர் ஒரு முடிவு எடுத்து அறிவிக்கட்டும் என்று கூறியுள்ளாராம்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 76
2

உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார் இசைஞானி இளையராஜா. உலகளவில் புகழ் பெற்ற சினிமா இணையத்தளமான 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற இணையதளம் உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்பதாவது இடத்தைப் பெற்று தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பெருமை வாங்கி தந்துள்ளார் இளையராஜா. இந்தியாவிலிருந்து இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே. சிறந்த இசைக்கோர்ப்பு, இன்ஸ்ட்ருமென்டலிஸ்ட், இசை ஒருங்கிணைப்பு, பாடகர், பாடல் ஆசிரியர் ஆகிய பிரிவில் இளையராஜா சிறப்பான பணியை வழங்கியிருப்பதாக ‘டேஸ்ட் ஆஃப் சினிமா’ இணைய தளம் பாராட்டியுள்ளது. இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கில மொழிகளில் 4500-க்கும் மேற்பட்ட பாடல்கள் கொடுத்து, 950-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து, ஏராளமான சர்வதேச மேடை நிகழ்ச்சிகள் நடத்தியவர் இளையராஜா.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 112
1

தெற்கிலிருந்து வன்னிக்கு ஒரு பயணம் உல்லாசப் பயணிகளுடன்...! தமிழ்சுமந்த வீர மண்ணில் பார்க்கும் இடமெல்லாம் பேரினவாதத்தின் மொழிகள்... எம்முறவுகள் கருகிப்போன வீதிகளில் புலம்பெயர் உறவுகளும் சுற்றுலாப் பயணிகளாய் ...! உடலங்களைச் சுமந்து மறைக்கப்பட்ட புதைகுழிகளின் மேலால் தொடர் பேரூந்துகள் `அரைகுறை` ஆடைப் பயணிகளைச் சுமந்தபடி... புறமுதுகிட்டு ஓடாத எம் வீரமறவரின் இருப்பிடமறிய சாரை சாரையாய் வெறிபிடித்த துவேசிகள் கையில் புகைப்படக் கருவியுடன்...! `அவர் வாழ்ந்த வீடிது அவர் பாவித்த வாகனமிது பயன்படுத்திய பாசறையிது..` பார்த்தறிந்த பரவசத்தில் திறந்த வாய் மூடமறந்து தென்னிலங்கைப் பயணிகள் ... விடுதலைப் போரில் -தமை அர்ப்பணித்த வீரர்கூட பார்த்தறியாத ரகசிய நிலவறைகளும் சுரங்கப் பாதைகளும் இன்று சுற்றுலாத் தளமாய் ...!! ஒருபுறத்தே புதைக்கப்பட்ட தங்கம் தேடி சீருடைகளின் `தங்க`வேட்டை... மறைக்கப்பட்ட `பணம்` தேடி அங்குல அங்குலமாய் அகழ்வு வேட்டை.... மறுபுறத்தே ஆண்டுகள் சில சென்றாலும் முடிவுக்கு வராத ஆயுத வேட்டை ... எடுக்க எடுக்க குறையாத `அமுதசுரபி` போல.......! அமிலக் குண்டுகளில் சிதைந்துபோன எம்முறவுகளின் உயிர்க் காற்றை இழுத்து சுவாசித்தபடி அங்கொன்றும் இங்கொன்றுமாய் பச்சைச் சீருடைகள் ....! `அண்ணை எப்ப போவார் திண்ணை எப்ப காலியாகுமென` நீண்டநாள் காத்திருந்த சில தமிழ் பேசும் உறவுகளின் கட்டிலடங்கா அடாவடிகள் நில மீட்புக்காய் ......!! எம் வீரர்க்கு நிழல் கொடுத்த மரங்கள் வேரிழந்தும் விழுதிழந்தும் `இயற்கையின் பாதுகாவலர்களை` இழந்துவிட்ட சோகத்தில் இரத்தக் கண்ணீர் சிந்தியபடி..... ! வீரத் தமிழன் காலத்தில் சுதந்திரம் பெற்ற காற்றுகூட நம்முறவுகளின் உயிர்குடித்த சோகத்தில் நெட்டுயிர்த்துக் கொள்கிறது வீசமறந்து......! தெற்கிலிருந்து வன்னி நோக்கி ஒரு பயணம் சுற்றுலாப் பயணிகளைச் சுமந்தபடி ........!! ======================= தோழி துர்க்கா


வழி : தோழி துர்க்கா கருத்துகள் : 0 பார்வை : 103
7

2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. வாபஸ் 2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. 2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட நோட்டுகளில், பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படவில்லை. எனவே, அதில் கள்ள நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே, கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், 2005–ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அப்படி மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம், ஜூன் 30–ந்தேதிவரை இருந்தது. நீடிப்பு இந்நிலையில், இந்த கால அவகாசம் அடுத்த ஆண்டு ஜனவரி 1–ந்தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கூறியதாவது:– 2005–ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்வதற்கான கால அவகாசம் ஜனவரி 1–ந்தேதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எந்த வங்கியிலும் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். வாடிக்கையாளரோ, வாடிக்கையாளர் அல்லாதவரோ யாராக இருந்தாலும், ரூபாய் நோட்டை மாற்றி கொடுக்குமாறு வங்கிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. ஒருவர் எத்தனை நோட்டுகளையும் மாற்றி கொள்ளலாம். அதற்கு கட்டுப்பாடு கிடையாது. செல்லும் அதே சமயத்தில், 2005–ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம். தயக்கமின்றி பிறரிடம் பெற்றுக்கொள்ளலாம். அவை தொடர்ந்து செல்லுபடி ஆகும். மேலும், வங்கிகள், 2005–ம் ஆண்டுக்கு முன் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளை கவுண்ட்டர் மூலமாகவோ அல்லது ஏ.டி.எம். மூலமாகவோ வினியோகிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளோம். அந்த நோட்டுகளை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளோம். பொதுமக்களுக்கு எந்த அசவுகரியமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, ரூபாய் நோட்டு வாபஸ் பெறும் பணியை தொடர்ந்து கண்காணித்து வருவோம். இவ்வாறு ரிசர்வ் வங்கி கூறியுள்ளது


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 106
7

பாராளுமன்ற தேர்தலுக்கு ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும் என ஒரு ஆய்வு தகவல் வெளியாகி உள்ளது. செலவின ஆய்வு ஜனநாயக திருவிழா என்று அழைக்கப்படுகிற இந்திய பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 7–ந் தேதி தொடங்கி மே மாதம் 12–ந்தேதி வரை 9 கட்டங்களாக நடக்கிறது. சுதந்திர இந்திய வரலாற்றில் 9 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடப்பது இதுவே முதல் முறை. இந்த தேர்தல் செலவினம் குறித்து ஊடக கல்வி மையம் ஒரு ஆய்வு நடத்தியது. இது அரசுக்கு ஆகும் செலவு, அரசியல் கட்சிகளின் செலவு, வேட்பாளர்கள் செய்கிற செலவு என பல அம்சங்களையும் ஆராய்ந்தது. அரசுக்கு ஆகும் செலவு அந்த ஆய்வின் முடிவில், 16–வது பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிப்பதற்கு மத்திய அரசின் கஜானாவுக்கு மட்டுமே சுமார் ரூ.7ஆயிரம் கோடி முதல் ரூ.8 ஆயிரம் கோடி வரை செலவாகும் என தெரிய வந்துளளது. இந்த தொகையில் ரூ.3 ஆயிரத்து 500 கோடியை தேர்தல் கமிஷன் செலவு செய்யும். மீதித் தொகையை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம், இந்திய ரெயில்வே, பிற அரசு துறைகள், மாநில அரசுகள் செலவு செய்யும். வேட்பாளர்கள் செலவு சமீபத்தில் வேட்பாளர்கள் செலவின வரம்பினை தேர்தல் கமிஷன் பரிந்துரைகளுக்கு ஏற்ப அரசு உயர்த்தி உள்ளது. அதன்படி குறைந்த பட்சம் ரூ.54 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.70 லட்சம் வரை செலவு செய்யலாம். எனவே இந்த செலவுகளையெல்லாம் கணக்கில் கொண்டால் பாராளுமன்ற தேர்தலை நடத்தி முடிக்க ரூ.30 ஆயிரம் கோடி செலவாகும். 543 தொகுதிகளில் போட்டியிடுகிற வேட்பாளர்கள் மட்டுமே ரூ.4 ஆயிரம் கோடி செலவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆய்வு தகவல்களை ஊடக கல்வி மையத்தின் தலைவர் பாஸ்கரராவ் வெளியிட்டு பேசுகையில், ‘‘சமீப காலம் வரை அரசியல் கட்சிகள் அதிகளவு செலவு செய்து வந்தன. இப்போது அரசியல் கட்சிகளை விட வேட்பாளர்கள் அதிகமாக செலவு செய்கிறார்கள். கோடீசுவர வேட்பாளர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், ஒப்பந்தக்காரர்கள் பெருந்தொகை செலவிடுவர்’’ என கூறினார்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 65
6

இந்தியாவில் இதுவரையில் இல்லாத ஒரு பரபரப்பு, இந்த பாராளுமன்ற தேர்தலையொட்டி இருக்கிறது. வரப்போகும் பிரதமரிடமும், மத்திய அரசாங்கத்திடமும் நாட்டு மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். ஊழலற்ற ஆட்சி வேண்டும் என்பதுதான் முதல் எதிர்பார்ப்பாக இருந்தாலும், அடுத்து விலைவாசி உயர்வு தடுக்கப்படவேண்டும், ரூபாயின் மதிப்பு உயரவேண்டும், பொருளாதாரம் சீர்பெற வேண்டும், வேலை இல்லா திண்டாட்டம் போக்கப்படவேண்டும், அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்று அடுக்கடுக்காக அடுத்த அரசாங்கம் செய்யவேண்டும், அந்த அரசாங்கத்துக்குத்தான் ஓட்டுப்போடவேண்டும் என்று ஒரு முடிவு எடுத்து, அதையெல்லாம் எந்த கட்சி செய்யும்? என்று தேர்ந்தெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் முடிவு எது? என்பதை மே மாதம் 16–ந் தேதி ஓட்டு எண்ணிக்கை காட்டிவிடும். அவர்களின் நம்பிக்கையைப் பெறத்தான் ஒவ்வொரு கட்சியும் தன் தேர்தல் அறிக்கையில் பல வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறது. தமிழக மக்களைப் பொருத்தவரையில், தமிழ்நாட்டுக்குரிய சில பிரச்சினைகளும் இருக்கின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கையில் அனைவரையும் உலுக்குவது விலைவாசி உயர்வுதான். அதிலும், உணவு பண்டங்களின் விலை உயர்வால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், ரூபாயின் மதிப்பு மளமளவென்று குறைவதும், பெட்ரோல், டீசல் விலை அவ்வப்போது உயர்ந்துகொண்டிருப்பதுமே முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது. கடந்த 2 ஆண்டுக்குள் மட்டும் டீசல் விலை லிட்டருக்கு 18 ரூபாய் உயர்ந்திருக்கிறது. 2012–ம் ஆண்டு மே மாதம் ஒரு லிட்டர் டீசல் விலை 40 ரூபாயாக இருந்தது. ஆனால், தற்போது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.58.56 ஆகும். உணவு பொருட்கள், காய்கறிகள், பால் உள்பட அனைத்து பொருட்களையும் லாரிகள் மூலம்தான் எடுத்துச்செல்ல வேண்டிய நிலையில், இந்த டீசல் விலை உயர்வு, அந்த பொருட்களை ஏற்றிக்கொண்டு வருவதற்கான போக்குவரத்து செலவை அதிகரிக்க வைத்து, அதன் காரணமாக அந்த பொருட்களின் விலையை உயர்த்திவிடுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவோ அதற்கேற்பத்தான், விலை நிர்ணயிக்கப்படுகிறது என்று சொல்லலாம். ஆனால், கச்சா எண்ணெய் விலையைவிட, நம் நாட்டில் வரி அதிகமாக இருப்பதுதான் விலையை ஏற்றிவிடுகிறது. அடுத்து, ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதும் கவலை அளிக்கிறது. இந்திய ரூபாய் மதிப்பு குறைகிறது என்றால், அதன் பாதிப்பு ஒவ்வொரு மனிதனின் அன்றாட வாழ்க்கையிலும் பிரதிபலித்துக்கொண்டு இருக்கிறது. அவன்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறான். சர்வதேச கரன்சியான அமெரிக்க டாலரை வாங்க எவ்வளவு ரூபாய் செலவழிக்க வேண்டும் என்பதை வைத்துத்தான், ரூபாயின் மதிப்பு கணக்கிடப்படுகிறது. 1947–ல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், ஒரு அமெரிக்க டாலரை ஒரு ரூபாய் கொடுத்து வாங்கக்கூடிய சூழ்நிலை இருந்தது. 1966–ல் ரூ.6.35 ஆகவும், 1975–ல் ரூ.8.41 ஆகவும் இருந்த டாலரின் விலை, தற்போது ஏறத்தாழ 61 ரூபாய்க்கு வந்துவிட்டது. இதன் பாதிப்பு சாதாரண ஒரு குடும்பத்துக்கு எப்படி ஏற்பட்டுள்ளது என்பதற்கு ஒரே ஒரு உதாரணம், 1968–ல் ஒரு ரூபாய்க்கு 12 முட்டைகளுக்கு மேல் வாங்க முடிந்தது. ஆனால், இன்று 12 முட்டைகளை வாங்க ஏறத்தாழ 50 ரூபாய் வரை ஆகிறது. இதேபோலத்தான், அனைத்து பொருட்களின் விலையும் விண்ணைத்தொடும் அளவுக்கு இருக்கிறது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்ந்து இருப்பதால், நாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் விலை கிடைக்கிறது என்பதில் மகிழ்ச்சி இருந்தாலும், இந்தியாவைப் பொருத்தவரை, ஏற்றுமதியைவிட, இறக்குமதிதான் அதிகம் என்கிற வகையில், இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக விலை கொடுக்கவேண்டியது இருக்கும். இதனால் ஏற்படும் பொருட்களின் விலை உயர்வு, ஏழை, நடுத்தர மக்களைத்தான் அதிகம் பாதிக்கும். எனவே, அடுத்த அரசாங்கம் இந்த விஷயத்தில் நிறை, குறைகளையெல்லாம் வந்தவுடனேயே ஆராய்ந்து, விலைவாசி உயர்வை பெருமளவில் குறைக்கும் நடவடிக்கைகளை எடுப்பதுதான் நல்லாட்சி. அத்தகைய ஆட்சியின் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கையை எளிதாகவும், மகிழ்ச்சியாகவும் ஆக்கவேண்டும் என்பதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


வழி : அ வேளாங்கண்ணி கருத்துகள் : 0 பார்வை : 67
7

உங்களுக்கு மிகவும் பிடித்த வலைப் பதிவுகளை பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள் "படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)"புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே