பிறந்தோமே நாங்கள் பிறந்தோமே... பிறப்பில் தமிழனாய் பிறந்தோமே...! மறந்தோமே நாங்கள் மறந்தோமே... மனிதனாய் பிறந்ததை மறந்தோமே...! இழந்தோமே நாங்கள் இழந்தோமே.. இருந்தையும் இங்கு இழந்தோமே..! இதயம் என்றொரு சதையில்லையேல்.. இதையாம் நினையா இறப்போமே..! இலங்கையில் தமிழன் ரத்தம் ஓட இரங்காமல் இமைமூடி இருந்தீரே.. எம்மை இரவும் பகலும் வெடிகள் தாக்கி இறந்தும் சரிந்தும் விழுந்தோமே..! தொப்புள் கொடியென உறவுகள் சொல்லி தோரணையோடு சொன்னீரே.. எம்மை தோளோடு தூக்க இனம் கோடி இருந்தும் தோள் துண்டை வீசி போனீரே..! ............................... (பிறந்தோமே...! பத்திரமதிலே பதித்துக் கொடுத்து – இனி பத்திரமெனச் சொல்லி வந்தாய் – அங்கு அமைதிப் படையாக இனத்தை அழித்து அலங்கோலம் ஆக்கி நீ வென்றாய் ! எம்குல பெண்டிரின் கற்பொடு தாலியை எமனாகிப் பறித்தாய் கறையாய் – இப் பாதகம் செய்தோரை பறித்ததும் -எமைப் பாதியில் போட்டாய் குறையாய் ! ................................................(பிறந்தோமே... தளபதி சதியில் கொலைவெறி வலையில் தலைவனை இழந்து தவித்தோம்... எம்மை தரையோடு சுருட்டி அகதியாய் ஆக்கி தமிழ் கரையினில் இறக்கி விட்டோம்..! படைதோற்ற இனமாய் ஏற்றிடவில்லை.. பல தடைபோட்டு சிறகை கட்டி... இங்கு தன்மானம் போக்கி உயிர்மட்டும் தாங்கி தமிழனாய் வாழ்கின்ற வெட்டி..! ...................................................(பிறந்தோமே... சரித்திரம் எழுதும் சரித்திரம் படைத்தவன் சரிந்ததும் சரிந்தது ஈழம்... எம்மை தாலாட்டி வீரத்தில் நீராட்டி ஊட்டிய தலைமகன் இழந்ததே எம்ஈனம்..! சேரன் செங்குட்டுவன் சோழ பாண்டியனும் சேர்ந்து ஆண்ட எம்நாடு... இன்று செந்நாய்கள் கூட்டம் செழுமையாய் தின்று செவி கேட்காமல் ஆடுது பாரு..! ..................................................(பிறந்தோமே... தமிழனின் மண்ணில் சிங்கள நரிகள் தறிகெட்டு ஓடுது பாரு.. எங்கள் தமிழர் கடவுளும் புத்தராய் மாறி தன்மானம் இழக்குது கேளு..! புத்தன் முருகனும் ஏசு அல்லாவும் புறமுதுகை காட்டி ஓடி.. எங்கள் புண்ணிய பூமியில் புகலிடம் தேடி புறப்பட வைத்தார்கள் கூடி..! ......................................................(பிறந்தோமே.. ஈழ கொடி ஒன்று வீசி பறக்காமல் ஈழ தமிழினம் இங்கு ஏது..? நாளை ஈழம் எய்யவே இனியொரு போரில் ஈய்வது எமக்கு பெரும் பாடு..! இந்த இனமானமில்லா இனத்தோடு இனியும் இருப்பதே எமக்கு கேடு..! எம்மை ஈழ கனவோடு வீர மண்ணிலே புதைப்பீர் ஈடில்லை இப்பிறவியின் ஈடு..! .......................................................(பிறந்தோமே...


வழி : அஹமது அலி கருத்துகள் : 0 பார்வைகள் : 88
2
Close (X)
புதிதாக இணைந்தவர்

மேலே